பைபிள், கடிதங்கள்

ஜெ

பைபிள் சார்ந்த உங்கள் காணொளி நன்றாக வந்துள்ளது. தொடக்கத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பற்றி சொல்லியதும், நன்றாக உள்ளது. சுவாமி சிவானந்தரும் ஏசு மீது பக்தி கொண்டவர், 108நாமாவளி எழுதி இருக்கிறார். சத்யானந்தர் பிறந்த தினமும் 25 டிசம்பர் என்பதால், பிஹார் ஆஸ்ரமத்திலும் சிறிய ” Christ kutir’ ஒன்றை அமைத்திருக்கிறோம், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அருமையாக நிகழ்த்துவோம்.

சௌந்தர் (யோக ஆசிரியர்)

ஜெ

நான் உங்கள் பைபிள் வாசிப்பது பற்றிய காணொளியைக் கண்டேன். அதில் தொடக்கத்திலே ஒரு விஷயம் சொல்கிறீர்கள். எந்த ஆன்மிகத்தகுதியும் இல்லாதவர்கள் எப்படி ஆன்மிகவாதிகளுக்கு ஆலோசனை சொல்லவும் கண்டிக்கவும் செய்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். முற்றிலும் உண்மை. இந்துத்துவர்கள் எந்த இந்து மெய்ஞானியையும் இழிவாகப்பேச தயங்கவே மாட்டார்கள், அந்த ஞானிகளின் ஆதரவாளர்கள் இந்துத்துவக்கருத்துக்கு எதிர்ப்பாகப் பேசினாலே போதும்.

இந்த மனநிலை எல்லா மதவெறியர்களிடமும் உண்டு . இஸ்லாமிய மதத்தில் சிறுவர்கள்கூட சூஃபி ஞானிகளை வசைபாடுவார்கள். இந்த மனநிலை காலப்போக்கிலே எல்லா ஆன்மிகத்தையும் அழிக்கும். மதவாதம்தான் உண்மையான ஆன்மிகத்திற்கு எதிரானது. அதை நீங்களும் திரும்பத் திரும்பச் சொல்லிவருகிறீர்கள்

கிருஷ்ணராஜ்

அன்புள்ள ஜெ

வழக்கமாக ‘சமயப்பொறை’ என்ற விஷயத்தையே பைபிள், குர் ஆன் ஆகியவற்றைப் பற்றி பேசும்போது இந்துக்கள் சொல்வார்கள். நீங்கள் அதை வேறொரு கோணத்தில் சொல்கிறீர்கள். மனிதனின் ஞானம் எந்நிலையிலும் முழுமையனாது அல்ல. அது ஒரு பக்கம்தான். மனிதன் அறிந்த எல்லா ஞானத்தையும் இணைத்துத்தான் முழுமையை நோக்கிச் செல்லமுடியும். அதுதான் வேதாந்தத்தின் சமக்ரதர்ஷன் என நினைக்கிறேன்

மாதவ்

முந்தைய கட்டுரைஅறிவைப்பாடுதல் – ஏ.வி.மணிகண்டனின் வகுப்புகள் பற்றி விஷால்ராஜா
அடுத்த கட்டுரைமதங்களும் படிமங்களும்