எனது தத்துவ வகுப்பில் நான் ஓர் உதாரணம் அளித்து அதைத் தத்துவப்படுத்தும்படிச் சொன்னேன். பொதுமைப்படுத்துதல், அருவப்படுத்துதல் என்பது தத்துவக் கல்வியில் ஒரு பயிற்சி.
நான் அளித்த உதாரணம் ,அண்மையில் நிகழ்ந்த வயநாடு நிலச்சரிவு. நிலச்சரிவுக்கான நிலவியல் காரணங்கள், நிலச்சரிவுக்கான வாய்ப்புகள் பற்றி பிரிட்டிஷார் அளித்த எச்சரிக்கைகள், மாதவ் காட்கில் அறிக்கை, நிலச்சரிவுகள் தொடர்ச்சியாக நிகழும் நிலை, எளிய தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் அவர்களின் வாழ்க்கைநிலை, அரசின் நிலைபாடு ஆகிய ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள வெவ்வேறு தளச் செய்திகளை அளித்து அவற்றை தொகுத்து ஒரு தத்துவக் கருத்தாக ஆக்கும்படிச் சொன்னேன்.
அச்செய்தியை அளிக்கக் காரணம், அச்செய்திகள் ஏராளமாக அப்போது பேசப்பட்டுக்கொண்டிருந்தமை. புதியதாக பல கட்டுரைகளைப் படித்து அந்த தொகுப்பைச் செய்யவேண்டியதில்லை.
அப்பயிற்சியில் பங்கெடுத்த ஒரு பெண்மணி எனக்கு எழுதியிருந்தார். அந்தப் பயிற்சி பற்றி பொருளியலில் உயர்கல்வி கற்ற தன் மகளிடம் பேச்சுவாக்கில் சொன்னபோது அவர் கொந்தளித்துவிட்டாராம். ‘நீங்களும் அவரும் நிலச்சரிவில் சாகவில்லை, ஆகவே தத்துவ விளையாட்டு விளையாடுகிறீர்கள்’ என்றாராம். அந்தப்பெண்மணிக்கே தன் மகள் சொன்னது சரி என்று பட்டிருக்கிறது. அது நியாயமான சீற்றம் என தோன்றியது.
நம் சமூக ஊடகங்களில் எந்தப் பொதுப்பிரச்சினைக்கும் உடனே எழுவது இந்தவகையான எதிர்வினைகள்தான். நாம் இதற்குப் பழக்கப்பட்டுவிட்டோம். இது நியாயமான அறச்சீற்றம் என்று எண்ண ஆரம்பித்துவிட்டோம், ‘ஒருத்தன் செத்துக் கிடக்கிறான். அந்நேரத்தில் என்னடா தர்க்கம் பேசிக்கிட்டு?’ என்று கிராமத்தில் கூச்சலிடும் அதே மனநிலைதான் இதுவும். உண்மையில் கல்வி என்பது இதற்கு நேர் எதிரான மனநிலை நோக்கிச் செல்வது. எந்நிலையிலும் ஒன்றின் சாராம்சம் நோக்கிச் செல்வதற்கான முயற்சியே கல்வி. ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்று அதைத்தான் வள்ளுவர் சொன்னார்.
வயநாடு நிகழ்வை ஒட்டி அச்செய்தியை கேள்விப்பட்டதுமே உணர்ச்சிக்கொப்பளிப்பு அடைவதும் அறச்சீற்றம், கழிவிரக்கம் ஆகியவற்றை அடைவதும் சாதாரணமாக அனைவரும் செய்யக்கூடியது. அந்த அறச்சீற்றமோ கழிவிரக்கமோ அச்செய்தியின் ஏதேனும் ஒரு பகுதியை உணர்ச்சிகரமாக ஏற்றுக்கொள்வதன் விளைவு. எல்லா பக்கங்களையும் பார்க்கும்போதுதான் சரியான ஒரு நிலைபாட்டை எடுக்க முடியும். மேலே குறிப்பிட்ட உதாரணத்திலேயே எவரும் பார்க்கலாம். நிலச்சரிவு பற்றி கிடைக்கும் எல்லா தரப்பையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பொதுப்புரிதலுக்காகவே அந்த பயிற்சியில் நாம் முயல்கிறோம். நிலச்சரிவு பற்றிய பிரிட்டிஷாரின் எச்சரிக்கையும் மாதவ் காட்கில் அறிக்கையும் எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை பல்லாயிரம் தொழிலாளர்களின் வாழ்க்கைச்சூழல் மற்றும் கேரளத்தின் பொருளியல் அமைப்பு. உண்மையின் இரண்டு பக்கங்கள் அவை. இரண்டையும் ஒரே சமயம் நோக்கவேண்டுமென்றால் ஒரு பக்கம் நின்று உணர்ச்சிக்கொந்தளிப்பு அடையக்கூடாது. அந்த சாராம்சமான புரிதலை அடைவதற்குப் பெயர்தான் மெய்ப்பொருள் காண்பது. அந்த மெய்ப்பொருள் காண்பதற்கான வழிதான் தத்துவம்.
தத்துவத்தில் உணர்ச்சிக்கொந்தளிப்பு இல்லை. ஏனென்றால் உணர்ச்சிக்கொந்தளிப்பு அறிதலுக்கு எதிரானது. ஏதேனும் ஒரு பக்கம் சார்ந்தது. மிகையுணர்ச்சி தத்துவத்திற்கு எதிரானது. ஒரு செய்தியைச் சார்ந்து உணர்ச்சிக்கொந்தளிப்பு அடைபவர் நியாயமானவர், எல்லா பக்கங்களையும் பார்க்கும் சமநிலை கொண்டவர் சுயநலமி அல்லது கல்நெஞ்சக்காரர் என்பது ஒரு சாதாணமான பார்வை. ஆனால் இந்தியாவில் ஒருவர் எந்த உயர்கல்வி கற்றாலும் இந்தப் பொதுப் பார்வையையே அடையமுடியும். இங்குள்ள கல்வி முறை ஏதேனும் ஒரு கல்வித்தளம் சார்ந்த தகவல்களை மட்டுமே கற்றுக்கொடுப்பதுதான். சிந்தனைக் கல்வி எங்குமே இல்லை. சிந்தனைக் கல்வி என்பது எப்போதுமே தத்துவக் கல்விதான். தத்துவத்திற்கு இங்கே எந்த தளத்திலும் இடமில்லை.
அனைத்தையும் பார்ப்பவர், அதில் இருந்து ஒரு புரிதலை அடைந்தவர் ஆழமான உணர்ச்சியை அடையமுடியும். அது வெறும் கொந்தளிப்பு அல்ல. அது மெய்யை உணர்ந்து உருவாகும் தெளிவின் அடிப்படையிலான உணர்வுநிலை. அவர்தான் அங்கே மெய்யாகவே தேவையான எதையாவது செய்ய முடியும். தத்துவம் இந்தியாவில் இன்று பொதுவாகவே அச்சத்துடனும் ஐயத்துடனும் பார்க்கப்படுகிறது. உணர்ச்சிகரமே கொண்டாடப்படுகிறது. இன்றைய இந்தியாவின் உண்மையான பிரச்சினையே இதுதான், தத்துவத்தின் விளைநிலமாகிய இந்த நாட்டில் இன்று தத்துவமே இல்லை. மாறாக ஐரோப்பாவும் அமெரிக்காவும் தங்கள் கல்வியின் அடிப்படையிலேயே தங்கள் தத்துவத்தைக் கொண்டுள்ளன.
ஒரு விஷயம் நம் மனம் இயல்பாகச் சென்று படியும் இடம் நமக்கு வசதியானதோ, நம் உணர்வுகளுக்குச் சாதகமானதோ, நாம் ஏற்கனவே அறிந்ததோ ஆக இருக்கலாம். நாம் கொள்ளும் மிகையுணர்ச்சி அந்தப்பக்கம் மட்டுமே உண்மை என்று நமக்கு காட்டும். அந்த நம்பிக்கையால்தான் நாம் மூர்க்கமாக எதிர்த்தரப்புகளுடன் மோதுகிறோம். நம் மதவாதிகளும் அரசியல்வாதிகளும் அப்படித்தான் இருக்கிறார்கள். சமூகவலைத்தள விவாதங்கள் அப்படித்தான் நடக்கின்றன. தனிப்பேச்சுகளில் பூசல் உருவாவதும் அப்படித்தான். தத்துவம் என்பது அந்த நிலையை கடக்கும் வழிசுருக்கமாகச் சொன்னால் தத்துவம் என்பது இதுதான். பொதுப்புத்தி சார்ந்த பார்வையில் இருந்து மேலெழுந்து அனைத்தையும் ஒட்டுமொத்தமாகப் பார்ப்பது.