தத்துவம், பெண்கள், கடிதம்

வணக்கம் .

வெள்ளிமலை வகுப்புகள் சிலவற்றிற்கு முன்னரே வந்திருந்தாலும் தத்துவம் மட்டும் நான் தவிர்த்து வந்த ஒன்று. காரணம் இரண்டு.

தத்துவத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்ற எண்ணம். இரண்டாவது உங்கள் மீது இருந்த பயம். ஆனால் நண்பர் ஒருவரால் எனக்கு இந்த வாய்ப்பு அமைந்து வந்தது .

முந்தைய வகுப்புகளுக்கு வியாழன் இரவு சென்னையில் இருந்து கிளம்பி வெள்ளி காலை வகுப்பிற்கு வருவதே வழக்கம். இம்முறை வியாழன் காலையே கிளம்பி இரவு வெள்ளிமலை வந்து உறங்கி காலை வகுப்பிற்கு தயாரானேன். இந்த வகுப்பின் மூலம் நான் கற்றதை இரண்டாகப் பிரிக்கிறேன். முதலாவது, பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட நான் இதுவரை எந்த வகுப்புகளுக்கும் சென்றதில்லை .வெள்ளி மலை வகுப்புகளே ஆரம்பம்.

கற்றலின் விதிமுறைகள் என்று ஆரம்பத்திலேயே நீங்கள் கூறியவை. அதில் உங்களின் கறார்தன்மை. ஆசிரியரிடம் ஒரு கடுமையான சொல்லையும் வாங்கி விடக்கூடாது என்ற கவனம் ஒவ்வொரு கணமும் எனக்கு இருந்தது. அதன் காரணமாகவே வகுப்பை சிரத்தையோடு கவனித்தேன்.

வகுப்பின் மூன்றாவது நாள் இறுதியில் நான் உணர்ந்தது என் வாழ்வில் இத்தனை கவனக்குவிப்போடு நான் எந்த விஷயத்தையுமே செய்ததில்லை என்று. இனி வரும் என் நாட்கள் முழுமையாக இருக்க இந்த மூன்று நாட்கள் அஸ்திவாரம்.

இரண்டாவது தத்துவம் குறித்த என் அறிவு. என் அறிவில் தத்துவம் என்ற ஒன்றே இல்லை.

வாசிப்பின்போதோ, செவி வழியாகவோ தத்துவம் சார்ந்து எது வந்தாலும் அனிச்சையாகவே அவற்றை தவிர்த்து தாண்டி வந்திருக்கிறேன் என்பதை இந்த வகுப்பில் உணர்ந்தேன்.

ஆலயம்,மதம் ,கடவுள்,வழிபாட்டு முறைகள் இவை சார்ந்து என் பிள்ளைகள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் எத்தனை மழுங்கின பதில்களை கூறி இருக்கிறேன் என்று வருந்துகிறேன்.இவை குறித்து ஆர்வம் இல்லாதது மட்டுமல்ல, ஒரு அபிப்பிராயமே இல்லாமல் நானும் இருந்து, குழந்தைகளையும் என் வழியில் வளர்த்தது குறித்து குற்றவுணர்வு கொள்கிறேன்.

இனி தாமதிக்காது இவற்றை சரி செய்வேன் என்ற நம்பிக்கையோடு…

நிர்மலா

குன்றத்தூர்.

 

முந்தைய கட்டுரைஎல்லா தத்துவங்களையும் கற்கலாமா?
அடுத்த கட்டுரைதத்துவக்கல்வி என்பது…