அன்புள்ள ஜெ
பன்னிரண்டு ஆண்டுகளாக நான் இயற்கை உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருகீறேன். எல்லா வேளையும் சமைக்காத தாவர உணவுகள்தான். பெரும்பாலும் தேங்காய், வாழைப்பழம், ஊறவைத்த பருப்புகள், கிழங்குகள் மற்றும் காய்கறிகள். தூய தண்ணீர் தவிர எதையுமே குடிப்பதில்லை. பால் உட்பட விலங்குகளில் இருந்து பெறப்படும் எதனையும் உண்பதில்லை. உப்பு சேர்த்துக்கொள்வதில்லை. உணவின் வழியாகவே நாம் ஆன்ம விடுதலையை அடைய முடியும். இந்த பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளுடன் நாம் தொடர்புகொள்ள உணவால் மட்டுமே முடியும். உணவைப்பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன். நாம் இதைப்பற்றி பேசவேண்டும்
ஆ.ப.சித்தன்
அன்புள்ள சித்தன்,
உணவு குறித்த அக்கறை மிக முக்கியமானது. உடல்நலம் குறித்த கவனம் அது. உண்பவற்றை, உண்பவை நம் உடலில் நிகழ்த்துவனவற்றைப் பற்றி ஓர் அறிவியக்கவாதி, ஒரு ஆன்மசாதகன் எப்போதும் கவனம் கொண்டிருக்கவேண்டும். ஏனென்றால் உடலே நம் கருவி. உள்ளமோ, உணர்வுகளோ, அறிவோ உடலுக்கு கட்டுப்பட்டவைதான். பழுதடைந்த உடல் பழுதடைந்த சிந்தனைகளை உருவாக்கக்கூடும்.
ஆனால் உணவையே எண்ணி, உண்பதையே முழுநேரப் பயிற்சியாகக் கொண்டு வாழ்வதென்பது என் பார்வையில் வீண். உணவு வழியாக மெய்ஞானம் என்பதெல்லாம் நாம் நமக்குத்தேவையானபடி செய்துகொள்ளும் கற்பனைகள் அன்றி வேறல்ல. உணவு நம் வாழ்வின் ஒரு சிறு பகுதியே. தவம் என்று எடுத்துக் கொண்டால்கூட தவத்துக்கான நெறிகளில் ஒன்று மட்டும்தான் உணவு, தவமே அறிவு அல்ல.
அறிவது, அறிந்ததை வாழ்வாக்குவது, அதனூடாக மேலும் அறிவது– அது மட்டுமே அகம்நிறைவதற்கும் ஆன்மவிடுதலைக்குமான வழி. உணவோ அல்லது அதைப்போன்ற ஏதோ ஒன்றோ எல்லாம் என்பது அறிவுக்கு எதிரான குறுக்கல்வாதம்.
உணவையே போதையாகக் கொண்டவர்கள் உண்டு .Food Addiction என்பது இந்நூற்றாண்டின் மிகப்பெரிய போதைகளில் ஒன்று. எந்நேரமும் உணவையே எண்ணிக்கொண்டிருப்பார்கள் இவர்கள்.தங்களை foody என்றெல்லாம் சொல்லிக்கொள்வார்கள். அந்த மனநிலையின் மறு எல்லை நீங்கள் இருப்பது. உண்மையில் எந்த ஒரு விஷயத்திலும் இரு எல்லைகளிலும் ஒரே மனநிலைதான் காணப்படும். நீங்களும் ஒருவகை உணவடிமைதான்.
உணவு ஒரு பொருள், உண்பது ஓர் இகவுலகச் செயல். எந்தப் பொருளையும், எந்த உலகச்செயலையும் ஒரு பித்து என முழுமையாக தழுவிக்கொள்வதென்பது மெய்மையை விட்டு நம்மை விலக்கிக் கொள்வதே. ஏனென்றால் அது நம்மை ஒன்றில் குறுக்குகிறது. மெய்மை என்பது முதல்முழுமையை அறிவது.
ஜெ