நோன்புகள்

 மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

குழுமங்களின் துணைக்கொண்டு இணையம் வழியாக தொடர்பில் இருப்பது தொடர்ந்து பயணிப்பதற்கு உதவியாக இருக்கும் என்று தாங்கள் கூறியது குறித்தும் அத்தகைய குழுமம் எவ்வாறு அமைத்துக் கொள்வது என்றும் சிந்தித்துக் கொண்டிருந்த பொழுதுசுற்றம் இன்றியமையாததா?என்ற தங்கள் காணொளி பார்க்க நேர்ந்தேன். புதிய துறைகளில் அறிவை வளர்த்துக் கொள்வது, வாசிப்பது மற்றும் அதற்கான தேடலில் இருப்பது அத்தகைய குழுமங்களை கண்டடைய உதவும் என்று உணர்கிறேன். காணொளிக்கு நன்றி.

அன்றாட பணியைக் கடந்து அறிவை வளர்த்துக் கொள்ளும் தேடல்களின் வழியாக வாழ்கையை வீணடிக்காமல் முழுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் தங்களிடம் அது குறித்து கேட்க விரும்புகிறேன்.

அனுதினமும் வாசிப்பு மற்றும் பிற துறையில் தேர்ச்சி என்று ஒரு நாளை கட்டமைத்து அதை தொடர்ந்து பின்பற்றுவது கடினமாக உள்ளது. மேலும் அது தடைபட்டு ஒரு இடைவெளிக்குப் பின் மீண்டும் துவங்க சோர்வும் தொடர்ச்சி இல்லாமை குறித்த வருத்தமும் தொற்றிக் கொள்கிறது. இது ஒரு சுழற்சியாகவே நீடிக்கிறது. இதில் இருந்து விடுபட்டு எவ்வாறு முன் செல்வது.

நன்றி.

அன்புடன்,

ஹரிதங்கம்.

அன்புள்ள ஹரிதங்கம

நோன்பு என்ற சொல் நம் மரபில் உண்டு. நோற்றல் என்று இலக்கியங்கள் சொல்லும் செயல். (இவன் தந்தை எந்நோற்றான் கொல்!) மிக முக்கியமான ஒரு சொல். 

ஒரு செயலை பிடிவாதமாக, முழுமையாகச் செய்வதே நோன்பு. ஒரு செயலின் பொருட்டு எல்லா துன்பங்களையும் ஏற்றுக்கொள்வது, எந்நிலையிலும் அதைச் செய்து முடிப்பது. தவம் என்பது நோன்பின் இன்னொரு வடிவம்.

ஒவ்வொரு செயலுக்கும் அதற்கே உரிய தடைகள் உண்டு. நாம் அளிக்கும் அகத்தடைகள். சூழல் அளிக்கும் புறத்தடைகள். இரண்டு தடைகளையும் கடப்பதற்கான முயற்சிதான் நோன்பு. தடைகளை கவனித்து, அவற்றை உடைத்து முன் செல்லுதல்.

நாம் பெறும் ஒவ்வொரு பயனுக்கும் இணையான ஒன்றை நாம் கொடுத்தாக வேண்டும். அப்படிக் கொடுப்பதுதான் நோன்பு.

நோன்புகள் ஒரு செயலின்பொருட்டு, ஒரு விளைவை அடையும்பொருட்டு நாமே நமக்கு விடுத்துக்கொள்பவை. நாம் எடுத்துக்கொள்ளும் உறுதிகள் அவை.

மனிதர்கள் இரு வகை. நோன்புகளை கொள்ளும் திறன் கொண்டவர்கள்அத்திறன் அற்றவர்கள். அந்த திறனில் உள்ள அளவு வேறுபாடுகளின் அடிப்படையிலேயே மனிதர்களின் தரம், அவர்களின் வாழ்க்கையின் வெற்றி ஆகியவை மதிப்பிடப்படுகின்றன. பெருஞ்செயலாற்றுபவர்கள் நோன்புத்திறம் மிக்கவர்கள். ஒருவர் எந்த அளவுக்கு நோன்பு கொள்ள முடியுமோ அந்த அளவுக்கே அவருடைய வெற்றியும் நிறைவும் அமைகிறது.

அறவே நோன்புத்திறன் அற்றவர்கள் சிலர் உண்டு. அனைத்து நோன்புகளையும் முழுமைப்படுத்துபவர்களும் சிலரே. பெரும்பாலானவர்கள் இரண்டு எல்லைகளுக்கு நடுவே வாழ்பவர்கள்.

நாம் ஒவ்வொருவரும் சில நோன்புகளையேனும் உறுதியாகக் கடைப்பிடிக்கிறோம். பெரும்பாலும் அவை குடும்பம் சார்ந்தவை. ஒழுக்கம் சார்ந்தவை. அவற்றை மீறுவதே இல்லை. அதேசமயம் சில நோன்புகளை தொடங்கி விட்டுவிடுகிறோம். 

உதாரணமாக, நாம் நம் குழந்தைகளுக்காகச் செய்யும் சிலவற்றை உறுதியாக செய்கிறோம். இரவு எப்படியென்றாலும் குழந்தைகள் தூங்குவதற்கு முன் வீடு திரும்புபவர்கள் உண்டு. எவ்வளவு பணக்கஷ்டம் என்றாலும் குழந்தைகளுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்பவர்கள் உண்டு. அவை நோன்புகள்தான்

சில ஒழுக்கநெறிகளை கறாராகப் பேணுகிறோம். சிலர் மதக்கடமைகளை அவ்வாறு செய்கிறார்கள். அவை நோன்புகளே. மருத்துவர் சொல்லும் உணவுக்கட்டுப்பாடுகளும் நோன்புகளே. சீனியை தவிர்ப்பது, கொழுப்புணவுகளை தவிர்ப்பது போன்ற பல நோன்புகளை தொடங்கி, உடனே கைவிட்டுவிடுகிறோம்.

நாம் உறுதியாகக் கடைப்பிடிக்கும் நோன்புகள் நமக்கு உண்மையிலேயே முக்கியமானவை. நாம் கடைப்பிடிக்காத நோன்புகள் நமக்கு உள்ளூர முக்கியம் அற்றவை. மதுவை விடமுடியவில்லை என்று சொல்லிப் புலம்புவோர் உண்டு. அடுத்த கோப்பையை அருந்தினால் சாவுதான் என மருத்துவர் சொல்லிவிட்டால் மறுநாள் காலையில் நிறுத்திவிடுவார்கள்.

ஆகவே ஒரு நோன்பை கடைப்பிடிக்க முடியவில்லை என்றால் நாம் அதை உள்ளூர பொருட்படுத்தவில்லை என்றே பொருள். அவற்றை கடைப்பிடிக்கவேண்டும் என்றால் ஒரே வழி அவை நமக்கு உண்மையிலேயே முக்கியமானவை என நம் ஆழுள்ளத்தை நம்பவைப்பதுதான்.

நோன்புகள் செய்தே ஆகவேண்டிய செயல்கள். அவற்றை பிடிவாதமாக விடாப்பிடியாகச் செய்வதொன்றே ஒரே வழி. அதற்கு நம் அகத்தைப் பழக்குவதைத் தவிர குறுக்கு வழிகள் இல்லை.

அப்படி எத்தனை விஷயங்களுக்கு நம் உள்ளத்தை, உடலைப் பழக்கியிருக்கிறோம் என்று பாருங்கள். எழுதுவதும் படிப்பதும் நாம் அப்படி பழக்கிக்கொண்டதுதான். காரோட்டுதல், தட்டச்சிடுதல் என எவ்வளவு. நாம் பயின்ற கல்வி, ஆற்றும் வேலை எல்லாமே நோன்புகள் வழியாக நாம் அடைந்த தகுதிகள்தான். அவையெல்லாம் தேவை என எண்ணினோம். வேறு வழியே இல்லை என உணர்ந்தோம். ஆகவே செய்தோம்.

உடல்நிலை, உளநிலை, இலக்கியம், ஆன்மிகம் சார்ந்த பயிற்சிகளுக்கும் அந்த முக்கியத்துவத்தை அளியுங்கள். கடைப்பிடிக்காவிட்டால் சாவு என்றே நினையுங்கள். சாவு என்றால் உடனே வந்துவிடுவது மட்டும் அல்ல. சலிப்பு, சோர்வு, வெறுமை ஆகியவையும் சாவுதான். மெல்ல மெல்ல துளித்துளியாக நிகழும் சாவு

ஜெ

முந்தைய கட்டுரைஉளக்குவிப்பு- தியானம் பயிற்சி
அடுத்த கட்டுரைஆலயக்கலை :கற்றல் உணர்தல்