அயல்நாட்டில் தத்துவ வகுப்புகள்

ஜெ,

இந்தியாவுக்கு வெளியே புலம்பெயர்ந்து வாழ்பவர்களுக்குத்தான் இந்திய மெய்ஞானம் பற்றிய ஆர்வம் அதிகம். ஏனென்றால் இங்கு வந்ததுமே அடையாளச்சிக்கல்கள் வந்துவிடுகின்றன. நம் மரபு என்ன என்ற கேள்வி வலுவடைகிறது. இந்தியாவில் இருக்கையில் ஒருவகையான மொட்டையான மரபு எதிர்ப்புப்பார்வை மட்டுமே இருக்கும். ஆனால் இங்குவந்ததும் அந்த மனநிலை மாறிவிடும். இங்கே பெரும்பாலானவர்கள் ஏதாவது மரபுசார்ந்த கல்வியை அடைபவர்களே. ஆனால் இங்கே தியான வகுப்புகள், யோக வகுப்புகள் ஆகியவையே மிகுதி. அவற்றை ஒட்டி ஒரு வகையான தத்துவக் கல்வி அளிக்கப்படுகிறது. அந்த தத்துவம் முறையான தத்துவமாக இல்லை. முறையாக தத்துவத்தைக் கற்றுக்கொள்ள எங்களுக்கு என்ன வழி என்பது ஒரு கேள்விக்குறிதான்.

நீங்கள் நடத்திவரும் தத்துவ வகுப்புகளை வெளிநாடுகளில் விரிவாக்கம் செய்ய வாய்ப்புண்டா? நீங்கள் ஆன்லைன் வகுப்புகள் பயனற்றவை என்று சொல்வதை புரிந்துகொள்கிறேன். நானே பல ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அவை எனக்குப் பயனற்றவையாகவே இருந்தன.

எம்.ஆர்.பிரபாகர்

அன்புள்ள பிரபாகர்,

நான் முன்பு ஒரு கடிதத்தில் சொல்லியதுபோல தத்துவக்கல்விக்கு மூன்று அடிப்படைகள் தேவை. வனம், (மலைசார்ந்த இடம்) வாக் (ஆசிரியர் சொல். ஆசிரியர் ஒரு மரபைச் சேர்ந்தவராக இருந்தாகவேண்டும்) விருத்தி (முறைமை, மெதடாலஜி. கற்பதற்கும், பாடங்களிலும் உள்ள சீரான ஒழுங்கமைவு). இவை இல்லாமல் கற்கலாம். தத்துவத்தின் கருத்துக்களை, வரலாற்றை அறிய அது உதவும். அது தத்துவப்பாடம் மட்டுமே. கல்லூரிகளுக்குரியது, தத்துவத்தின் சாரம் அதில் இருப்பதில்லை.

தத்துவம் என்பது ஒருவர் தன் அகத்தே தேடி தானே கண்டடையும் ஒரு தரிசனமாகவே அறுதியாக எஞ்சவேண்டும். அதை அளிக்க முடியாது. அதை ஒருவர் அடைவதற்கான அகச்சூழலை அளிப்பதே தத்துவக் கல்வி. அதற்காகவே முயல்கிறோம். படிப்படியாக அதற்கான ஓர் அமைப்பை உருவாக்க முயல்கிறோம்.

அமெரிக்காவில் பூன் மலையில் ஒரு வகுப்பு இவ்வாண்டு முதல் தொடங்குகிறது. அதை தொடர எண்ணுகிறோம். ஐரோப்பாவிலும் 2025 முதல் தொடங்குகிறோம். ஆண்டுக்கு இரண்டு 3 நாள் முகாமும், தொடர்ச்சியான சில ஆன்லைன் உரையாடல்களும் போதுமானவையாக இருக்கும்.

ஜெ

 

 

முந்தைய கட்டுரைஉண்மைக்கான உணர்புலன்
அடுத்த கட்டுரைஇந்திய ஆலயக்கலை ரசனைப்பயிற்சி