உண்மைக்கான உணர்புலன்

அன்புள்ள ஜெ

நீங்கள் உங்கள் இணையதளத்தில் தொடர்ச்சியாகத் தத்துவக் கல்வி பற்றி சொல்லி வருகிறீர்கள்.  ஏல்லா தத்துவங்களையும் ஒருவர் பயில்வதைப் பற்றி ஒரு காணொளியில் கண்டேன். ஒருவர் எல்லா கோணங்களையும் அறிந்துகொள்கிறார் என்றால் அதில் எது முக்கியம் என அவர் உணர்ந்துகொள்ள முடியும்? அவருக்கு ஒரு நல்ல ஆசிரியரின் வழிகாட்டுதல்தானே அவசியமானது? குருவுக்குச் சமர்ப்பணம் பண்ணி கற்கவேணும் என்றுதானே சொல்லப்பட்டுள்ளது?

காந்தன்

அன்புள்ள காந்தன்,

உண்மையை அறியவும், உண்மைநோக்கிச் செல்வதற்கான வழியைக் கண்டடையவும்,  மனிதனுக்கு மூன்று வழிகள் அளிக்கப்பட்டுள்ளன

அ. தன்னியல்பு. ஒருவருக்கு அவருக்கான ரசனையும், உணார்வுநிலையும், அறிவுத்திறனும் பிறப்பிலேயே வந்துவிடுகிறது. ஒருவருக்கு இசைசார்ந்த நுண்ணுணர்வு இருக்கும். இன்னொருவருக்குத் தர்க்கம் சார்ந்த நுண்ணுணர்வு இருக்கும். இன்னொருவருக்கு மொழித்திறன் இருக்கும். தனக்கு எது சரிவருகிறது என ஒருவர் தானே உணரமுடியும்.

ஆ. வாழ்க்கையனுபவங்கள். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான வாழ்வனுபவங்களும், அதன் விளைவான வினாக்களும் இருக்கும். அவர் தேடும் உண்மைநோக்கிய பயணம் அந்தக் கேள்விகளில் இருந்தன.

இ. ஒருவருக்கு அவருக்கான கலாச்சாரப் பின்புலம் ஒன்று இருக்கும். அதிலிருந்து வந்த படிமங்கள், தொன்மங்கள் ஆகியவை அவருக்கு ஆழமான தொடர்புறுத்தலை அளிக்கும்.

இந்த மூன்று அடிப்படையில் ஒருவர் தனக்கு எது ஒத்துவரும்பாதை என தீர்மானிக்கலாம். எவர் தன் ஆசிரியர் என்றும் தெரிவுசெய்யலாம். நான் கலையிலக்கியத்தில் ஆழ்ந்த ரசனைகொண்ட ஓர் ஆசிரியரை மட்டுமே எனக்கானவராகக் கண்டுகொண்டேன்.

மனிதனுக்கு இயல்பாகவே உண்மையை அறியும் ஒரு உள்ளப்புலன் உண்டு. அதுவே அவனை எப்போதும் உண்மை நோக்கிச் செலுத்துகிறது.

ஜெ

முந்தைய கட்டுரைஒரு கனவு
அடுத்த கட்டுரைஅயல்நாட்டில் தத்துவ வகுப்புகள்