பறவை பார்த்தல் ஒரு தியானம்

ஆசிரியருக்கு வணக்கம்,

பறவை பார்த்தல் கற்றலுக்கு இளைய மகன் சல்மானுடன் போய் வந்தேன்.

சைதன்யாவின் தோழி அன்பரசியின் நட்பு கிடைத்தபின் நான் கடலில் பறவைகளை கவனிக்க தொடங்கினேன். எந்த பறவையையும் அடையாளம் காண முடியவில்லை.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கப்பலில் எங்களுடன் இருபது நாட்கள் பயணித்த பறவைகளை கண்டபின் உங்களுக்கு கடிதம் எழுதி கோரிக்கை வைத்தேன். பறவை பார்த்தல் கற்றல் வகுப்பு ஒன்று வேண்டி. அது தற்போது சாத்தியமானதில் எல்லையில்லா மகிழ்ச்சி.

ஈரோட்டிலிருந்து பிரதீபா,அவரது கணவர்,மூன்று வயது மகன் நித்யனுடன் முதல் முறையாக நிதயவனத்துக்கு செல்லும் அவர்கள் என்னையும்,சல்மானையும் ஈரோட்டிலிருந்து காரில் அழைத்துச்சென்றனர்.

பறவை பார்த்தல் வகுப்பில் மூன்று வயது முதல் பதிமூன்று வயது வரையிலான இருபது குழைந்தகளுடன் பெற்றோர்களும் கலந்துகொண்டோம்.

நண்பர்களான விஜயபாரதியும்,ஈஸ்வர மூர்த்தியும் ஆசிரியர்களாக இருந்து வகுப்பை நடத்தியது உற்சாகமாக இருந்தது.பறவை என்றால் என்ன? அதை அடையாளம் காண்பது எப்படி? நாம் கண்ட ஒரு பறவையை என்ன பறவை என உறுதி செய்வது எவ்வாறு என அடிப்படை விசயங்களை சொல்லித்தந்த பின். பறவை பார்ததலுக்கு அழைத்துச்சென்றார்கள்.

முதல் நாள் மாலை இருள்வது வரை பறவை பார்த்தல் களப்பயிற்சிக்கு போய் வந்தபின் குழைந்தகளுக்கு கதை சொல்லலுடன் இரவு எட்டு மணிக்கு வகுப்பு முடிந்தது.

   இரண்டாம் நாள் அதிகாலை களபயிற்சி ஆறு மணிக்கு என சொன்னார்கள். தூங்கி எழுந்ததும் முதலில் காது கேட்ட ஒலி எந்த பறவையினுடையதாக இருக்கும் என எண்ணம் எழுந்தது.

    அதிகாலை ஐந்தே முக்காலுக்கே குழந்தைகள் தயாராகியிருந்தனர். காலை வேளை பறவை பார்த்தலுக்கு உகந்தது என ஆசிரியர்கள் சொன்னது போல் புதிதாய் நிறைய பறவைகளை கண்டோம். மூன்று நாள்களில் நான்கு முறை களப்பயிற்சிக்கு சென்றோம்.

 வகுப்பில் எங்களுக்கு தெரிந்த பறவைகளை எழுத சொன்னபோது. சட்டென நினைவுக்கு வந்தது பதிமூன்று பறவைகள் தான். காகம்,மைனா தவிர சிறிதாக இருக்கும் அனைத்தும் சிட்டுக்குருவிதான் எனக்கு. நாம் குடியிருக்கும் பகுதியில் நாற்பது வகையான பறவைகளை காண முடியும் என ஈஸ்வரமூர்த்தி வகுப்பில் சொன்னபோது  வியப்படைந்தேன்.

    மூன்று தினம் வகுப்பில் பறவைகளை குறித்த அடிப்படைகளை அறிந்தபின் வெளியில் கேட்கும் சப்தம் எந்த பறவையினுடையது எனும் எண்ணம் தான் வருகிறது. நாம் தூங்கி எழுந்தது மனதில் தொடர்ச்சியாக எழும் எண்ணங்களை கவனித்தால் அதிகமாக எதிர்மறை எண்ணங்களாகவே இருக்கும். பறவை பார்த்தல் கற்றலுக்குப்பின்  எந்த பறவையின் ஒலிஎன மனம் தேடுவதால் வேறு எண்ணங்களின்றி இயல்பாக ஒரு தியான நிலைக்கு செல்வோம் என்பது உறுதி. இங்கே வந்த குழந்தைகள் பாக்கியசாலிகள். கவனசிதறலின்றி  எதையும் கற்க இந்த பயிற்சி உதவும் என்பதில் ஐயமேயில்லை.

    வகுப்பு முடிந்து நாகர்கோவிலில் இறங்கி வீட்டுக்கு செல்லும்போது சல்மான்எவ்ளோ சூப்பரான இடத்த விட்டுட்டு வந்துட்டோம்என்றான். விரும்புபோது வேறு வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என்றேன்.

அவ்ளோ தூரம் போணுமே

அதற்கு சுனிதாஇயற்கையோடு சேர்ந்து கற்க அங்க போனாதானே முடியும்என்றாள்.

   அதிகாலை முதலில் எழும் பறவை கரிச்சான் என அறிந்தேன். வீட்டருகில் இருந்த பறவையை கண்டேன் red vented bulbul, மணிப்புறாவும்,ஆந்தையும் இங்கே மிக அருகிலென கண்டேன்.

   இனிமேல் என் கடல் பயணத்தில் நான் பார்க்கும் பறவைகளை அடையாளம் கண்டு ஆவணபடுத்த முடியும்.

  கொஞ்சம் மரை கழண்ட கேஸு என ஏற்கனவே என் சுற்றத்தார் சொல்வதுண்டு. இனி வெளியில் போகும் காது ஒலியையையும்,கண்கள் பறவைகளையும் தேடுவதை தவிர்க்க இயலாது.

   அஜிதனும்,தன்யாவும் வந்திருந்தார்கள். அஜியிடம் சொன்னேன். “நித்யவனம் இப்போ ஒரு யுனிவெர்சிட்டி ஆயிட்டு, இங்கு கிடைக்கும்  கல்வி வேறெங்கும் கிடைக்காது. இங்கு வருபவர்கள் முழு விருப்பத்துடன் வருகிறார்கள் நீங்க யாரையும் அழைப்பதில்ல, இது அடுத்த தலைமுறைக்கு கொண்டு போறது உங்க கையில இருக்குஎன்றேன்.

  சந்தோசத்துடன் அதை ஆமோதித்தார்கள்.

  பறவை பார்த்தல் கற்றல் எனக்கு ஒரு திறப்பை தந்தது. அதை சாத்தியபடுத்திய உங்களுக்கும். ஆசிரியர்கள் ஈஸ்வர மூர்த்தி,விஜயபாரதி, ஒருங்கிணைப்பாளர் அந்தியூர் மணி,உணவு சமைத்து வழங்கிய தாத்தா,பாட்டிக்கும் நன்றி.

  ஷாகுல் ஹமீது.

முந்தைய கட்டுரைதத்துவம்- நகரங்களில் உள்ளறை வகுப்புகள்
அடுத்த கட்டுரைகலாச்சாரத்தைப் பயில்வது…