தத்துவம்- நகரங்களில் உள்ளறை வகுப்புகள்

அன்புள்ள ஜெயமோகன்,

இந்திய தத்துவ அறிமுக நிகழ்வை எங்காவது நகரத்தில் ஓரிரு அமர்வுகளாக நடத்த வாய்ப்புண்டா? நான் வயதானவன், என்னால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது. ஆனால் நேரில் கேட்டு தெரிந்துகொள்ளவே விரும்புகிறேன். இந்திய தத்துவ வகுப்பை சுருக்கமாக ஒரு மூன்று நாட்கள் மாலையில் மட்டும் இரண்டு மணி நேரமாக வைத்துக்கொள்ளலாம். பொதுவான பங்கேற்புக்குப் பதிலாக ஆர்வம் கொண்ட மிகச்சிலர் மட்டுமே கலந்துகொள்ளும் உள்ளறை அமர்வுகளாக அந்த வகுப்புகளை அமைக்கலாம். அப்போது இன்னும் கூர்மையாக அமையும். வகுப்புகளாகவே நடத்தமுடியும்.

நிகழ்ச்சிகளை திருச்சி அல்லது சென்னையில் வகுப்பை அமைக்கலாம். அல்லது உங்களுக்குப் பிடித்தமான கோவையில் அமைக்கலாம். இந்திய தத்துவம், வேதாந்தம் ஆகியவற்றை விளக்கலாம்.

நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்மிக வகுப்புகளில் ஈடுபாடுகொண்டிருக்கிறேன். பல முக்கியமானவர்களின் வகுப்புகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அவை மிகப்பெரும்பாலானவை சம்பிரதாயமானவை. பழமைவாதம் சார்ந்தவையும்கூட. கொஞ்சநாள் பழகிவிட்டால் புதியவையாக ஏதுமில்லை. அத்துடன் இன்றைக்கு மதச்சொற்பொழிவுகள்தான் உள்ளனவே ஒழிய தத்துவ வகுப்புகள் இல்லை .ஆனால் உங்கள் உரைகளில் இருக்கும் கூர்மையும், தயக்கமில்லாத தெளிவும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்கள் வகுப்புகளை ஓரிரு முறையாவது நகரங்களில் எங்காவது நடத்தினால் நன்று என நினைக்கிறேன். என் கோரிக்கையை பரிசீலிக்கவும்.

ரங்கநாதன என்

அன்புள்ள ரங்கநாதன் அவர்களுக்கு,

நீங்கள் சொன்னபிறகு அதைப்பற்றி யோசிக்கிறேன். தொடர்ச்சியாக, ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் நிகழ்வுகளை அவ்வாறு நடத்த முடியாது. அதற்குரிய புறச்சூழல் இல்லாமல் அத்தகைய கல்வி அமையாது என்பது என் எண்ணம். ‘வனம்’ இல்லாமல் ‘ஞானம்’ இல்லை.

ஆனால் ஆழமான தொடக்கமாக அத்தகைய வகுப்புகளை நடத்தலாம். அதிகபட்சம் 30 பேருக்குள் கலந்துகொள்ளும் உள்ளறை வகுப்புகள். ஒரு நாளுக்கு 3 மணி நேரம். தொடர்ச்சியாக 3 மாலை நேரங்கள் எனில் ஒரு நல்ல அறிமுகத்தை அளித்துவிட முடியும். ஓர் இல்லத்தில், ஒருவர் பொறுப்பேற்று, அதை நிகழ்த்தவேண்டும்.

ஆனால், அதற்குச் சில நிபந்தனைகள் வைக்கப்படவேண்டும். அவ்வாறுதான் கேரளத்தில் வகுப்புகள் நிகழ்கின்றன.

அ. சாதாரணமாக எவர் வேண்டுமென்றாலும் வந்து முடிந்தவரை அமர்ந்திருந்து செல்வதாக அவ்வகுப்புகள் அமையக்கூடாது. எல்லா வகுப்புகளிலும் தொடக்கம் முதல் முடிவுவரை பங்கேற்பாளர்கள் பங்கெடுக்கவேண்டும்.

ஆ. முமுக்ஷுத்துவம் என்னும் மாணவமனநிலை இல்லாமல் கல்வி இல்லை. எவராயினும் வகுப்பில் அந்த மனநிலையில் இருந்தாகவேண்டும். அங்கே தனிப்பட்ட பெருமைசிறுமைகளுக்கு இடமில்லை. அது ஒரு ஆழமான நாடகம், அங்கே அதை நடித்தாகவேண்டும்.

இ. மேற்கண்ட இரு நிபந்தனைகளும் செயல்பெறவேண்டும் என்றால் உயரிய கட்டணம்- அல்லது நன்கொடை பெற்றுக்கொண்டே பங்கேற்பாளர்களை அனுமதிக்கவேண்டும். சும்மா ஒருவரைக் கூட்டி வருவது எல்லாம் அனுமதிக்கப்படலாகாது.

இந்நிபந்தனைகளுடன் கல்வி என்பது தமிழகத்தின் இன்றைய சூழலில் சாத்தியமா என்று தெரியவில்லை. மத அதிகாரம் கொண்டவர்களுக்குச் சாத்தியமாக இருக்கலாம்- தத்துவத்துக்குச் சாத்தியமில்லை என்பதே என் உளப்பதிவு.

நீங்கள் சொல்வது சரி. தத்துவம் வேறு மதம் வேறு. மதம் கருத்துக்களை, வழிகாட்டுதல்களை அளிக்கிறது. அதை நம்பி, கடைப்பிடிக்கலாம், அப்படிச் செய்பவர்களுக்கு அது உதவும். தத்துவம் மாணவர் தானே சிந்திக்க வழிகாட்டுகிறது. தன் விடைகளை தானே கண்டடையச் செய்கிறது. மதம் எளிய உள்ளங்களுக்கானது. சற்றே அறிவுத்திறன் கொண்டவர்களுக்குரியது தத்துவம். அவர்களுக்கு தத்துவம் அளிக்கும் தெளிவையும் கற்றுக்கொள்வதன் பெரும் பரவசத்தையும் மதம் ஒருநிலையிலும் அளிக்காது. சரஸ்வதி தத்துவரூபிணி என்பார்கள். சரஸ்வதியின் பேருருவை தத்துவத்தில் மட்டுமே அறிய முடியும்

ஜெயமோகன்

 

முந்தைய கட்டுரைவனத்தில் ஒரு தவம் – பறவை பார்த்தல் வகுப்பு அனுபவ பதிவு
அடுத்த கட்டுரைபறவை பார்த்தல் ஒரு தியானம்