தவறவிடுபவர்கள்

அன்புள்ள ஜெ

அடுத்த சைவசித்தாந்த முகாம் எப்போது நிகழும் என அறியவிரும்புகிறேன். சென்ற முகாமை தனிப்பட்ட காரணங்களால் தவறவிட்டுவிட்டேன். வைணவ வகுப்பிலும் கலந்துகொள்ள எண்ணி முடியாமல் போய்விட்டது.

சுதாகர்

அன்புள்ள சுதாகர்

இப்படி பல கடிதங்கள் எனக்கு வருவதுண்டு. உண்மையிலேயே ஆர்வத்துடன் விரும்பி வரமுடியாமலான பலர் உண்டு. ஆனால் பெரும்பாலானவர்கள் உண்மையான ஆர்வம் அற்றவர்கள். வரவேண்டும் என விரும்புவார்கள், அவர்களே தடைகளையும் உருவாக்கிக்கொள்வார்கள்.

தத்துவ வகுப்புகள் பெருவாரியான பங்கேற்புடன் நடைபெறவில்லை. குறைவானபேர் வந்தால் அது எங்களுக்கு பொருளியல் இழப்பையே உருவாக்கும். ஆகவே எந்த வகுப்பும் எப்படியும் நிகழும் என்று உறுதியாக இருக்கவேண்டியதில்லை. எல்லாம் வசதியாக அமைந்து வந்தால் கலந்துகொள்ளலாம் என்றும் எண்ணவேண்டியதில்லை.

தொடர்ச்சியாக போதிய பங்கேற்பில்லை என்றால் அந்த வகுப்புகள் நிறுத்தப்படும். ஏனென்றால் எங்கள் இழப்புகளுக்கு ஓர் எல்லை உண்டு. உங்களைப்போன்றவர்கள் அதன்பின் வந்து ‘அடாடா தவறவிட்டுவிட்டேன்’ என மின்னஞ்சல் போடுவீர்கள்.

இவ்வகுப்புகள் இல்லையென்றால் நானறிந்த வரை தமிழகத்தில் எங்குமே இன்று சைவம், வைணவம், மேலைத்தத்துவம், இஸ்லாமிய தத்துவம், கிறிஸ்தவ மெய்யியல் ஆகியவற்றை நவீன முறைப்படி கற்க வேறு இடம் இல்லை. இவ்வகுப்புகள் நின்றுவிட்டால் தமிழகத்தில் அதற்கான வாய்ப்புகள் முழுமையாக இல்லாமலாகிவிடுகின்றன. பிடிவாதமாக நாங்கள் நடத்துவது அதனால்தான். தொடர் இழப்புகளுடன்.

அந்த மனநிலையை எள்ளி நகையாடுபவை உங்களைப்போல நிரந்தரத் தயக்கத்திலிருப்பவர்களின் மின்னஞ்சல்கள். நீங்கள் இதுவரை நான்கு நிகழ்வுகளைப் பற்றி விசாரித்து நான்கிலும் கலந்துகொள்ளவில்லை. உங்கள் மின்னஞ்சலை தடைசெய்கிறேன். உங்களைப்போன்றவர்கள் எங்களுக்குத் தேவையில்லை. மெய்யான ஆர்வம்கொண்டவர்களே போதும்

ஜெ

 

முந்தைய கட்டுரைஅன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்