மூன்றுவகை யோகமுறைகள்

அன்புடையீர்,

நான் யோகம், விபாசனா வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சி செய்து வருகிறேன். யோக நித்ரா பயிற்சி போன்றே விபாசனா பயிற்சியும் உள்ளது. வேறுபாடு மிகக்குறைவு. திரு. செந்தில் பிரபுவுடைய தியானம் குறித்த உரையில் பிரத்யாகாரம் மற்றும் தாரணை பற்றிய விளக்கங்கள் பெரும் பாலும் விபாசனா பயிற்சியுடன் பொருந்து கின்றன. எனவே தியான வகுப்பில் கலந்து கொள்வது குறித்து நான் குழப்ப த்தில் உள்ளேன். இதனை தெளிவுபடுத்தக் கோருகிறேன்.

அன்புடன்,

சிவநாத். பெங்களூர்.

 

அன்புள்ள சிவநாத்

குரு சௌந்தர் நடத்தும் யோக வகுப்புகள் பதஞ்சலி முறைமை சார்ந்தவை. அவற்றில் உடல்சார்ந்த பயிற்சிகளே முதன்மை. தியானம் ஓர் அம்சம் மட்டுமே. பௌத்த விபாசனா வகுப்புகள் முதன்மையாக அகம் சார்ந்தவை. உடல்சார்ந்த பயிற்சிகள் இரண்டாமிடம், அல்லது குறைந்த அளவு மட்டுமே.

இந்த இரண்டு முறைமைகளும் நம் மரபில் நீண்டகாலமாக உள்ளவை. இவை ஒரே மூலம் கொண்டவை, ஆனால் காலப்போக்கில் வளர்ந்தவை. யோகப்பயிற்சியின் தத்துவ அடிப்படை என்பது சாங்கியதர்சனம். விபாசனா பௌத்தம் சார்ந்தது. தத்துவார்த்தமான உள்ளடக்கம் வேறு. அதனடிப்படையிலான வாழ்க்கைப்பார்வையும் வேறு. பயிற்சிமுறைகளில் ஒற்றுமை இருக்கலாம். ஆனால் பிரச்சினை என்ன, தீர்வு என்ன என அவை சொல்பவை வேறுவேறு.

தில்லை செந்தில்ப்ரபு நடத்தும் பயிற்சிகள் இவ்விரு அமைப்புகளில் இருந்தும் நவீனவாழ்க்கைக்கு உரியவை என அவர்கள் நினைப்பவற்றை எடுத்துத் தொகுத்து உருவானவை. அவர்களின் வாழ்க்கைப்பார்வை வேறு

உங்களுக்கு எது உகந்ததோ அதை தெரிவுசெய்யலாம். தத்துவார்த்தமாக எந்தப் பார்வையை ஏற்கிறீர்கள். எந்த பயிற்சி உங்களுக்கு ஏற்புடையது. அதுதான் அளவுகோல். எதுவானாலும் தொடர் பயிற்சிதான் முக்கியம்.

 

ஜெ

முந்தைய கட்டுரைதவறவிடுபவர்கள்
அடுத்த கட்டுரைகூழாங்கல்லில் இருந்து மலைகளை உருவாக்க நான்கு வழிகள்