அன்புள்ள ஜெ,
நலமா? தங்களது அமெரிக்கப் பயணம் நிறைவாக அமைந்ததில் மகிழ்ச்சி. விவேகானந்தர் உரையாற்றிய சிகாகோ அரங்கு குறித்த கட்டுரை மிக அருமை. நீங்கள் சொன்னது போல இன்று அறிவின் நிலம் அமெரிக்கக் குடியரசு தான். பல நூற்றாண்டுகளாக அப்பெருமையைத் தக்கவைத்திருந்த நாம் இன்று பெரும்பாலும் இழந்து விட்டோம். நமது சுவாமிஜியை நமக்கே காட்டியது அவர்களே. இந்திய மறுமலர்ச்சியின் தொடக்கம் அது.
இந்தியாவின் உயிர்நாடி சமயமே என்றும் அதைக் கைவிடும் கணமே நமது அழிவு தொடங்கிவிடும் என்றும் சுவாமிஜி கூறினார். மிக இருண்ட நிலையில் தேசம் உழன்று கொண்டிருந்த போது இடியென நாட்டைக் தீண்டி உயிர்ப்பித்தவர். சுயசார்பு என்பதன் உருவமாகத் திகழ்ந்த அவர், ஆன்ம தத்துவத்தின் மகத்தான செயல் விளக்கத்தைக் காட்டியவர். “உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள். அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா தன்ணுணர்வுடன் செயலில் இறங்குகையில் ஆற்றலும், அறிவும் பெருமையும் இன்னும் எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும் ” என்ற அவரது ஆப்த வாக்கியம் வழுக்கலில் ஊன்றுகோல் என நம்முடன் நிற்கிறது. ஒருவன் இயற்கையை நகலெடுப்பதில் சிறிது வென்றாலும் உலகமே அவனை பாராட்டுவதில் எந்த பொருளும் இல்லை. எவ்வளவு பெரிய இடியையும் எவ்வளவு தொலைவிற்கும் இயற்கையால் செலுத்த இயலும். ஆனால் இயற்கை உணர்வற்றது. ஒரு சிறிய புழுவினை எடுத்துப் பார்த்தால் அதன் துடிப்பையும் உயிர் விசையையும் காணலாம் . நாம் உணர்வுடையவர்கள். நமது குறிக்கோள் இயற்கையை கடந்து செல்வதே அன்று நகலெடுப்பதல்ல என்கிறார். டார்வினின் வலுவுல்லதே நிலைக்கும் கொள்கையை மறுக்கையில் . விலங்கு நிலையில் வலுவானதே வாழும் என்பது சரியென்றாலும் மனித நிலையில் அது தவறான கொள்கை. ஏனெனில். ஒரு உயிர் இன்னொரு உயிராக பரிணமிப்பதன் காரணம், பதஞ்சலியின் சொற்களில் ப்ரக்ருதாப்பூராத் – அதன் இயற்கையின் உள்நிறைவு. மனிதன் தன்னிறைவு கொள்வது பிறரிடம் அடித்துப்பிடுங்குகையில் அல்ல மாறாக பகிர்ந்து கொடுப்பதினாலேயே. இனி மனிதன் ஏன் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்? ஏனெனில் அவன் பெருங்கடலின் சிறுதுளி. தன்னலம் விட்டு விலகுகையில் அவன் முழு மனிதகுலம் அளவிற்கே வளர்கிறான் என்கிறார். அவரது எழுத்துக்கள் இன்றளவும் ஒரு பொற்குவையே.
சிவபெருமானின் அவதாரமே சுவாமிஜி என்பார்கள். இறையருள் இன்னமும் நம்மைக் கைவிடவில்லை என்பதற்கான குறியீடு அவர்.
**
கூட்டு வாசிப்பு என்பதன் ப்ரத்யக்ஷமான அவசியம் கம்பராமாயண அமர்வுகளில் உணர முடிகிறது. நமது அறிதலையும் உணர்தலையும் பன்மடங்கு பெருக்குகிறது. தனி வாசிப்பில் இயல்பாக விடுபடுபவை பொது வாசிப்பு – விவாதங்களில் புதிய பொருள் தருகின்றன.
அமர்வுகளுக்குப் பிறகு நான் எழுதிய சிறு குறிப்புகள் உங்கள் பார்வைக்கு. கம்பராமாயணம் வாசிக்கும்போது கொற்றவையும் வெண்முரசும் இயல்பாகவே மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்து இணைந்து கொள்கின்றன.
இந்த வாரம் நான் எழுதிய குறிப்புகள் இவை.
**
பொருட்களின் கருத்துருவாக்கம் என்பதை விட கருத்துக்களின் ஸ்தூல விளக்கம் என்பது தான் சரியான சொல் என நினைக்கிறேன். நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றும் நமக்கு ஒன்றை உணர்த்துகின்றன – ஏதோ ‘ஒன்றை’ச் சுட்டுகின்றன. . உதாரணமாக ஒரு மலை நிலைபெயரா வலிமையையும் ஒரு தளிர் மென்மையான உயிர்த்துடிப்பையும் வளர்ச்சியையும் சுட்டுகிறது. இனி மராமரம் மலையின் வலிமையையும் செடியின் உயிர்த்துடிப்பையும் ஒருங்கே கொண்டதாகக் கருதலாம் – அதாவது உயிருள்ள அசையும் சிறு மலை. பரதன் மராமரம் வேருடன் வீழ்ந்தது போல விழுந்தான் என்பதை மராமரத்திற்கு ஒப்பான வலிமையையும் மலர்வையும் கொண்ட பரதன் – பெரும்பாலும் எதற்கும் அசைந்து கொடுக்காத பரதன், நிகழ்வின் அழுத்தம் தாங்காமல் – பெரும் புயலில் வேர்கள் அசைக்கப்பட்டு பலவீனமாகி நிலைகொள்ள முடியாமல் விழும் மரம் போல ராமனின் வனவாசம் என்னும் பெருந்துயர் சூறாவளியில் தன் கட்டுப்பாடுகளும் பிடிப்புகளும் அறுந்து போக , உடனடியாக நிதர்சனத்தை எதிர்கொள்ள வழியின்றி விழுகிறான். ஜெமோ வார்த்தைகளில் சொல்வதானால் அது பரதனின் முறிவுக்கணம்.
இனி ஆயுதங்கள் என்பதை அறிவின் புற வடிவம் எனலாம். வெண்முரசின் மிகப்பிரபலமான வரி – ஒவ்வொரு அறிதலும் ஒரு படைக்கலனே. வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களது இயல்பு – குணத்திற்கேற்ப அறிகிறார்கள். அவர்களுடைய அந்த அறிவு அவர்களுக்குரிய படைக்கலமாக ஆகிறது. அதே போன்று அவ்வறிவின் ஆழமும் விரிவும் படைக்கலத்தின் வலிமையையும் வீச்சையும் நிர்ணயிக்கின்றன. காலம் செல்லச் செல்ல அவ்வறிதல்கள் தலைமுறைகளாக கற்கப்பட்டு மேலும் புதிய அறிதல்களுடன் நுண்மை நோக்கிச் செல்கின்றன. . பறக்கும் மரமே வேல் . அடுத்த நிலையில் வெகுதூரம் பறக்கும் வேலே அம்பு. அதற்கடுத்த நிலையில் நுண்ணிய அம்புகள். அதற்கடுத்த நிலையில் பஞ்சபூதங்களின் ஆற்றலை ஏந்தியவை. அதே போல் அம்பெய்யும் திறன் ஒரு கணத்தில் ஒரு அம்பிலிருந்து பல திசைகளில் பல குறிகளை நோக்கி ஒரே கணத்தில் எய்வது என மேம்படுகிறது. எதிரியினை நன்கறிகிறவன் எதிரியின் படைக்கலத்தினை அழிக்கும் முறியினையும் அடைகிறான். ராவணனது படைக்கலம் அசுரர்களது அறிதலுடன் சேர்ந்து அவனது தவவலிமையை – தவத்தினால் விளையும் அதிநுண்ணறிவினையும் பெற்றிருப்பதால் அசுரர்களும் அஞ்சும் வீரியத்துடன் இருக்கின்றன. அதே அதிநுண்ணறிவு அளிக்கும் வலிமை எதிரிகளை தோற்கடித்து துரத்தியோட வைக்க ராவணனுக்கு உதவுகிறது. சுக்ரீவன் எறியும் குன்றினை ஒரே அம்பில் தூளாக்கி அதே கணத்தில் இன்னொரு அம்பினை ஆழ செலுத்த இராவணனால் இயல்கிறது. இனி இராவணனின் பத்து அம்புகளைப் பெற்றும் அசராமல் குன்றினையும் மரத்தையும் எய்கிறான் அனுமன். எவரது ஆயுதமும் தன் அருகிலேயே நெருங்க விடாமல் தாக்கும் விசை கொண்ட ராவணனை அனுமனின் குன்று உரசிச் செல்கிறது. இனி நூறு ‘தெய்வ ஆற்றல்’ வாய்ந்த அம்புகளை விட்டு அனுமனை செயலிழக்க வைக்கிறான் ராவணன். ஆக வெறும் ஒரு அம்பிலேயே சுக்ரீவனை அடிக்கும் ராவணனுக்கு அனுமனை அடிக்க நூறு சிறப்பு அம்புகள் தேவைப்படுகின்றன. இது அனுமனின் தவ வலிமை எனவும் கொள்ளலாம். பிரம்மாஸ்திரத்தையே வெகு எளிதாக கையாண்ட அனுமன் இங்கு வெறும் தெய்வ ஆற்றல் கொண்ட அம்பிற்குத் தடுமாறுகிறான் என்றால் அது தற்செயல் அல்லது ஊழின் விளையாட்டு என்றுதான் சொல்ல முடியும்.
கருத்து நோக்கில் அம்பு ஒரு வீரனுடைய நுண்அறிதலையும் கூர்மையையும் குறிக்கும். வில் அவனது வலிமையையும் வீரத்தையும் குறிக்கும். தேர் அவனது சித்தத்தைக் குறிக்கும். தேரை உடைப்பது என்பது வீரனின் மனம் அமர்ந்திருக்கும் சித்தத்தினை கலைப்பது என்றாகும். ‘செயலின் உச்சம் செயலின்மை’ என்பது போல் திடசித்தம் பெற்றவர்களுக்கு இப்புவியே தேர். முற்றான நுண்அறிதலும் கூர்மையும் கொண்டவர்களுக்கு ஒளிக்கதிரே அம்பாகவும் விழியே வில்லாகவும் மாறும். கீதை தேரில் அமர்ந்திருக்கும் அர்ஜுனனுக்குத் தான் உபதேசிக்கப்பட்டது. உபதேசித்தவன் தேரோட்டி – வழக்கமாக சித்தத்தை காத்து வழிநடத்தும் புத்தி, இங்கு அர்ஜுனனின் தவத்தால் இறைவனே புத்தியாக வந்தான்.
ராவணனின் அம்புகள் தமோகுணத்தின் நுண்வலிமையின் குறியீடு. அச்சத்தையும் அழிவையும் உண்டாக்குபவை. நெறியின்மைக்கு துணைசெய்பவை. ராமனின் அம்புகள் சத்வ குணத்தின் நுண்வலிமையின் குறியீடு. அல்லவை தேய செயலாற்றுபவை.
அனுமன் பிரம்மாஸ்திரத்திற்கு கட்டுப்படவில்லை. கட்டுப்பட்டது போல் நடித்து சமயம் கிடைக்கும் போது கட்டினை தானே விடுவித்துக் கொள்கிறார். ஏனெனில் அவர் பிரம்மத்தை அறிந்து உணர்ந்த யோகி. அவவறிதலின் ஸ்தூல வடிவமான படைக்கலத்தை, அதனை எய்தது எதிரியே என்றாலும் தனது நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார். ஒரு சாதாரண வானரம் பிரம்மாஸ்திரத்தால் தாக்குண்டால் அழிந்தே போய்விடும்.
இங்கு போர்க்களக்காட்சியில் மாற்றி பொருள் கொண்டால் சுவை கெட்டு விடும். மராமரத்தை தலைமுறைகளாக வேரூன்றி வளர்ந்து வரும் ஒரு வம்சம் எனவும் பொருள் கொள்ளலாம். ஆனால் போர்க்களத்தில் அது பொருந்தாது.
**
பாடல் 7161 – நகங்களின் பெரிய வேழ – 7175 – ஆம் குஞ்சரம் அனையான்
உலகமனைத்தும் செய்த பாக்கியத்தின் பயனால் அவதரித்த ராமனின் இளையோனாகிய இலக்குவன், திசை பாகுபாடின்றி விழும் மழைத்துளிகள் போன்று யானை, குதிரை, தேர் மற்றும் காலாட்படை மீது வேறுபாடின்றி அம்புகளைப் பொழிந்தான். இரத்தம் ஆறாக ஓடியது. அவனது ஒரு அம்பு பேரருவி போன்று வீழும் மதத்தினைக் கொண்ட யானைகளின் தலையினைத் துளைத்து , அவற்றின் பின்னால் நின்ற அரக்கர்களின் நெஞ்சங்களைத் துளைத்து வெளியேறி , தேரின் அச்சுக்களையும் முறித்த பிறகும் நில்லாமல் யுகமுடிவு வரையிலும் சென்று கொண்டிருந்தது.
கொடும்பகையினைக் கொண்ட ஒரு மானுடன் நம் அரசரை நெருங்கினால் இழிவுபடுவது நமது வீரமே என்றெண்ணிய பத்து கோடி எண்ணிக்கையிலான அரக்கர் படை , கொடை வள்ளலை மொய்க்கும் இரவலர் போன்று ஆயுதங்களை ஏந்திச் சென்றபடி இலக்குவனனைத் தாக்கினர். அள்ளிக் கொடுக்கும் கை தளராத வள்ளல் போன்று அம்பு மழை பொழிந்த இளையோன், கூற்றுவனும் தன் தொழிலில் சுவையழிந்து வெறுப்புக் கொள்ளும் அளவிற்கு
பேரழிவினை உண்டாக்கினான். அவனது அம்புகளால் அரக்கர்களின் தலை அற்று துண்டாகி உதிர்ந்தது. அவர்களது கால்களும், மலை போன்ற தோள்களும், பொன்னணிந்த மார்புகளும், பற்களும் , வீரக்கழல்களும் மாலைகளும் அற்று துண்டாகி வீழ்ந்தன. அவர்கள் கற்றவையனைத்தும் , அவர்தம் புகழனைத்தும் பெரு வெற்றிகளை ஈட்டித் தந்த அவர்தம் விற்களோடு சேர்த்து துண்டுகளாக்கி அழிக்கப்பட்டன. அரவம் போன்று சீறிப்பாயும் காலாட்படை வீரர்கள் இறந்து விழ, அவர்களின் மீது வரிசையாக குதிரைகளும் யானைகளும் தேர்களும் அதன் மீது முன்னிலை வீரர்களின் தலைகளும் இனியெங்கும் இடம் இல்லாதபடி விழுந்து நிரம்பின. அந்தகனும் அஞ்சும் அவர்களது ஆயுதங்கள் அனைத்தும் தூளாக்கப்பட்டன. குன்றென உயர்ந்து நிற்கும் களிறுகளோ , கம்பீரமான குரகதங்களோ , கொடிய யாளிகளோ சிங்கங்களோ போருக்கு உதவிட கொண்டு வரப்பட்ட மற்றைய உயிரினங்கள் அனைத்தும் உயிரற்றோ அல்லது உயிருக்குப் போராடியபடியோ நிலத்தில் கிடந்தன. இலக்குவன் எவ்வாறு அம்பு விடுகிறான் என்பதையோ அது தாக்கும் இலக்கு எது என்பதையோ காலம் கடந்து நிற்கும் தேவர்களாலும் காண இயலவில்லை. அவர்கள் காண்பது களத்தில் விழும் பிணங்களை மட்டுமே. பெருகியோடும் ரத்த ஆறு கடலில் சேர முடியாவண்ணம் மாமலை போன்று குவிந்திருந்த பிணங்களால் தடுக்கப்பட்டது.இறப்பிற்கு பிறகான அவர்களது மீட்பும் தடைக்குள்ளானது.
தம்முடைய நிலையழிந்து அச்சத்தில் சிதறியோடிய மீதி நிருதர் படையும் இலக்குவனால் கொன்றழிக்கப்பட்டதைக் கண்ட இராவணனின் மனம் சினத்தில் ஊழி நெப்பென பற்றியெரியலாயிற்று. காற்றின் விரைவையுடைய குரகதங்களைக் கொண்ட தேரில் இலக்குவனனை எதிர்கொண்டான். கூற்றுவன் உன்மத்தம் கொண்டது போல இலக்குவன் கண்களில் தீப்பொறி பறக்க, “சீதையை காத்து நின்றிருந்த எனது வலிமையை சூழ்ச்சியால் வென்ற கள்வனே – இன்று உன்னால் என்னிடமிருந்து தப்ப இயலாது” என சீறியபடி ராவணனது பக்கம் நின்ற சேனைகளை சிறிதும் பின்னடி வைக்காமல் கொன்றொழித்தும் , வில்லில் கோர்த்து தொடுப்பதானதும் அனல் பொருந்தியதும் தலையை துண்டிக்கச் செய்யும் வலிமை பொருந்திய கொலை அம்புகளை எய்தான். ஏதோ ஒரு தீச்சொல்லால் அவ்வம்புகள் இலக்கினை எய்தாதவாறு அவற்றை ராவணன் அடித்தொழித்தான். குடாகேசனாகிய இலக்குவன் மேலும் சினம் பற்றியெரிய ஊழிக்கால மழை போல அம்புமழை பொழிந்தான். அறம் பிழைத்து வாழ்பவனாகிய ராவணன், குஞ்சரமாகிய இலக்குவனின் பருவமழைக்கு நிகராக பொழியும் சரமழையினை முற்றாக தடுத்து, மேலும் சரங்களை எடுக்க இயலாதவண்ணம் அவை நிறைந்த புட்டிலினை துண்டித்தான்.
**
இவற்றில் குறைகளோ பிழைபுரிதல்களோ இருந்தாலும், மலை உச்சியில் ஒரு வேரினைப் பிடித்துத் தொங்கியபடி உயிருக்குப் போராடும் ஒருவன் , தற்செயலாக சிந்தி தமது நாவில் விழுந்த தேன் துளியை சுவைப்பது போல், நசுக்கிப் பிழியும் உலகியலுக்கு மத்தியில் அறிதலின் திகட்டும் சுவை வாழ்வையே இனிதாக்குகிறது. விதியின் கொடுஞ்செயல்களுக்கு நடுவில் பாரதம் இத்தனை நூற்றாண்டுகளாக ஏன் அழிந்துபடாமல் நிலைத்திருக்கிறது என்பதும் புரிகிறது.
நிஷதனுக்கு சுவையை அறிமுகப்படுத்திய நளனுக்குப் பாதவணக்கம்.
இ.ஆர்.சங்கரன்