ஜெயக்குமார் அவர்களின் அடுத்த வகுப்பு அறிவிப்பு வந்ததும், ஒரு நண்பரையும் (உடன் படித்தவர்) உடனே பெயர் பதிவு செய்துவிட்டேன்.
இது மூன்றுநாள் வகுப்பு, முந்தைய நாள் பயணம் சேர்த்து நான்கு நாட்கள்.
அடுத்த சிக்கல் என்னவென்றால் அக்கம் பக்கம் என்ன சொல்லிவிட்டுச் செல்வது. எங்காவது இமயமலைப் பக்கம் ஷேத்ராடனம் போல் இருந்தால், சொல்லிக்கொண்டு போவது எளிது. அண்மையில் நீம் கரோலி பாபா பார்க்க என்று சொல்லிவிட்டு ஒருவர் அமெரிக்காவிலிருந்து வந்ததாகச் சொன்னார்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் , மார்க் ஸுக்கர்பர்க் இருவரையும் கூடச் சேர்த்தால் ஒர்க் அவுட் ஆகிவிடும். ஆனால் இது வெள்ளிமலை. ஒருவர் ஜெயமோகன் , மற்றொருவர் ஜெயக்குமார். அண்ணன் தம்பியா , இல்ல அப்பா புள்ளையா என்ற ஒரு கேள்வி வந்தது.
ஒரு கோயிற்கலைக்கென்று ஒரு செமினார் என்று ஒரு சிலரிடம் சொன்னேன்.முகங்கள் நிமிர்ந்தன , விழிகள் அகன்றன, முகக் கண்ணாடிகள் கழன்று கையில் வந்தன. முடிவில் ‘சாமி கும்புடறதா , இல்ல ?’
‘இல்ல , இது எப்படி கும்புடுறதுனு சொல்லிகொடுக்கற ஒரு வகுப்பு‘.
டெம்பிள் ஆர்ட் என்று சொல்லிப்பார்த்தேன். ஹாபியா என்ற கேள்வி வந்தது. இதற்கடுத்து எல்லோரும் மனதிலும் இருப்பது , ஆனால் முகத்தில் சொல்லாமல் விடுவது, இதெல்லாம் எதற்கு , இதனால் என்ன கிடைக்கும் என்பதே. படிப்பதும் இம்மாதிரி கேள்விகளையே எதிர் கொள்கிறது. இதை போதாத நம் மொழியில் அடுத்தவருக்குப் புரியவைத்து குத்துப் பட்டும், குத்துகள் கொடுத்தும் போதிய அனுபவம் இருப்பதால், இப்போதெல்லாம் சிரித்து மௌனமாய் இருந்துவிடுவது.
கிளம்பும் ஒரு வாரத்திற்கு முன் வந்த , எப்படி வரவேண்டும் என்று சொல்லும் மின்னஞ்சல் ‘வந்து பாரு‘ என்ற சில உட்பிரிவுகளுடன் இருந்தது.
பின்னர் ஒரு வாட்ஸாப் குழுவில் எல்லாம் சரியாகிப்போனது. கார்களில் இடம் கொடுத்தார்கள், இடம் வாங்கினார்கள். அப்பாக்களை அழைத்துவரும் பிள்ளைகள், தமிழாசிரியர்கள், ஏற்கனவே அறிந்த எழுத்தாளர்கள் என்று போகும் முன்னரே உள்ளே ஒரு பீதி கிளப்பியது.
கிளம்பும் வியாழன் அன்று கந்தசஷ்டி சூர சம்ஹராம். உடன் வரும் நண்பர் விரதம் முடிக்க வேண்டும், வீட்டில் அம்மா , மனைவி இருவரும்.. ஐந்து மணியளவில் அலுவலகம் முடித்து வந்தேன், இன்னும் சூரசம்ஹராம் ஆரம்பித்திருக்கவில்லை. நேரலையில் சூரசம்ஹாரம் பார்த்தேன் , சூரபத்மனை வதம் செய்யும் முன் பலர் மயங்கி விழுந்துகொண்டே இருந்தார்கள். ‘இந்தப்பா , மேடைக்கு லெப்ட்ல ஆம்புலன்ஸ் வரட்டும், முகத்தை மறைக்காதீங்க, தண்ணி குடுங்க..இந்தப்பா ஸ்ட்ரெச்சர் மேடைக்கு ரைட்ல.’ மேடையில் நேர்முக வர்ணனையின் நடுவில் வதம் நடந்து கொண்டிருந்தது. ‘சாமி உங்க கிட்டதான் இதே வழிலதான் வரும்…சாமி பின்னாடி தயவு செஞ்சு போகாதீங்க…ஒத்துழைப்பு குடுங்க ‘ என்று கூவிய வண்ணம் இருந்தார். சூரனின் மாயை விலக அன்னை சொல்படி சிவனை தவமிருந்து வரம் பெற்ற சூரனையே மாயை வந்து மூடியதைச் சொன்னார். சூரசம்ஹாரம் பசியின் புலன்களின் சம்ஹாரமும் தான். கடைசி நேர விரத முடிப்பு எல்லோரையும் முனையில் நிறுத்தி இருந்தது. இன்னும் ஒரு சில மணித்துளிகளில் கிளம்ப வேண்டும்.கூடியவரை மௌனமாக இருக்க முடிவு செய்தேன். வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். நிம்மதியாய் இருந்தது. லேப்டாப் கிடையாது, மேலே போன் வேலை செய்யாது என்றார்கள். நல்லது.
ஓசூரில் ஒரு நண்பர் இணைந்து கொண்டார். பெங்களூரில் வேலை செய்கிறார், ஓசூரில் வசிக்கிறார். ஜெயமோகன் ஒரு கல்ட் போல் ஆகி வருகிறார் என நினைக்கிறேன், பேச்சு எங்கு போனாலும் அங்கேயே திரும்பி வந்தது.மேட்டூர் தாண்டி அந்தியூர் நுழைந்ததும் , ஒரு விடுதி கண்ணில் பட்டது , இடம் கிடைத்தது. இது பல விடுதிகளில் பல போன் முயற்சிகளுக்குப் பின். புது விடுதி, அருகில் திருமணக் கூடம். அதிகாலை குழல் ரேடியோ சத்தத்துடன் எழுந்ததும், மாப்பிள்ளையை அலங்கரித்து ஒரு பத்துப்பேர் கால் நடையாக அழைத்துக்கொண்டு சென்றனர்.
அந்தியூரில் நிறுத்தி காலை உணவு சாப்பிட நினைத்தோம் . கோவில் முன் பூவிற்ப்பவர் , ஒரு கடை காட்டி அங்கே சாப்பிட வேண்டாம் என்றார். பின்னர் மாடியில் ஒரு மெஸ்ஸை சிபாரிசு செய்தார். ஒரு வீட்டை சேர்களை போட்டு ஒரு மாதிரி ஹோட்டல் போல் ஆக்கியிருந்தனர். ஒரு முப்பது நாற்பது காலெண்டர்கள் தொங்கிகொண்டிருந்தன. அவை இருவகை , தாள்கள் இருப்பவை, சாமிகள் மட்டும் இருப்பவை. மேலும் ஞாயிறு விடுமுறை, இலை எடுக்க வேண்டாம் தேவர், காந்தி, மாலை போட்ட முதலாளி படங்கள். கண்ணாடி தம்ளரில் இரண்டு எலுமிச்சம்பழங்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன், ‘இன்னும் ரெண்டே நிமிஷம்‘ என்றார் கடை முதியவர் . ஒரு முதிய பெண்மணி தட்டில் இரண்டு இட்லியுடன், சாம்பார் சட்னி ஊற்றி மேல்மாடி ஏறி காகத்திற்கு உணவை வைத்துவிட்டு வந்தார். பொங்கல் இட்லி இரண்டு மட்டுமே. இட்லி அருகில் இருந்த டம்ளரில் முக்கால் பங்கு இருந்தது. பொங்கல் பிஸ்சா அளவு இருந்தது. நண்பர்கள் இந்த விலைக்கு இவ்வளவெல்லாம் பெங்களுரில் கிடைக்காது என்றனர். அவர், அளவு குறைஞ்சா சாப்பிட வரமாட்டாங்க என்றார். மல்லிச் சட்னி ஹாஸ்டலையும் , சாம்பார் வீட்டையும் நினைவுபடுத்தியது. செல்லும் வழியில் அதே நபர் நல்லா இருந்திச்சா என விசாரித்தார்.
அந்தியூர் தாண்டி மேலே ஏற ஏற அழுத்திக்கொண்டே இருக்கும் கால்ச்சட்டை பொத்தானை கழற்றியவுடன் ஏற்படும் ஓர் விடுபடும் உணர்வு எழுந்தது. சுற்றியும் மலைமுகடுகள். சலனமே இல்லாத, தகடோ என நினைக்கவைக்கும் ஓர் அணை. குரங்குகள் தென்பட ஆரம்பித்தன. தாமரைக்கரை கடந்ததும் இரு பொதிக் குதிரைகள் கடந்து சென்றன. பள்ளி மாணவர்கள் பள்ளி செல்லக் காத்து இருந்தனர். வெறும் கால்களுடன் பெண்கள் நடந்த வண்ணம் இருந்தனர். ஒரு சிவன் கோவிலில் விழா நடந்து கொண்டிருந்தது. நூறு ரூபாய்க்கு மொய் எழுதியவர்களை கோவில் நிர்வாகக் குரல் மைக்கில் வாழ்த்தி வரிசையாக நன்றி கூறிக் கொண்டிருந்தது.இது வேறு உலகம் என எண்ணிக்கொண்டேன்.
நித்யவனம் உள்ளே நுழையும்பொழுது வகுப்பு துவங்க அரைமணி இருந்தது. காற்றில் இன்னும் சற்று குளிர் இருந்தது. தங்குமிடங்கள் மிக விசாலமாய் ஒன்றை விட்டு ஒன்று தள்ளி அமைக்கப்பட்டிருந்தன. கீழிறங்கி பையை வைத்து வரும்முன் ஜேகே அவர்கள் முன்செல்ல காயத்ரி தேவியையும் , புத்தரையும் அனைவரும் ஒவ்வொருவராக பூப்போட்டு வணங்கினார்கள். இருக்கைகள் நிறைந்து இருந்தன.
நான் இருக்கையில் அமரும்போது ஒளிப்படக்காட்டி ,முழுத்திரையும் நிரப்பிய நீலப் பின்னனியில் வெள்ளை ஒளியாய் நடராஜர் ஆனந்தத்தாண்டவம் காட்டிக்கொண்டிருந்தது. ஆசிரியர் சுருதிப்பெட்டியையும் , மைக்கையும் சரி செய்துகொண்டிருந்ததார். தானாகவே பத்துமணிக்கு ஓசைகள் அடங்கின. மெல்லிய ஒலியில் ‘எல்லாரும் வந்தாச்சா, ஆரம்பிக்கலாமா?’ என்றார்.
மூன்று நாட்களும் பாட்டுடனே வகுப்பு துவங்கியது. பாடல் முடிந்ததும் ஒரு சிறு அமைதி. பின்னர் இளையராஜா மோன நிலையில் பியானோவில் கை வைத்திருக்கும் அவரது டெஸ்க்டாப் ஸ்க்ரீன் சேவர் தோன்றும். முதல் நாள் சுந்தரர் தேவாரம் பித்தா பிறைசூடி, இரண்டாம் நாள் பொன்னார் மேனியனே , மூன்றாம் நாள் திருமழிசையாழ்வார் பாடிய இரு பிரபந்தப் பாடல்கள். இவையெல்லாம் வகுப்பு முடிந்து தேடிக்கண்டு கொண்டேன்.
“பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்–துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .”
“பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே“
கீளார் கோவணமுந் திருநீறுமெய் பூசியுன்றன்
தாளே வந்தடைந்தேன் தலைவாயெனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே
கேளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.”
“நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால்வரைச்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக்கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே“
[திருமழிசை ஆழ்வாருக்கு பதில் கூறும் விதமாகக் குடந்தையில் கிடந்த கோலத்தில் இருந்தபடியே எழுந்த கோலத்தில் காட்சி தருகிறார். இதைத்தான் உத்தான சயனம் என்று படித்தேன்]
“கரண்டமாடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ, வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்!
திரண்ட தோள் இரணியன் சினங்கொள் ஆகம் ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே?!”
[நீர்க்காக்கைகள் விளையாடும் பொய்கையிலே, கரிய பெரிய பனம்பழங்கள் விழுந்து புரள, வாளை மீன்கள் அதைத் தின்ன பாய்ந்து வருகின்றன. இப்படிப்பட்ட திருக்குறுங்குடியில் உள்ள எம்பெருமானே! திரண்ட தோள்களுடன், கோபத்துடன் வரும் இரணியனுடைய உடலை, இரண்டு கூறுகளாகச் செய்த நரசிம்மம் என்பது நீதானோ?]
இதை ஏன் இப்படி விவரித்துச் சொல்கிறேன் என்றால் ஜேகே சிற்ப ஆய்வாளர், இசை ஆர்வலர் என்று PPT –ல் எழுதி இருந்தார். பின்னர் இசையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார் என்று அறிந்தேன். அபாரமான குரல் அவருடையது, இன்று கேட்கும் எந்தக் குரலுக்கும் சளைத்ததில்லை. மூன்றாம் நாள் அவர் நேரம் கருதி மறந்தாலும், மொத்த வகுப்பும் பாடச் சொல்லிக் கேட்டது.
கற்றல் என்பது எப்போதும் நல்லாசிரியர்களை பொறுத்தே இருக்கிறது. ஜேகே அவர் ஆசிரியர்களைச் சொல்லிக்கொண்டே இருந்தார். மிகப் பரந்த வாசிப்பு கொண்டவராக இருந்தார். புத்தகங்களை நாளெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தார். எப்போதும் சிரித்துக்கொண்டே இருந்தார். ஓரிரு வாரங்கள் முன்னரே ஏனோ திருவாசக சிவ புராணம் சித்பவானந்தர் உரை வாசித்திருந்தேன். அதில் சிதம்பரத்தை சித் + அம்பரம் = சித் ஆகாசம் = பெருவெளியைக் குறிப்பது என்று சொல்லியிருப்பார். ஜேகே அவர்களின் ஆரம்பமும் இங்கே தான் இருந்தது. Maya Yavanika , கருந்திரை , சிதம்பர ரகசியம். உருவகிக்க முடியாத பொருளை எப்படிக் காட்டுவது. தினமும் மூலவருக்குப் பின் ஒரு சில மணித்துளிகள் ஒரு மாயயைக் குறிக்கும் கருந்திரை காட்டி விலக்கப்படும். பூஜை முடிவில் தினமும் ஒரு பூ விண்ணை நோக்கி எறியப்படும். இது ஒரு மாபெரும் தத்துவக் குறியீடு, ஆனால் காட்டுவதற்கு ஆள் வேண்டும் , பார்ப்பதற்க்கு கண்கள் வேண்டும். இதைப்போல் பல மெய்திறக்கும் கணங்கள். த்ரிவிக்ரமர் சிற்பத்தில் மூவுலகம் என்ற ஸ்கேல் எப்படி காட்டப்பட்டுள்ளது என்று காண்பித்தார். மாமல்லை பகீரதன் தவமும், பாசுபத அஸ்திரம் பெறுவதும் , கங்கை என்ற நதியும், மேரு என்ற மலையின் பிரம்மாண்டமும் எப்படி தெரிகிறது என்று சொன்னார். தஞ்சைப் பெரிய கோவில் கைலாயத்தை மனதில் வைத்து எழுப்பப்பட்டது என்பதற்கான சிற்பச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் காட்டினார்.
கோயில் பற்றிய இலக்கிய வரலாறு, கோவில்களின் பண்பாட்டு இடம், கோவில்களின் பரிணாம வளர்ச்சி, அவற்றின் கட்டமைப்பு எவ்வாறு நாம் காணும் இன்றைய நிலைக்கு வந்தது, அவற்றின் உறுப்புகள் என்ன, எவ்வாறு அவைகளை அடையாளம் காண்பது, சிற்பங்கள் தனியே நமக்கு உணர்த்துவது என்ன, அதில் பொதிந்த அர்த்தங்கள் உள்ளனவா, அவற்றை எவ்வாறு அடையாளம் காண முடியும், பார்த்து அறிந்து கொள்ளவேண்டிய கோயில்கள் எவை. பல்லவர் , சோழ, பாண்டிய கலைமரபு , அவற்றின் கோயில்கள் என்று இந்த வகுப்பு ஒரு மிகப்பெரிய கோட்டுச் சித்திரத்தையே அளித்தது.
மேலே ஜேகே பாடிய பாடல்கள் எல்லாமும் கோயிலுடன் இணைந்தவை – திருவெண்ணைநல்லூர், திருமழபாடி . திருக்குடந்தை, திருக்குறுங்குடி. திருமழிசையாழ்வாரின் இந்தப் பாட்டுக்குப் பதிலாக , கிடந்த நிலையில் இருக்கும் மூலவர் சிற்பம் தலைக்குக்கீழே கையை வைத்து அவரிடம் பேசும் வண்ணம் இருக்கிறது என்று படித்தபின் அதைப் பார்ப்பது பெரும் கிளர்ச்சியை அளிக்கிறது. இதை அறியவே இந்த ஆசிரியரும் , இந்த மூன்று நாள் வகுப்பும். மீண்டும் ஒருமுறை பாடல் கீழே
“நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால்வரைச்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக்கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே”