அன்புள்ள ஜெ
ராஜகோபாலன் அவர்கள் மரபிலக்கியம் பற்றிய வகுப்பை மலேசியாவில் எடுப்பதன் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த வகுப்புகளை இந்தியாவில் நடத்தலாமே?
செல்வக்குமார்
அன்புள்ள செல்வக்குமார்.
இன்றைய சூழலில் மரபிலக்கியம் கற்பிப்பதற்கான தகுதியாக நான் எண்ணுவது முதன்மையாக நவீன இலக்கியத்தை அறிந்திருத்தல். நவீன இலக்கியம் வழியாகவே மரபிலக்கியம் நோக்கிச் செல்லமுடியும்.
மரபிலக்கியம் மட்டுமே அறிந்தவர்கள் பொழிப்புரை பாணி நோக்கிச் சென்றுவிடுவார்கள். இலக்கியத்தை ஒரு பாடமாக ஆக்கிவிடுவார்கள். இலக்கியத்திலுள்ள வாசகப்பங்கேற்பை தடுத்துவிடுவார்கள். கல்விக்கூடங்களில் மரபிலக்கியம் கற்பிப்பது அதனால்தான் சலிப்பூட்டுகிறது.
ஆனால் இந்த பொழிப்புரை மரபு என்பது ஒரு பிழை அல்ல. கல்விக்கூடங்களில் அப்படித்தான் இலக்கியம் கற்பிக்கப்படவேண்டும். நாம் நம் தொல்லிலக்கியங்களை பத்தொன்பதாம் நூற்றாண்டில் மீண்டும் கண்டடைந்தோம். அவற்றை பொழிப்புரை மரபினூடாகவே புரிந்துகொண்டோம். நம் வாழ்வுடன் இணைத்துக்கொண்டோம். நம் பண்பாட்டுத்தொடர்ச்சியை உருவாக்கிக்கொண்டோம். அது ஒரு மாபெரும் அறிவியக்கம்.
ஆனால் அதுவே இலக்கியரசனைக்கு எதிரானதும்கூட. பொழிப்புரை வாசிப்ப வாசகன் இலக்கியப்படைப்பில் கற்பனைசெய்வதற்கான இடைவெளியை நிரப்பிவிடலாம். அவனுக்கான சொந்தப்பிரதியை உருவாக்க தடையாகலாம். ஆகவேதான் நவீன வாசிப்பு தேவையாகிறது.
இன்றைய வாசிப்பு சமகால வாழ்க்கையுடன் கவிதையை இணைக்கவேண்டும். நவீனக் கவிதைக்கான அழகியலே இன்றையது. அது கவிதைவாசிப்பாக ஆகவேண்டும். அதுவே உகந்தது.
அதைச்செய்யும் ஆற்றல் கொண்டவர்களாகவே மரபின் மைந்தன் முத்தையா , ராஜகோபாலன் போன்றவர்களை தேர்ந்தெடுத்தேன். ராஜகோபாலன் வைணவ இலக்கிய அறிமுக வகுப்பை நடத்துகிறார். உற்சாகமான, ரசனையை அடிப்படையாகக் கொண்ட நவீன வாசிப்புமுறையுடன் பிரபந்தங்களை அணுகும் வகுப்பு அது. மெய்யியலும் அழகியலும் இணையும் புள்ளிகள் கொண்டது
ஜெ.