மூன்றுவகை யோகமுறைகள்
அன்புள்ள ஜெ.சார்.
நண்பர் சிவநாத் என்பவர் எழுதிய கடிதத்திற்கு உங்கள் பதில் படித்தேன். அதில் மேலும் சில விளக்கங்களை/ மறுப்பை சொல்கிறேன்.
சிவநாத் சொல்வதில் முதல் பிழை யோக நித்ராவும், விபாசனாவும் ஒரே போன்றது. என்பது தான். ஒவ்வொரு முகாமிலும் மிகத்தெளிவாகவே, யோக நித்ரா சார்ந்து மூன்று வகுப்புகளில் பேசப்படுகிறது . அவரின் கவனமின்மையால் இதில் பேசப்பட்ட விசயங்களை தவற விட்டிருக்கலாம். கலந்துகொண்ட அனைவரிடமும் என்னுடைய தொடர்பு எண் உள்ளது. இவர் என்னிடம் பேசி தெரிந்து கொண்டிருக்கலாம். அதே போலத்தான் அமலன் சார் அவர்களின் வகுப்பும், விபாசனா தெளிவான பிண்ணனியுடன் தான் இருக்கிறது என பல கடிதங்கள் வாயிலாக நமக்கு தெரிகிறது.
அடுத்ததாக, தில்லை செந்தில் பிரபு அவர்களின் பாடத்திட்டம் இன்றய சூழலுக்கான அவரே வடிவமைத்த கச்சிதமான ஒன்று. கவனமின்மையே அனைத்து சிக்கலுக்கும் காரணம் என்பதால், அவருடைய வகுப்புகள் பெருமளவில் உதவி இருக்கிறது என்பதையும் கடிதங்கள் வழியாக அறிகிறோம். அது விபாசனா போல இருக்கிறது‘ என்பதே தவறன புரிதல்.
ஆகவே, யோக நித்ரா விபாசனா அல்ல. ” அதே போல இருக்கு” என நீங்களாக நினைத்துக்கொள்ளலாம். அவ்வளவு தான்.
ஏனெனில், எங்கள் பதஞ்சலி/சிவானந்த மரபில் யோக நித்ரை 7அடுக்குகளாக 84 வித பயிற்சிகளாக பரந்து விரிந்திருக்கும் ஒரு பாடத்திட்டம் அது. நமது வெள்ளிமலை முகாமில் நாம் ஒரே ஒரு பயிற்சி யை மட்டுமே அறிமுகம் செய்கிறோம். இதை வகுப்புகளிலும் சொல்லி இருக்கிறேன்.
மேலும், பதஞ்சலி முறை என்பது உடல் சார்ந்த பயிற்சி களை முதன்மையாக கொண்டது என்பதையும் நான் மறுக்கிறேன். உடல் சார்ந்த உபாதைகள் மூன்று மாதத்தில் நீங்கும்/ அல்லது குறையும் என்பது பயிற்சி செய்வதின் ஊக்கத்தொகை ( incentive) தானே தவிர அது நோக்கமல்ல. சாங்கியமும்,கீதையும் கூறும் முழுமையானவன் /சமநிலை கொண்டவன். என்பதே இதன் இலக்கு என்பதால், உடலை கருவியாக கொண்டு இதை நிகழ்த்த ஆசன பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
உதாரணமாக, படத்தில் இருப்பவர் சுவாமி சத்யானந்த சரஸ்வதி. இந்த நூற்றாண்டின் தபஸ்விகளில் ஒருவர். இவர் செய்த பெருஞ்செயல்களை இணையத்தில் தேடி தெரிந்து கொள்க. ஒவ்வொரு இருபது ஆண்டுகளாக நான்கு கட்டமாக வாழ்ந்து மரணத்தை சுயவிருப்பமாக தேர்ந்து விடுபட்டு சென்றவர். ஒரு அரசு செய்யவேண்டிய பணிகளை தனி ஒருவராக எய்தியவர். இவர் எழுதிய 100+புத்தகங்கள் தான் இன்று உலகத்தர யோக நிலையங்களின் மூல நூல். யோக நித்ரா எனும் நூலின் ஆசிரியரும் இவரே. இவருடைய உடலை பார்த்து “ஒரு யோகி” க்கு ஏன் இப்படி தொப்பை இருக்கிறது ” என்று கேட்போமானால் அது அறியாமையே.
நண்பர்களுக்கு, மீண்டும் சொல்வது. ஆன்மீகமான ஒன்றாக இல்லாமல் ஒருவர் மரபார்ந்த யோகத்தை கற்றுக்கொள்ளவே முடியாது. (மத/நம்பிக்கை/ சடங்கு/ சார்ந்த ஆன்மீகம் பற்றி நான் சொல்லவில்லை என்பதை அறிவீர்கள்)
வெள்ளிமலை யோக முகாம், ஆம் நேரடியாகவே ஆன்மீக பயிற்சி தான். அது உங்களை “முழுமை” என உணரச்செய்யும் ஆன்மீகம். ஆகவே ஒவ்வொரு முகாமிலும் சொல்வது தான் உங்களை சாதகனாக மாற்றவே இந்த பயிற்சிகள், உடல்,மனம்,உணர்ச்சிகள் சார்ந்த மேன்மை தானாகவே நடக்கும்.
ஆகவே வெள்ளிமலை வரும் நண்பர்கள், மயிலை பார்த்தேன், மலையை பார்த்தேன், குயிலின் சப்தம், காலைப்பனி, திடுக்கிடும் மலைப்பயணம் என்று ஒரு பிக்னிக் அனுபவமாக மாற்றி புரிந்து கொண்டால். இழப்பு உங்களுக்கே.
அடுத்த நூறு ஆண்டுகள் ஆன்மீக வீழ்ச்சியின் ஆண்டுகள். உங்களுடைய ஆன்மீகமான அகத்தளத்தை சென்று தொடாத ஒருவரால், புறப்பொருள்கள் அனைத்தையும் பெரும் வாதையாகவே மாற்றிக்கொள்ள முடியும்.
நம் மலர்தலின் படி நிலையை மரபு காலப்படி வகுத்துள்ளது. இந்த பயிற்சிகள் செய்தால் மூன்று வருடத்தில் என்ன நிகழும்? ஐந்து, ஏழு,பன்னிரண்டு, என ஒவ்வொரு கட்டத்திலும், நிகழக்கூடிய மாற்றங்களை துல்லியமாக சொல்வது மட்டுமின்றி , இதை நம்ப வேண்டாம், “அனுபவித்து அறிந்து கொள்” என்கிறது.
இறுதியாக.
நண்பர்களே, நம்ப வேண்டாம், பிரத்யாஹாரம், தாரணா, என வெறும் வார்த்தைகளை மென்று, கற்பனை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.
உங்களுக்கு என ஒரு பாடத்திட்டத்தை கேட்டுத்தெரிந்து தேர்ந்து கொள்க. ஆசிரியரோடு தொடர்பில் இருங்கள். காலம் முழுமையை அளிக்கட்டும்.
அன்புடன்
செளந்தர்