மதமும் ஞானமும்

அன்புள்ள ஜெ,

நீங்கள் இந்து மதத்தின் தத்துவக் கட்டமைப்பு, அதன் முரணியக்கம் பற்றியெல்லாம் வெளியிட்டிருக்கும் காணொளிகளைத் தொடர்ச்சியாகப் பார்த்துவருகிறேன். என் கேள்வி ஒன்று உண்டு. இங்கே இன்றைக்கு மதம் சார்ந்து உரைகளை அளிப்பவர்கள் உண்டு. மதத்தலைவர்களும் பலர் உள்ளனர். அவர்களுக்கும் இந்த நூல்களை எல்லாம் பயில வாய்ப்பு உள்ளது அல்லவா? பலர் அறிஞர்களும்கூட. ஆனால் அவர்கள் பெரும்பாலும் எந்தவகையான தத்துவப்புரிதலும் இல்லாதவர்களாக மிக எளிமையான பக்தி, மூர்க்கமான நம்பிக்கை ஆகியவற்றைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். பலர் வெறும் சம்பிரதாயங்களையும் ஆசாரங்களையும் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். இன்னும் பலர் மதக்காழ்ப்பை கொட்டுகிறார்கள். இந்துமதத்துக்குள்ளேயே இருக்கும் பிற பிரிவுகளை வசைபாடுகிறார்கள். ஏதாவது சின்ன தரவுகளை எடுத்து வைத்துக்கொண்டு மாறி மாறி முட்டாள் மடையன் என்று கேவலமாக திட்டிக்கொள்கிறார்கள். அத்தனைக்கும் மேலாக அனைவரையும் இயக்குவது சாதிவெறி மட்டுமே என்றும் தோன்றுகிறது. இந்த நூல்களில் இருந்து அவர்கள் கற்றதுதான் என்ன?

 

முகுந்த் கிருஷ்ணா

அன்புள்ள முகுந்த்,

சாமானிய மனிதர்களின் இயல்புகளில் அடிப்படையாக உள்ளது தான்பிறர் என்னும் மனநிலை. தன்னை ஓர் அடையாளத்துடன் பிணைத்துக்கொள்ளுதல். அவ்வடையாளம் அற்ற அனைவரையும் பிறர் என வகுத்துக்கொள்ளுதல். பிறரை வெறுத்தல். தன்னைப்போன்றவர்களுடன் மந்தைசேருதல். இந்த இயல்பு மனிதன் எளிய காட்டுவிலங்காக இருக்கையிலேயே உருவானது.

அதிலிருந்து விலகுவதற்கு பெயர்தான் ஞானம். தன்னை அறிதல். தான் இப்பிரபஞ்சத்தில் எங்குளோம் என அறிதல். பிரபஞ்சத்தையும் தன்னையும் நிகழ்த்தும் அடிப்படைகளை அறிதல்.  அந்த ஞானத்தை அடைந்தவர் எளிய பேதபுத்தியில் இருந்து விடுபடுபவர் ஆகிறார். முழுமைநோக்கிச் செல்லும் பயணத்தில் இருக்கிறார்.

ஆனால் அந்த ஞானம் நூல்கள் வழியாக கிடைப்பது அல்ல. அது மெய்ஞானம் சார்ந்த தேடல்கொண்ட ஒருவருக்கு மட்டுமே அமையும். அவருக்கு உரிய ஆசிரியர் அமைந்தாகவேண்டும். சாமானியர்கள் பலகோடியினருக்கு அவ்விரண்டும் அமைவதே இல்லை. அவர்கள் இங்கே சாமானியர்களின் உலகியல்வாழ்க்கையிலேயேதான் முட்டிமோதுகிறார்கள்.

மதம் இரண்டு அம்சம்கொண்டது. ஒன்று அதன் உலகியல்முகம். அதிகாரம் அதன் இயல்பு. நீங்கள் சொல்லும் சாமானியர்கள் அதனுடன் மட்டுமே தொடர்புடையவர்கள். மதத்தின் இன்னொரு முகம் ஆன்மிகம், ஞானம் என்பது அதனுடன் தொடர்புடையது. அப்பகுதியை அறிந்தோர் சிலரே.

மதத்தின் அதிகாரத்தை விரும்பும் சாமானியர்களுக்கு நூல்கல்வி என்பது எந்த தெளிவையும் அளிப்பதில்லை. அந்த அதிகாரத்தை அடையவும் நிலைநிறுத்திக்கொள்ளவும் கையாளவும் அவர்கள் அந்நூல்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எந்த அளவுக்கு அவர்கள் அறிஞர்களோ அந்த அளவுக்கு அவர்கள் மோசமான அதிகாரவெறியர்களாகவும் இருக்கிறார்கள்.

இது மானுட இயல்பு, அதைக் கடத்தலே ஞானம்.

ஜெ

முந்தைய கட்டுரைமந்தைக்கு வெளியே
அடுத்த கட்டுரைவிவிலிய தரிசனம்