தெய்வ உருவங்கள், கடிதம்

 ஆசிரியருக்கு,

பகுத்தறிவுக்கு சரியான விளக்கம் கொடுத்தீர்கள்.தெய்வங்களை புரிந்து கொள்ள வரலாற்று பகுத்தறிவு ,சமூகவியல்,மானுடவியல் அறிவு தேவை.நான் நாகாலாந்து மாநிலத்தில் ஆசிரியராக பணியற்றிய போது ஒவ்வொரு  பழங்குடி கிராமத்தின் நுழைவாயிலிலும் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு காவல் தெய்வத்தை பார்த்திருக்கின்றேன்.இதை சமூக மானிடவியலில்  (Totem)என்று அழைப்பார்கள்.கிட்டத்தட்ட நமது ஊர் ஆலமூட்டு இசக்கியம்மன் போல. ஆனால் இவையெல்லாம் அந்த கிராமங்களை  அறவழி நடத்தி வருகின்றது.

மகாபாரதமும், பாகவதமும் வேறு வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டவை என்ற உங்களது வரலாற்று பார்வை சிந்திக்க வைக்கிறதுபகவான் கிருஷ்ணனுக்கும்,இந்திரனுக்கும் உள்ள தொடர்பும் ஒரு வரலாற்று நிகழ்வே.நாம் மானுடவியல்(Anthropology) சமூகவியல்(Sociology) போன்ற பாடங்களை சரிவர பள்ளிகளில் கற்கவில்லை.சமூக விஞ்ஞானம் (Social Science)என்ற பெயரில் ஒரு கலவையாக வைத்து சரியான வரலாற்றை மறக்கச் செய்து விட்டோம்..

தர்க்கத்தில் ஒரு  பொய்யை  நிரூபிப்பதற்கு பகுத்தறிவு என்று பெயரிட்டு விட்டோம்.

தெய்வ உருவங்கள் எல்லாம்  மனித விழுமியங்களை கூறும் அடையாளங்கள்.மனித  அறங்களை கூறும் போது எல்லோர் அறிவிலும் சென்று அடைய வேண்டும் என்றே தெய்வ உருவங்கள் உருவாக்கபட்டது.காலப்போக்கில் அது பல உருவங்களாக மாறியது உண்மை.உதாரணம் பாடிகாடு முனுசாமி,சேர்மான் அருணாசல சாமி.

இன்றைய சூழலில் சுடலைமாடனும் முண்டன் சாமியும் வேறு உருவங்களை ஏற்கின்றனர்.சுதையிலிருந்து  கருங்கல்லுக்கும்,உலோக முகத்திற்கும் மாறியாகிவிட்டது.

எது எப்படி எனினும் தெய்வ உருவங்களின் தாத்பரியம் என்ன என்பதை உண்மையறிவு  கொண்டு சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதை கூறியிருப்பது பகுத்தறிவு.

தங்களுடைய இந்திய தத்துவம்,சமூகவியல்,மானுடவியல்  பற்றிய காணொளிகள் மேலும் மெருகேரி வருவதை காணமுடிகிறது.

தா.சிதம்பரம்.

தோவாளை.

முந்தைய கட்டுரையோகப்பயிற்சிக்கு மீண்டும் வருதல்
அடுத்த கட்டுரையோகமும் தூக்கமும்