யோகமும் தூக்கமும்

அன்புள்ள ஜெ

யோகப்பயிற்சி பற்றிய உங்கள் அறிமுகக்குறிப்பில் யோகம் உளம் அடங்குதல் – தூக்கம் ஆகிய இரண்டுக்கும் மிக உதவியானது என்று சொல்லியிருந்தீர்கள். நான் எட்டு ஆண்டுகளாக கடுமையான தூக்கமின்மைப் பிரச்சினையால் அவதிப்படுகிறேன். பல சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறேன். இதுவரை பெரிய அளவில் பயன் ஏதும் இல்லை. நீங்கள் உறுதியாகவே யோகத்தால் பயனுண்டு என்று சொல்லியிருக்கிறீர்கள். அதை உறுதியாகச் சொல்கிறீர்களா?

எம்

யோகம்- உளம் அடங்கல் பயிற்சி

 

அன்புள்ள எம்,

தூக்கமின்மை பிரச்சினை இந்நூற்றாண்டில் பொதுவாக ஓங்கிவரும் நோய். முழுமையான தூக்கமின்மை சிலருக்கே உள்ளது. ஆனால் கணிசமானவர்கள் அதன் ஏதேனும் ஒரு படிநிலையில் நிற்பவர்கள்தான். சிறு அளவில் அப்பிரச்சினை தொடங்கியிருக்கும், அவர்களே அறிந்திருக்க மாட்டார்கள்.

தூக்கமின்மை உருவாவதற்கு ஒரு பரிணாமமுறை உள்ளது. அதை இப்படி விளக்குகிறேன்.

அ. ஒருவரின் வாழ்க்கைமுறையில் சில குறைபாடுகள் உள்ளன, போதாமைகள் உள்ளன. உதாரணமாக அவருடைய வாழ்க்கையில் ஒழுங்கு இல்லை. அவர் உணவுண்ணுதல், வேலைபார்க்கும் பொழுது ஆகியவை சீராக இல்லை. அவர் அமர்ந்திருக்கும் முறை சரியாக இல்லை.

ஆ. வாழ்க்கைமுறைக்கு ஏற்ப உடல் தன்னை மாற்றியமைத்துக் கொள்கிறது. ஒரு கட்டத்தில் உடல் பழகிவிட்டிருப்பதனால் அந்த வாழ்க்கைமுறை இயல்பான ஒன்றாகவே தெரிய ஆரம்பிக்கிறது

இ. ஆனால் உடல் அதன் அமைப்பினாலேயே குறிப்பிட்ட வகையில் மட்டுமே செயல்படும் தன்மைகொண்டது. அந்த ஒழுங்கு சிதறினால் அது நோய்களை உருவாக்கிக் கொள்கிறது. ஒருவர் தன் தூக்கநேரத்தை தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டே இருந்தால் உடல் இயல்பான தூக்கத்தை உருவாக்கிக் கொள்ளும் திறனை இழந்துவிடும். ஒருவர் உணவுண்பதை ஒழுங்கில்லாமலாக்கிக் கொண்டால் செரிமானத் திரவங்கள் இயல்பாக உருவாவதில்லை. விளைவாக உணவு செரிப்பதில்லை. செரிக்காத உணவு மூலநோய் போன்றவற்றை உருவாக்கும்.

ஈ. தூக்கமும் செரிமானமும் ஒன்றுடனொன்று தொடர்புடையவை. செரிமானமின்மை தூக்கமின்மையாக ஆகும். தூக்கமின்மை செரிமானபிரச்சினையாக ஆகும்.  சரியாக உட்காராமலிருந்தாலே செரிமானப் பிரச்சினைவரும், தூக்கமின்மையாக ஆகும்.

உ. இந்த உடல்சிக்கல் உள்ளத்தை பாதிக்கும். உள்ளம் சோர்வு, எரிச்சல் ஆகியவற்றை அடையும். சோர்வும் எரிச்சலுமிருந்தால் நாம் நம் அட்ரினலை தூண்டும் விஷயங்களை நோக்கிச் செல்வோம், நம்மை பரபரப்பாக்கும் விஷயங்களைச் செய்வோம். பொழுதுதெரியாமல் எதிலாவது மூழ்கியிருப்போம். அரிக்கும்போது சொறிவது போன்ற ஒரு செயல். ஆனால் சொறிவதனால் அரிப்பு கூடுகிறது, பரவுகிறது. மிதமிஞ்சிய பரபரப்பை நாம் செயல்வேகம் என எண்ணுவோம். ஆனால் அது எளிய அட்ரினல் தூண்டுதல் மட்டுமே. அது உள்ளத்தை மேலும் சலிப்புக்குத்தான் கொண்டுசென்று சேர்க்கும்.

ஊ. உள்ளம் நம்மை மேலும் மேலும் பரபரப்பை நாடச்செய்யும். தூக்கத்தை ஒத்திப்போடச்செய்யும். தூக்கமின்மை கொண்டவர்களின் விந்தையான சுழற்சி இது. அவர்களின் உடல் நலிந்துகொண்டிருக்கும். ஆகவே அவர்கள் சலிப்புடன் இருப்பார்கள். ஆகவே பரபரப்பை நாடுவார்கள். பரபரப்பால் மேலும் தூக்கமின்மை அடைவார்கள்.

இந்தச் சுழற்சியில் இருந்து வெளிவருவது மட்டுமே ஒரே சிகிழ்ச்சை. இந்தச் சுழற்சியை உடைக்காதவரை எந்த மருந்தாலும் பயனில்லை. அலோபதி மருந்துகள் செயற்கைத் தூக்கத்தை அளிக்கும். ஒருவர் 70 வயது கடந்தவர் என்றால் அதை நாடலாம். வேறுவழிகளை அவர் பயில்வது கொஞ்சம் கடினம்.

மற்றவர்கள் செயற்கைத் தூக்கத்தை மருந்துகள் வழியாக அடைந்தால் அவர்களின் மூளைத்திறன் குறைய ஆரம்பிக்கும். நினைவாற்றல் மங்கும். கவனக்குவிதல் முடியாமலாகும். எங்கும் நிலைகொள்ளாமல் பிரக்ஞை ஒழுகிக்கொண்டே இருக்கும். விழித்திருக்கையில் மனம் தற்செயல்ஒழுக்கு போல சம்பந்தமில்லாத எண்ணங்களும் நினைவுகளுமாக ஓடிக்கொண்டே இருக்கும். அது பெரிய தன்னழிவு. இளைஞர்கள் அவ்வழியை நாடக்கூடாது.

துயிலின்மையை வெல்ல வாழ்க்கைமுறையை உகந்தவகையில் மாற்றிக்கொள்வதே ஒரே வழி. வேறு வழியே இல்லை. அப்படி மாற்றிக்கொள்ள யோகம்- தியானம் மட்டுமே ஒரே வழி. அவை உடலையும் உள்ளத்தையும் ஒரே சமயம் பயிற்சி அளிக்கின்றன. அப்பயிற்சியை விடாப்பிடியாக, முழுமையாக, தொடர்ச்சியாக செய்வதொன்றே வழி. அதாவது மூர்க்கமாக நம்மை நாமே திருப்பிக்கொண்டு இன்னொரு பாதையில் செல்வது மட்டுமே தீர்வு.

அதற்கு கூட்டான யோகப்பயிற்சி, யோகம் செய்யும் ஒரு குழுவுடன் இணைந்திருத்தல், நேரடியான பயிற்சிக்கு முடிந்தவரை அடிக்கடிச் செல்லுதல், நேரடியான ஆசிரியரின் வழிகாட்டல் ஆகியவை உதவும். தனியாக நாமே செய்தால் நீண்டநாட்கள் செய்ய மாட்டோம். அதற்கென ஒரு முகாம் அல்லது சந்திப்பு நிகழ்ந்தால் அவை அனைத்திற்குமே திரும்பத் திரும்பச் செல்லலாம்

தூக்கமின்மை எளிதில் குணமாகாது. குணமாகுமென்றால் யோகம் வழியாக மட்டுமே சாத்தியம்.

தூக்கமின்மை மிக அதிகமாக இருக்கும் ஒரு தொழிற்துறையில் இருபதாண்டுகளாக இருப்பவன் நான். அங்கே மீண்டவர்கள் அனைவரும் இந்த ஒரே ஒரு முறை வழியாக மீண்டவர்கள்தான்

ஜெ

முந்தைய கட்டுரைதெய்வ உருவங்கள், கடிதம்
அடுத்த கட்டுரைஎழுத்தாளர்களின் அறை