அன்புள்ள ஜெ,
தாங்கள் நலம் என நம்புகிறேன் நான் தஞ்சாவூரில் அரசினர் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறேன். நான் 11ம் வகுப்பு படிக்கும் போது என் இயற்பியல் ஆசிரியர் எனக்கு தமிழ் இலக்கியம் வாசிப்பை அறிமுக படுத்தினார் . நான் முதலில் எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் எழுதிய “உடையார் ” புத்தகத்தை படித்தேன் பிறகு சின்ன புத்தகங்கள் படித்து வந்தேன்.
கல்லூரி முதல் ஆண்டில் பெரியாரை பற்றிப் படிக்க ஆசை வந்தது, அதனால் “பெண் ஏன் அடிமையானாள்” என்ற புத்தகத்தைப் படித்தேன். அவ்வாறு பெரியாரை பற்றி படிக்கப் படிக்க சமூகத்தின் மேல் ஒரு சலிப்பு உண்டானது. ஆனால் அதற்கு இணையாக “தேவர்கள் தெய்வங்கள் பேய்கள் ” புத்தகத்தை வாசித்தேன். எனக்கு முதலில் தெய்வங்கள் மேல் ஒரு சலிப்பு இருந்தது இந்த புத்தகத்தை படித்த பிறகு நாட்டுப்புற தெய்வங்களை எப்படி அணுக வேண்டும் என்று கற்று கொண்டேன். உங்களுடைய “அறம்” புத்தகத்தை படித்தேன். அதில் இருந்து இந்த சமூகம் எனக்கு மிகவும் பிடிக்கிறது. உங்களுடைய காணொளிகளை இணைய தளத்தில் பார்ப்பேன் மற்றும் என் இயற்பியல் ஆசிரியர் உங்கள் வெள்ளிமலை வகுப்பை எனக்கு அறிமுகப் படுத்தினார். எந்த வகுப்பை தேர்ந்தெடுக்கலாம் என்று யோசிக்கும் பொழுது இணைய தளத்தில் ஐந்து நிமிட பைபிள் வகுப்பை பற்றிய காணொளியைப் பார்த்து. அதில் நீங்கள் கிறிஸ்தவ இலக்கியம் படிக்காவிடில் உலக வரைபடத்தில் உள்ள ஒரு பகுதி வரலாற்றை இழந்தது போல என்று சொன்னீர்கள். அதில் இருந்து பைபிள் படிக்க ஆர்வம் வந்தது. இதனால் மிகுந்த ஆர்வத்துடன் பைபிள் வகுப்பிற்குச் சென்றேன்.
பயண களைப்பில் முதல் நாள் வகுப்பை கொஞ்ச கடினமாக இருந்தது. போக போக மிகவும் பிடித்திருந்தது. நான் இரண்டாம் நாள் புதிய ஏற்பாடு ஆரம்பத்திற்கு காத்திருந்தேன் ஏசுவின் மலைப்பிரசங்கம் என்னை வெகுவாக ஈர்த்தது. திருப்பாடல்களில் உள்ள காதல் கவிதைகளை மிகவும் என்னை மறந்து கவனித்து கொண்டு இருந்தேன்.
வெள்ளிமலையின் சூழல் கற்பதற்கு ஏற்ற இடமாக இருந்தது. அங்கு வந்த நண்பர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.வகுப்பு முடிந்து கிளம்பும் போது நீங்கள் எழுதிய “மலர்த்துளி” புத்தகத்தையும் வாங்கி வந்தேன். அங்கு இருந்த மூன்று நாட்கள் எனக்கு ஒரு நல்ல அனுபவமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.இதுவரை இப்படி ஒரு கற்றல் அனுபவத்தை நான் பெற்றதில்லை. வாழ்க்கையில் எப்படி நிறைவாக இருப்பது என்பதை கற்றுக் கொண்டேன். அடுத்த படியாக வெண்முரசு நாவலையும் படிக்க ஆரம்பிக்க போகிறேன்.
நன்றி
சுதன் சிதம்பரபுரம் திருநெல்வேலி மாவட்டம்