அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஜெ.
வணக்கம்!
‘நம் வாழ்க்கை பெரிதா சிறிதா?’ என்ற தலைப்பில் தாங்கள் பேசிய வீடியோ பார்த்தேன். Enlightenment as usual…! பல திறப்புகள். அதை பார்த்ததும் பின்வருவதை பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று தோன்றியது. சில வருடங்கள் முன்பு எழுதியது.
*
எங்கள் ஊரில் ஒரு பெட்டிக் கடைக்குள்ளேயே முழு வாழ்க்கையையும் முடித்துக்கொண்ட ஒருவரை பார்த்திருக்கிறேன். தொழில் மட்டுமல்ல, அவரது இரவு தூக்கம், உணவு எல்லாமே அங்கேதான். இயற்கை உபாதைக்கு மட்டும் வெளியே செல்வார்.
எங்கள் பெரியப்பா… பெரிய அறிவாளி, நிறைய படித்தவர்… ஒரு கட்டத்தில் உலகத்தை ஒதுக்கி, மாடியின் இரு அறைகளுக்குள் தனது வாழ்வை வைத்துக்கொண்டார். ஒரு தெருவுக்குள், ஒரு ஊருக்குள் தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டவர்கள், முடித்துக்கொண்டவர்கள் உண்டு. அதே நேரம் பல நாடுகள், உலகத்தின் எல்லைகள், பொருளாதார உயரங்கள் – அடித்தட்டு, அதிகாரத்தின் உச்சம் – கடைநிலை என அனைத்தையும் பார்த்த பெரிய வாழ்க்கை வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். வாழ்க்கை முறை மற்றும் பயணங்களை கருத்தில் கொண்டு, சிறியது பெரியது என பகுப்பது இது. இதில் இது சரி, அது தவறு என்று எதுவும் இல்லை. அவரவர் மகிழ்ச்சி, இயல்பை பொறுத்தது.
வாழ்க்கையின் கால அளவில் பெரியது – சிறியது என எடுத்துக்கொண்டால்… சட்டென ஒரு நொடி விபத்தில், துப்பாக்கி சூட்டில், பாம்புக்கடியில், சில நிமிட மாரடைப்பில் முடிந்துவிட்ட வாழ்க்கைகள் எத்தனை, எத்தனை? குறிப்பான இலக்கின்றி வீசப்பட்ட ஷெல்களால் எந்த அடையாளமும் அற்றுப்போன வாழ்க்கைகள் எத்தனை லட்சம்? முந்தைய நாள் டிக் – டாக் பண்ணிய பள்ளி நண்பனொருவன் மறுநாள் தற்கொலை செய்துகொண்டான். முந்தைய நாள் என்ன… முந்தைய நொடி வரை கூட நடக்கப்போவது தெரியதுதானே? அதே நேரம் ஒரு உயிருக்காக ஊர் முழுக்க டிராபிக் நிறுத்தப்பட்டு, ஒரு இதயம் இன்னொரு உடலை அடைந்து உயிர் கொடுத்ததும் நிகழ்ந்திருக்கிறது.
தஸ்தாயேவ்ஸ்கி, மரண தண்டனை அளிக்கப்பட்டு, சற்று நேரத்தில் கொல்லப்படவிருந்தவர். மூன்று மூன்று பேராக சுட்டுக்கொல்ல ஏற்பாடு. இரண்டாம் மூன்றில் இருந்தார் தஸ்தாயேவ்ஸ்கி. வாழ்க்கை நீளும் என்ற சிறு நம்பிக்கையும் இல்லாமல் இருந்த நிலையில் திடீரென வந்த உத்தரவால் விடுவிக்கப்பட்டு வந்து அவர் எழுதியவை இன்று வரை உலகம் முழுவதும் படிக்கப்படும் நாவல்கள். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் அவர் பெயரில் தெரு, சிலை என அவர் நினைவைப் போற்றும் பல விஷயங்கள் இருக்கின்றன. அங்கு சென்றபோது பார்த்திருக்கிறேன். அதுபோலவே இன்னொன்று… நண்பர் பிரவீன் சொன்னார். MSV சிறு வயதில் ஒரு தற்கொலை முயற்சி கைவிடப்பட்டதால் தப்பித்தவராம். வந்து அவர் நிகழ்த்தியது, நமக்கு அளித்தது… எவ்வளவு!!!
வீரப்பனுடன் காட்டுக்குள் இருந்த சித்தன் – கும்பி தம்பதி உயிரிழக்க எத்தனையோ வாய்ப்புகள் இருந்தன. காட்டுக்குள் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டபோதும், காட்டுக்கு உள்ளேயும், மீண்டும் வெளியே வந்தும், பின்னர் சிறையிலும் என… எத்தனையோ வாய்ப்புகள் (வாய்ப்பு என்று பாசிட்டிவ்-ஆ சொல்லக்கூடாதுதான்). அத்தனை ஆபத்துகள், இத்தனை வருடங்கள்… தாண்டி இன்று சிரிப்போடும் சண்டைகளோடும் ஒரு அழகிய வாழ்க்கை வாழ்கிறார்கள்.
உயிர் ஒரு மெல்லிய இழை போலத்தானா ஜெ.,? அதன் உறுதிதான் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறதா? சில நேரங்களில் அது மிக மிக உறுதியாக… லட்சக்கணக்கானோர் காத்து நிற்க சாலையில் பயணம் செய்து இன்னொரு உடலை அடைந்து உயிர் காத்த அந்த இதயத்தை போல!
சில நேரங்களில் எதிர்பாரா தருணத்தில் சட்டென அறுந்துவிடுகிறது.
வாழ்க்கை சிறியதென்பதும் பெரியதென்பதும் நம் கையில்… அல்லது நம் மனதில்தான் இருக்கிறதா ஜெ.,?
வசந்த் பாலகிருஷ்ணன்
அன்புள்ள வசந்த் பாலகிருஷ்ணன்,
நம் வாழ்க்கை பெரியது, சிறியது என்பது எவர் கணக்கில் என்பதே கேள்வி. பிரபஞ்சத்தின், இயற்கையின் கணக்கில் இது மிகமிகமிகச் சிறியது. நம் உடலுக்குள் பல்லாயிரம்கோடி பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. நம் உடலே ஒரு பூமி, ஒரு முழு இயற்கை. ஒரு சிறிய ஆண்டிபயாட்டிக்கால் நாம் பல லட்சம் பாக்டீரியாக்களை கொல்கிறோம். அது ஒரு பெரிய பூகம்பம் போன்ற அழிவு. நாமும் அவ்வாறு வேறொரு இயற்கையில் ஒரு சிறுதுளி.
நம் வாழ்க்கையை பெரிதாக்கிக்கொள்ளவேண்டியவர்கள் நாம். நமக்கு அது பெரிதாகவேண்டும். உலகம் சுற்றலாம். அறைக்குள் ஒடுங்கலாம். நாம் அதை எந்த அளவுக்கு அர்த்தப்படுத்திக்கொள்கிறோம் என்பதும் நமக்கு அது எவ்வளவு செறிவானது என்பதும்தான் கேள்வி.
நம் உடல் செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லும் ஒரு தனி உயிர்தான். அவற்றுக்கு சுயமான வாழ்க்கை உண்டு. வாழ்க்கையின் எல்லா இன்பதுன்பங்களும், இலக்குகளும் உண்டு. ஆனால் அவை நாம் ஆகவும் இருக்கின்றன, அதை அவை அறிவதில்லை. அதைப்போல நாம் என்னவாக இருக்கிறோம், இங்கே எதைச்செய்கிறோம் என நாம் அறிய முடியாது. நமக்கு அளிக்கப்பட்டுள்ள காலத்தில் இடத்தில் வெளியில் முழுமையாக நிறைவதொன்றையே நாம் செய்யமுடியும். அவ்வண்னம் நிகழ்ந்தால் அது பெரிய வாழ்க்கை.
ஜெ