தானே செல்லும் வழி

வணக்கம் ஜெ,

மேடையுரை பயிற்சி வகுப்பில் தங்கள் பொறுமைக்கும் அறிவின் கருணைக்கும் நன்றி. கிட்டத்தட்ட நூறு உரைகளை பொறுமையுடன் கேட்டீர்கள். உங்களிடம் மேற்கொண்டு இந்த விண்ணப்பத்தை வைப்பது அதீதம் தான்.

என்னுடைய 7 நிமிட உரையை எனது நேர உணர்வை இழந்ததால் முடிக்க முடியாமல் போனது. அது பெரும் ஏமாற்றம் அளித்தது. அன்று இரவு உறக்கம் பாதித்தது. நேற்று மதிப்பெண்(7) அறிவித்தபோது, ‘முடிக்கவில்லை  என்று எழுதியிருக்கிறேன்என்று குறிப்பிட்டீர்கள். ‘முடிக்கவில்லைஎன்ற வார்த்தை முள் போல குத்தியது. முடித்து திருத்தங்கள் வாங்க தான் வந்தது.. இத்தனை தூரம் வந்து முடிக்காமல் செல்வதா?..

நிகழ்வு முடிந்த பிறகு, மாலை 5:30 மணி பேருந்தில்  சென்றால் போதும் என முடிவெடுத்து குரு நித்யா மீட்டிங் ஹாலில் தனியாக காத்திருந்தேன். இருப்பு கொள்ளவில்லை. உரையை மீண்டும் கூர் தீட்டினேன். முழு வாக்கியங்களாக எழுதினேன்.  பேசிய வரை அப்படியே வைத்து, மீத உரையை சுருக்கி, முடிவை மாற்றினேன். எழுதி முடித்ததும் நேரத்துக்குள் பேசி முடிக்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும் போல் இருந்தது. வசமாக, பொம்மன் அய்யா அங்கே வந்தார். வந்தவரிடம் கைபேசியை கொடுத்து அசைக்காமல் படம் பிடுக்கும்படி கேட்டுக்கொண்டு, மேடையேறி, சபை கூடியிருப்பதாய் கற்பனை செய்து பேசினேன்.

பொம்மன் அய்யா தத்ரூபமாக படம் பிடித்தார். உரையின் body பகுதி பேசும்போது என் body மட்டுமே தெரிகிறது; தலையை துண்டித்து விட்டார். பரவாயில்லை. நல்ல வேளையாக முடிவிற்கு வரும்போது மீண்டும் full picture பதிவாகியது. அய்யாவுக்கு நன்றி.

அந்த காணொளியையும், உரையின் எழுத்து வடிவத்தையும் இங்கே இணைக்கிறேன். ஒரு தைரியத்தை வரவழைத்தே இதை உங்களுக்கு அனுப்புகிறேன். தயவு செய்து இதை அதிகப்பிரசங்கித்தனமாக எடுத்துக்கொள்ளாமல் ஒரு முறை காணொளியை பார்த்தோ, உரையை வாசித்தோ உங்கள் பின்னூட்டத்தை அளிக்க வேண்டுகிறேன்.

நன்றி

பாபநாச கார்த்திக்

காணொளி 

———————————————————

https://photos.app.goo.gl/jA8x4pbz9iChs28V7

 உரையின் எழுத்து வடிவம்

வணக்கம் நண்பர்களே,

இன்று பிறக்கும் மனிதக்குழந்தைகள் அனைத்துமே குறைப்பிரசவத்தில் பிறப்பவையே! அனைத்து குழந்தைகளும்.. நாம் உட்பட

பரிணாம வளர்ச்சியின் போது ஆதி மனிதர்கள் இரண்டு கால்களில் நடக்க தொடங்கியதால், அவர்களின் உடல் எடையை தாங்கும் பொறுப்பு நான்கிலிருந்து இரண்டே கால்களுக்கு மாறிய போது அந்த மாற்றத்தை சமன் செய்ய, பெண்களின் இடுப்பளவு குறைந்து குழந்தை பிறப்பு பாதை சுருங்கியது. அதே நேரம் மூளையின் பரிணாம வளர்ச்சி காரணமாக பிறக்கும் குழந்தைகளின் தலைகள் பெரிதாக தொடங்கியது. இப்படி பெரிய தலை சிறிய பாதை வழியே வெளிவர நேர்ந்ததால் பிரசவ கால மரணங்கள் அதிகரித்தன. முழுதாய் வளராத குறைந்த கர்ப காலத்தில் பிறக்கும் குழந்தைகளே உரியிரிழப்பின்றி பிறந்தமையால் பரிணாம வளர்ச்சி நமது கர்பகாலத்தை குறைத்தது. அதனாலேயே மற்ற மிருகங்கள் பிறந்து சில நிமிடங்களிலேயே எழுந்து நடக்கவும் சில நாட்களிலேயே தங்களுக்கான உணவைத் தாங்களே தேடிக்கொள்ளவும் செய்யும் போது மனிதக்குழந்தை  பிறந்து பல வருட காலம் வரையிலும் பெற்றோரை சார்ந்து வாழ்கிறது

Yuval Noah Harari தனது Sapiens என்ற புத்தகத்தில் இந்த கருத்தை முன் வைத்து ஒரு உருவத்தையும் முன் வைக்கிறார். அதாவது ஒரு மனிதக்குழந்தை பிறக்கையில் முழுவதும் முடிவடையாமல் சுடச்சுட உலையில் இருந்து எடுக்கப்பட்ட நெகிழ்வான கண்ணாடி போல வெளிவருகிறது. இந்த நெகிழ்வுத்தன்மையே ஒரே உடலமைப்பு இருந்தும் வெவ்வேறு பழக்கவழக்கங்கள் உடைய மனித கலாச்சாரங்களை சாத்தியமாக்குகிறது.

நண்பர்களே, இப்படியாக பிறக்கும் குழந்தைகளின் நெகிழ் கண்ணாடி போன்ற மனங்களை பாதுகாக்கவும் பண்படுத்தவும் நாம் என்னென்ன செய்யத் தேவையாகிறது?

முதலாவதாக ஒரு குழந்தை வளரும் குடும்பம் இதற்கு ஏதுவாக வேண்டியிருக்கிறது. குழந்தைகள் பார்த்து imitation செய்வதன் மூலமே பெரும்பாலும் கற்கின்றனர். ஆகவே குழந்தைகளால் பார்க்கப்படும் பெற்றோர் தங்கள் குறைகளைக் களைந்து தங்களை பண்படுத்த வேண்டியிருக்கிறதுபல விதமான கலைகளை ஒரு குழந்தைக்கு அறிமுகம் செய்ய அவர்களை வலுக்கட்டாயமாக வகுப்புகளுக்குள் திணிப்பதைக் காட்டிலும் அவர்களின் பெற்றோர்கள் அந்தக் கலைகளில் ஈடுபடுவதன்  மூலமாகவோ, ரசிப்பதன் மூலமாகவோ குழந்தைகள் இயல்பாக அந்த கலைகளுக்கு அறிமுகம் ஆகிறார்கள். ஆக குழந்தை வளர்ப்பென்பது நம்மை நாமே மீண்டும் வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பாக அமைகிறது. நான் இப்படி சில கலைகளை ரசிப்பதற்கும் கற்பதற்கும் தொடங்கியுள்ளேன்முழுமையறிவு வகுப்புகள் உட்பட.

இரண்டாவதாக ஒரு சமூகம் குழந்தை வளர்ப்புக்கு தயாராகிறது. பெற்றோர்கள் மட்டுமே தந்துவிட முடியாததை ஒரு சமூகம் தரமுடியும். அதனாலேயே “It takes a tribe to raise a child” என்று சொல்லப்படுகிறது. பள்ளிக்கூடங்கள் முதல் கலைகள், மற்றும் விளையாட்டுகளுக்கு பிரத்யேக வகுப்புகள் என ஒரு சமூகம் தயாராகிறது. எப்படி குழந்தை வளர்ப்பு பெற்றோருக்கு மீண்டும் வளர வாய்ப்பளிக்கிறதோ அது போலவே ஒரு சமூகத்திற்கும் வாய்ப்பளிக்கிறது. அதனாலேயே நாம் தொடர்ந்து நம் கல்வி முறைகளை மேம்படுத்த முயன்றுகொண்டே இருக்கிறோம்.

ஆக, பரிணாம வளர்ச்சியால் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை நிறை செய்யும் பொருட்டு பெற்றோரும் சமூகமும் தங்களைத் தாங்களே நிறை செய்து கொண்டே செல்கிறார்கள். அப்படியானால் பரிணாம வளர்ச்சி மனிதனின் வளர்ச்சிப் பொறுப்பை மரபணுவிலிருந்து  மனதிற்கு மாற்றிவிட்டதாஉடல் ரீதியான மாற்றங்கள் மரபணு மாற்றத்துக்கு கட்டுபட்டவையேஆனால் மனதிற்கு அந்த கட்டுப்பாடு இல்லையே.. இப்படியாக மனம் விடுபடுவதால் குழந்தைகளாலும் கலைகளாலும் முன்னெடுக்கப்படும் மனரீதியான பரிணாம வளர்ச்சியில் தான் நாம் இருக்கிறோமா?..  ஆதி குழந்தைகளின் மனதை விட இன்றைய குழந்தைகளின் மனம் வேகமாகவும் அதிகமாகவும்  பண்படுகிறது தானே?.. ஒவ்வொரு தலைமுறையும் தன் முந்தைய தலைமுறையை  மிஞ்சுகிறது தானே?.. வளர்ந்தவர்களும் ஆதி மனிதர்களை   விட மனதாலும் அறிவாலும் பண்பட்டவர்களாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது தானே.. அந்த நெகிழ் கண்ணாடி நிரந்தர நெகிழ்வோடு இருக்க குழந்தைகளும் கலையும் வழி வகுக்கலாம் தானே?… அப்படி மனதால் பரிணாம வளர்ச்சி நடந்து மன ரீதியான சூப்பர் ஹியூமன்கள் உருவாகுவார்களா? அவர்களின் தொடர்பு முறை எப்படி  இருக்கும்? அவர்களின் இறையியல் எப்படி இருக்கும்? அவர்களின் சாத்தியங்கள் என்ன?

நன்றி

அன்புள்ள கார்த்திக்

உங்கள் முயற்சி மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு பயிற்சி வகுப்பு என்பது தொடக்கம் மட்டுமே. ஒரு வழிகாட்டல். அந்த வழியில் செல்லவேண்டியது அதன்பின் பயில்பவர்களின் பொறுப்பு. எது தடைக்கல்லோ அதை தன் தனிப்பட்ட முயற்சியால் வென்று முன்செல்லவேண்டியுள்ளது. வகுப்பில் நான் சொன்னதுபோல ஒவ்வொருவருக்கும் அவருக்கான குறிப்பிட்ட தடை இருக்கும். அதைக் கடக்க அவர் கண்டடையும் வழியே அவருடைய தனித்தன்மையாக ஆகிறது. வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைசிங்கப்பூர் இலக்கியக்கூடுகைகள்: அழகுநிலா
அடுத்த கட்டுரைசாமானியர்களிடம் விவாதிக்கலாமா?