சாமானியர்களிடம் விவாதிக்கலாமா?

அன்புள்ள ஜெ

உங்கள் கட்டுரைகளை நான் அவ்வப்போது நண்பர்களுக்கு அனுப்பி வைப்பதுண்டு. பலரும் முகநூல்களில் இருந்து ஓரிரு வரிகள் வழியாக உங்களைப் பற்றி அபிப்பிராயங்களை உண்டுபண்ணி வைத்திருப்பவர்கள். எல்லாவற்றைப் பற்றியும் இப்படி ஒற்றை வரி வைத்திருப்பார்கள். அதைச் சொல்லி எல்லாம் தெரிந்தவர்களாக நடிப்பார்கள். அவர்கள் சொல்வதற்கு பதிலை அனுப்பினால் முழுக்கப் படிக்க மாட்டார்கள். அதிலும் ஓரிரு வரிகளை படித்துவிட்டு அதை விருப்பப்படி விளக்கிக்கொண்டு திரும்பத் திரும்ப ஒன்றையே பேசுவார்கள்.

உதாரணமாக, இணையத்தில் ஒரு விவாதம் நடந்துள்ளது. நீங்கள் அருண்மொழி நங்கையை மணம் செய்ததைப் பற்றிய ஏதோ செய்தியின் கீழே அது கலப்புமணமா என்று எவரோ கேட்டார்கள். ஆம் என்று எவரோ சொன்னார்கள். உடனே ஓர் அடிமுட்டாள் கிளம்பி வந்து ‘ஆனால் சாதிமறுப்பு மணம் அல்ல, ஜெயமோகன் சாதியை விட்டே கொடுக்க மாட்டார்” என்று எழுதினான். மேற்படி நபருக்கு உங்கள் பெயர் தெரிந்திருக்கும், அப்பால் ஒரு வரி வாசித்திருக்க வாய்ப்பில்லை.

அதை என் நண்பர் எனக்கு அனுப்பியிருந்தார். நான் அவருக்கு “ஜெமோ நாராயணகுருவின் மரபில் வந்தவர். நாராயணகுரு சாதி மறுப்பாளர். அவருடைய வழிவந்த நித்ய சைதன்ய யதியும் சாதிமறுப்பாளர்தான், தெரியுமா?” என்று சொல்லி சில கட்டுரைகளை அனுப்பியிருந்தேன். அவர் அதை படிக்கவில்லை. அதே பாட்டு. சரி, படிக்கக் கஷ்டமாக இருக்கும் என உங்கள் வீடியோவை அனுப்பினேன். அதையும் பார்க்கவில்லை. ரொம்ப நீளம் என்று சொல்லி பேசிக்கொண்டிருந்தார். நான் கேட்டேன். “நீங்கள் இப்போது என்னிடம் பேசியது 20 நிமிடம். அந்த வீடியோ 12 நிமிடம்தான். அதைக்கேட்க உங்களால் முடியவில்லை என்றால் உங்கள் பிரச்சினை என்ன?” அவர் கோபித்துக்கொண்டு ஃபோனை வைத்துவிட்டார்.

இப்படிப்பட்ட சூழல்தான் நமக்குச் சுற்றும் நிலவுகிறது. இவர்களுடன் உரையாடுவதே கடினமாக உள்ளது.

 

ஆ. ராம்குமார்

 

அன்புள்ள ராம்,

நீங்கள் குறிப்பிடுபவர்கள் மிகச் சாமானியர்கள், இங்குள்ள சாமானியப்பெருக்கில் துளிகள். ஓர் அறிவுச்சூழலில் எவ்வகையிலும் பொருட்படுத்தத் தக்கவர்கள் அல்ல.

சாமானியர்களின் இயல்புகள் என்ன?

அவர்களால் எதையுமே கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் முடியாது. அவர்களின் கவனம் ஓரிரு வரிகளிலேயே நின்றுவிடும். அப்படி ஒற்றைவரியாக, எளிய முடிவுகளாக சிக்குபவற்றையே அவர்களால் புரிந்துகொள்ள முடியும். எதையும் பலகோணங்கள் கொண்டதாகவோ, சிக்கலானதாகவோ அவர்களிடம் சொல்ல முடியாது. கவனமின்மை என்பது நம் சமூகத்தின் பொதுவான நோய், அதில் இருந்து கொஞ்சமேனும் மீண்டவர்களுக்கு மட்டுமே அறிவியக்க இடம் உள்ளது.

அவர்களால் தனித்து நிற்க முடியாது. ஆகவே ஏதேனும் கும்பலில் சேர்ந்துகொள்வார்கள். அதற்காகவே அவர்கள் கருத்துக்களை தெரிந்துகொள்கிறார்கள். ஏதேனும் ஒரு பக்கச்சார்பு எடுத்து குழுவாகப் பேசினால் அவர்களுக்கு ஒரு பலம் கிடைப்பதாக உணர்கிறார்கள். அவர்களுக்குச் சொந்தக்கருத்தே இருப்பதில்லை, அவர்களின் குழுவின் கருத்தே அவர்களுக்கும். அது கம்யூனிசமோ, இந்துத்துவமோ, திராவிடவாதமோ, தமிழ்த்தேசியவாதமோ– எதுவானாலும் ஒரு குழு தேவை. அவ்வளவுதான்

அவர்களுக்கு உண்மையில் எதிலும் ஆழ்ந்த நம்பிக்கையோ, பிடிப்போ இல்லை. அவர்களின் உள்ளம் நிலையற்றது. மாறிக்கொண்டே இருப்பது. ஆகவே செயற்கையாக எதையேனும் இறுகப்பற்றிக்கொள்கிறார்கள். மூர்க்கமாக அதற்காக வாதாடுகிறார்கள். அதில் வெறியுடன் இருப்பதாகப் பாவனை செய்கிறார்கள். அது அவர்களை உறுதியானவர்களாகக் காட்டும் என நினைக்கிறார்கள். ஆகவே எந்த விவாதத்தையும் மறுப்பார்கள். அதே சமயம் அப்படி மிகையான உறுதியுடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் சட்டென்று நேர் எதிராக மாறிவிடுவதையும் நாம் காணமுடியும்.

அவர்களை வேடிக்கைபாருங்கள், விவாதிக்காதீர்கள்.

ஜெ

 

முந்தைய கட்டுரைதானே செல்லும் வழி
அடுத்த கட்டுரைபேச்சு, சிந்தனை, திருப்புமுனை