நம் குழந்தைகளின் அகவுலகம்

செயல்வழியாகக் கற்றலைப்பற்றி அண்மைக்காலத்தில் உலகெங்கும் கல்வியாளர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ‘வகுப்பறைகளிலிருந்து வெளியே’ என்று இந்தக்கல்வி சொல்லப்படுகிறது. தமிழகத்து கல்வித்துறைக்குள் அதைக்கொண்டு வருவதற்கான சில முயற்சிகளை புதிய கல்வித்துறை முறை வழியாக உருவாக்கிப் பார்த்தார்கள். (DPEP) ஆனால் அது இங்குள்ள கல்வி அமைப்புகளில் அவ்வளவு எளிதானதல்ல. ஒன்று, இங்குள்ள மாணவர்கள் எண்ணிக்கை மிக அதிகம்,ஆசிரியர் எண்ணிக்கை மிகக்குறைவு. ஒரு வகுப்பறையில் கண்முன் மாணவர்களை அமரவைத்தாலொழிய அந்த மாணவர்கள் மேல் கட்டுப்பாடும், அனைவரிடமுமான தொடர்பும் ஆசிரியருக்கு சாத்தியமில்லை. இத்தனை எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கையில் வகுப்பறைக்கு வெளியே என்ற கல்விக்கு சாத்தியமில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. 

அதே போல இன்னொன்று வகுப்பறைக்கு வெளியே கல்வி நிகழும்போது அங்கு அறிதல் நிகழ்கிறது, நுண்ணுணர்வு உருவாகிறது சுயகற்பனையும் சுயசிந்தனையும் படிப்படியாக வளர்கின்றன. இவற்றின் அடிப்படையில் ஒரு மாணவருடைய தகுதி மதிப்பிடப்பட்டு அவருக்கு மேற்படிப்புக்கோ தொழிலுக்கோ வாய்ப்பிருக்குமென்றால்தான் அக்கல்வி  பயனுள்ளது. நேர்மாறாக இங்கே அனைத்துத் தகுதிகளும் சில தேர்வுகளில் மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே முடிவு செய்யப்படுகின்றன. ஆகவே அந்த தேர்வை ‘உடைப்பது’ மட்டும்தான் இன்றைய கல்வியின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது. Cracking என்ற வார்த்தையைத்தான் உண்மையிலேயே பயன்படுத்துகிறார்கள். ஒரு வலுவான கோட்டையை உடைத்து அவ்விரிசல் வழியாக உள்ளே நுழைவதுதான் அது.

இந்திய ஆட்சிப்பணி தேர்விலிருந்து நீட் தேர்வு வரைக்கும், ஐஐடி தேர்விலிருந்து ஐந்தாம் வகுப்பு நுழைவுத்தேர்வு வரைக்கும் இவ்வாறு கடுமையான போட்டிகளைச் சார்ந்து ஒரு கல்வி இருக்கும்  போது அதற்கு தேவையானது வகுப்பறையில் மாணவர்களை உட்காரவைத்து, அவர்களுக்கு விலங்குகளுக்கு அளிப்பது போல மூர்க்கமான நீண்டகால பயிற்சிகளை அளிப்பது மட்டும்தான் .அந்தத் தேர்வுக்குத் தேவையான தனிப்பயிற்சியை பெற்ற மாணவர் எத்தனை அறிவும் சிந்தனையும் கொண்டிருப்பவர் என்றாலும் பிறரை உள்ளே விடாமல் தடுத்துவிட முடியும் என்னும்போது வகுப்பறைக்கு வெளியே கல்வி என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. 

கேரளத்தில் டி.பி.இ.பி சார்பில் ஆசிய வங்கியின் நிதியுதவியுடன் வகுப்பறைக்கு வெளியே என்னும் கல்விமுறை இருபதாண்டுகளுக்கு முன் அறிமுகமாயிற்று. அதைக் கேலி செய்து ஶ்ரீனிவாசன் எடுத்த ஒருபடமும் வெளியானது. இங்கிலீஷ் மீடியம். டிபிஇபி என்றால் ‘தரித்திர பிள்ளைகள் எப்படியாவது படிச்சுக்கட்டும்’ என்று அதில் ஶ்ரீனிவாசனின் கதாபாத்திரம் சொல்கிறது. அந்தக் கல்விமுறை கேரளத்தில் பொதுவான கல்வியில் ஒரு பெரும் எதிர்மறை விளைவுகளை உருவாக்கியது. கேரளத்தின் இளைஞர்கள் பொறியியல் மருத்துவம் முதலியவற்றில்  மாணவர்கள் இந்திய அளவிலான போட்டித்தேர்வுகளில் வெல்லமுடியாமலாயிற்று. அந்தப் போட்டித்தேர்வுகளுக்கான மனநிலையும் அவர்களிடம் இல்லாமல் போய்விட்டது.

ஆனால் ஒட்டுமொத்தமாக அது கேரளத்தில் ஒரு பின்னடைவை உருவாக்கியதா என்றால் அதுவும் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் இன்று இந்தியாவிலுள்ள எந்த ஒரு இதழியல் அமைப்பிலும் அதிகமான மலையாளிகளே இருப்பதை பார்க்கலாம். ஏனெனில் மொழிக்கல்வி அங்கு ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. அதுபோன்று வெவ்வேறு அறிவுசார் துறைகளில் மலையாளிகளின் பங்கு ஒப்புநோக்க இந்திய அளவில் பிறரை விட மிக அதிகம். அடிமை உழைப்பு சார்ந்த துறைகளில் குறைவான பங்களிப்பு உடையவர்களாகவும் படைப்பூக்கம் சார்ந்த துறைகளில் அதிக பங்களிப்புள்ளவர்களாகவும் கேரள இளைஞர்கள் மாறுவதற்கு அக்கல்விமுறை உதவி செய்தது என்றும் இன்னொரு கோணம் உள்ளது.

ஆகவே இன்றைய சூழலில் வகுப்பறைக்கு வெளியே கல்வி என்பதை ஒரு மைய கல்வியாக தமிழில் கொண்டு வர முடியுமா என்று தெரியவில்லை. அதற்கு ஒட்டுமொத்தமான மாற்றம் தேவை. ஆனால் வகுப்பறைக்கல்வி உருவாக்கும் நெருக்கடியினால் மாணவர்கள் எதிரழுத்தத்தை அடைந்து இன்று மின்னணு விளையாட்டுகளையும் சமூக வலைதளத்தொடர்புகளையும் அடைகிறார்கள். அதன் விளைவாக போட்டித் தேர்வுகளுக்கான தகுதிகளிலிருந்தே தவறிவிடுகிறார்கள். ஒரு நீர்த்துளி பெரும்பாலை நிலத்தில் விழுவது போல ஒரு குழந்தை இன்றைய சமூக வலைத்தள சூழலில் மின்னணு விளையாட்டுகளின் சூழலில் சென்று விழுகிறது. மிகச்சில நாட்களில் முற்றிலும் ஆவியாகிவிடுகிறது. அதனுடைய அறிவுத்திறன் கற்பனைத்திறன் அனைத்துமே அந்த மாபெரும் சராசரிப்படுத்தலால் முற்றிலும் மழுங்கடிக்கப்படுகின்றன. 

அவ்வாறு உறிஞ்சி அழிக்கப்படும் குழந்தைகளின் கதைகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அதன்பொருட்டுதான் பள்ளிக்கல்வி வழக்கமாக நடந்தாலும் கூடுதலாக ஒரு வகுப்பறைக்கு வெளியே இருக்கும் இயற்கை சார்ந்த, அறிவியல் சார்ந்த நடைமுறைக் கல்வியை அவர்களுக்கு அளிப்பது நல்லது என்னும் எண்ணம் தோன்றியது. அதன்பொருட்டு உருவாக்கப்பட்டவைதான் பறவை பார்த்தல், தாவரங்களை அவதானித்தல் போன்ற எங்களுடைய வகுப்புகள். அவை இயற்கையை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கின்றன தாங்களாக தேடி தேடிக்கற்றுக்கொள்வதற்கான ஒரு தொடக்கத்தை அளிக்கின்றன. அதன் வழியாக அவர்கள் கல்வி என்னும் இன்பத்தை அறிய ஆரம்பிக்கிறார்கள்.

போட்டிக்கான கல்வி என்பது ஒரு ‘பயிற்சி’தான் சரியான அர்த்ததில் அது கல்வி அல்ல. எந்தப்பயிற்சியும் கடும் துன்பம் நிறைந்ததே. தண்டனை, சிறுவெகுமதி என்னும் அடிப்படையில் எந்தப் பயிற்சியும் பயிற்சி நிகழும். போட்டி, போட்டியில் தோற்றால் சிறுமை, வென்றால் பெருமை எனும் தொடர் இருநிலைகள் வழியாகவே பயிற்சிகள் நிகழ்கின்றன- மனிதரானாலும் மிருகமானாலும். அவ்வாறன்றி இன்பம் மட்டுமேயான, அடைதல் மட்டுமேயான ஒன்றுதான் கல்வி என்பது. அத்தகைய கல்வி வேறொன்று மாணவர்களுக்கு இருக்குமென்றால் அவர்களால் மரபான கல்வி அளிக்கும் உளஅழுத்தம் ,அதன் விளைவான திசைதிருப்பல், அதன் விளைவான சீரழிவு ஆகியவற்றிலிருந்து ஓரளவு தப்பிக்க முடியும் என்று தோன்றுகிறது. 

இதையும் நம்முடைய பெற்றோருக்கு சொல்வதுதான் இன்னும் கடினமாக இருக்கிறது. குழந்தைகள் கட்டாய உழைப்பு முகாம்களில் (concentration camp)  இருக்கும் கடும் உழைப்பாளிகளைப் போல பள்ளிகளில் இருந்தாகவேண்டும் என்றும் இரவும் பகலும் எந்நேரமும் படிப்பு தவிர எந்த சிந்தனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நம்முடைய பெற்றோர், குறிப்பாக இன்றைய நவீன தாய்மார்கள் எதிர்பார்க்கிறார்கள். குழந்தைகளை அப்படியே வளர்க்கிறார்கள். அது ஒரு குறிப்பிட்ட வயதில் தனக்கான பாதையை உருவாக்கிக் கொள்ளும்போது ‘சொல்பேச்சுக் கேளாமல் ஆகிவிட்டது’  ‘தறுதலை ஆகிவிட்டது’ என்ற பதற்றத்தை அடைகிறார்கள். தாங்கள் அளித்த அழுத்தத்தால்தான் அது மறுதிசை நோக்கி நகர்கிறது என்றுகூட அவர்கள் புரிந்துகொள்வதில்லை.

அவ்வாறு நகர்ந்துவிட்ட  குழந்தையை மீட்பது மிக மிகக் கடினம் என்பதும் பெற்றோருக்குத் தெரிவதில்லை. அவ்வாறு சமூக வலைதளங்களாலோ, நவீன மின்னணு ஈர்ப்புகளாலோ திசைதிரும்பிவிட்ட ஒரு குழந்தை மிகப்பெரிய காந்தம் ஒன்றால் ஈர்க்கப்படும் துகள் போன்றது. அதற்கு இணையான எதிர் விசை நம்மிடம் இல்லை. அதைக் கட்டிவைத்தாலோ, கால்களை கட்டிக்கொண்டு அழுதாலோ அதை மீட்க முடியாது. ஏனெனில் அந்த மாபெரும் அமைப்பு பல்லாயிரம் நிபுணர்களால் உருவாக்கப்பட்டது. பலகோடி ரூபாய் வர்த்தகம் நிகழ்வது .உள்ளே  நுழையும் ஒருவரை வெளியேற விடாதபடி அடிப்பதற்கான அனைத்து உளவியல் தொழில் நுட்பங்களும் மிகச்சிறப்பாக பயன்படுத்தப்பட்ட ஒன்று. ஒரு கணிப்பொறி விளையாட்டின் வண்ணக்கலவையை தீர்மானிப்பதற்கே பலகோடி ரூபாய் ஊதியம் வாங்கும் நிபுணர்குழு வேலை செய்கிறது எனும்போது விளையாடாதே விளையாடாதே என்று பெற்றோர் மன்றாடினால் மட்டும் ஒரு குழந்தையை அதிலிருந்து தடுத்துவிடமுடியுமா என்ன? 

இளமையிலேயே ஒருகுழந்தையின் முழு தனி ஆற்றலும் வெளிப்படும் பிறிதொரு துறையை அதற்கு அறிமுகம் செய்வதும், அந்தக் குழந்தை பள்ளிப்படிப்புக்கும் அதற்கான தனித்திறன் இரண்டுக்கும் ஒரு சமநிலையைப்பேணும்படிச் செய்வது, அதைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பது ஆகியவற்றை மட்டும்தான் நாம் செய்யமுடியும். அவ்வாறு ஒரு  குழந்தை வழக்கமான போட்டி சார்ந்த ஒரு கல்வியில் தீவிரமாக இருக்கும்போதே தன்னுடைய தனித்தேர்வாக அரிய கூழாங்கற்களை  சேகரிப்பது, பறவைகளை பார்ப்பதற்காக காடுகளுக்கு அடிக்கடி செல்வது போன்ற ஒரு தனி உலகையும் வைத்துக்கொள்ளுமென்றால் அது இன்றைய நவீன உலகம் உருவாக்கி வைத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான பொறிகளில் சிக்காமல் இருக்கும். ஆனால் இதையெல்லாம் குழந்தைகளையாவது சொல்லி புரியவைத்துவிடலாம். போட்டிவெறிகொண்ட, வாசிப்புக்கும் கலைகளுக்கும் முற்றிலும் எதிரான பெற்றோர்களிடம் கொண்டு சேர்ப்பதென்பது மிக சோர்வூட்டக்கூடிய  ஒரு செயலாக இருக்கிறது. குழந்தைகளை எதிர்காலத்துக்கான முதலீடாக மட்டுமே பார்ப்பவர்களிடம் பேசவே முடியாமலிருக்கிறது.

இன்று சிலநூறுபேரிடம் இதைக் கொண்டுசென்று சேர்த்திருக்கிறோம். அதன் விளைவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டும் இருக்கிறோம். எதிர்காலத்தில் மேலும் விரிவாக எதையாவது செய்யமுடியலாம்.

முந்தைய கட்டுரைநவீன மேலைக்கலை அறிமுகம்