அன்புள்ள ஜெ
நீங்கள் காணொளிகள், சமூகவலைத்தளங்கள் ஆகியவற்றுக்கு எதிரானவர். நீங்களே இப்போது கிட்டத்தட்ட இத்தனை காணொளிகளை வலையேற்றம் செய்கிறீர்கள். தரவுக்குவிப்புக்கு எதிரான நீங்களே இத்தனை காணொளிகளை வெளியிடுவது முரண்பாடாக இல்லையா?
ரா.முருகேசன்
அன்புள்ள முருகேசன்,
நான் திரும்பத் திரும்ப இதைச் சொல்லி வருகிறேன். நான் யூடியூபில் போடும் காணொளிகள் எல்லாமே நான் நடத்திவரும் வகுப்புகளுக்கான அழைப்புகளே. இங்கே சிந்திப்பதற்கு இவ்வளவு விஷயங்கள் உள்ளன என்று அக்காணொளிகளின் வழியாக அறிமுகம் அளிக்கிறேன். இன்றைய இளைஞர்களின் உளச்சோர்வு, தனிமை, வெறுமை ஆகியவை முறையான கல்வி, அறிவியக்கச் செயல்பாடு வழியாக எப்படி இல்லாமலாகும் என்று தெரிவிக்கிறேன். அதை அறிந்து வருபவர்களுக்கு தீவிரமான, முறையான பயிற்சிவகுப்புகளை அளிக்கிறேன். அதாவது நான் அளிப்பது இணையக்கல்வியை அல்ல. இணையக் கேளிக்கையையும் அல்ல. நான் அளிப்பது நேரடிக் கல்வியை.
ஆனால் இணையத்தில் மூழ்கியிருக்கும் ஒருவருக்கு இணையம் வழியாக அன்றி எப்படி இப்படி மீளும் வழி இருக்கிறது என்னும் செய்தியைக் கொண்டுசெல்லமுடியும்? எப்படி அவரிடம் பேசமுடியும்? இணையம் செய்திகளை கொட்டுகிறது. அந்த செய்திமழை நடுவே நாம் கவனிக்கப்படவேண்டும் என்றால் நாமும் குறிப்பிட்ட அளவிலேனும் இச்செய்திகளை கொடுக்கவேண்டியிருக்கிறது. இவற்றை பார்த்துவிட்டு ஒருவர் வகுப்புக்கு வருவாரென்றால் அவரே என்னுடையவர். இவற்றையும் ஓர் இணைய நேரம்போக்காக ஒருவர் எடுத்துக்கொள்வார் என்றால் அது அவர் தலையெழுத்து, வேறொன்றும் சொல்வதற்கில்லை.
ஜெ