மதிப்பிற்குரிய ஜெ அவர்களுக்கு,
முதல் முறையாக குருபூர்ணிமா நிகழ்வில் கலந்துகொண்டேன். இது எனது நல்லூழ் ஆகும்.
ஐரோப்பிய பயணம் குறித்தான பதிவு கண்டவுடன், குருபூர்ணிமா நிகழ்வில் தங்களை பார்க்க இயலாது எனும் உண்மை ஏமாற்றத்தை தந்தது. ஆனால், அங்கு வந்தபின், ஒவ்வொரு நொடியும் தங்களுடன் இருப்பதாகவே உணர்ந்தேன். நீல வண்ணத்தில் பூவை ஏந்திய குரு நித்யாவின் ஓவியம், சுரா, ஆற்றூர் ரவிவர்மா, கல்பற்றா நாராயணன், ஜெயகாந்தன் மற்றும் பலரின் புகைப்படத்துடன்கூடிய அவர்களின் எழுத்துக்கள் என அன்றும் எங்களுடன் உரையாடிக்கொண்டிருந்தீர்கள் – அனுதினமும் தங்களின் தளம் மூலம் எங்களுடன் உரையாடுவது போலவே.
அதுமட்டுமல்ல அங்கிருந்த அனைவரது பேச்சிலும் தங்கள் பெயரும், தங்கள் சொல்லுமே இருந்தது. ஆகவே தாங்கள் ஐரோப்பாவில் இருந்தாலும் அன்றும் இன்றும் எங்களுடன் அணுக்கமாகவே இருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சியே.
இறைவழிபாடும், குரு ஆராதனையும் ஒருங்கே நிகழ குருபூர்ணிமாவில் வெண்முரசு நாள் தொடங்கியது. குரு பாதுகா ஸ்தோத்திரமும், குரு ஸ்தோத்திரமும் அச்சிட்டு வழங்கியமை பயனுள்ளதாய் அமைந்தது.

குழந்தைப் பிராயத்து கண்ணனின் ஆயர்பாடி வாழ்க்கையை வெண்முரசிலிருந்து சுபா அவர்கள் வாசித்து அளித்தது அருமை. “கண்ணன் பா…வ…ம்” எனும் அவரது குரலில் கண்ணனே கண்ணுள் வந்தான். வெண்முரசு நாளில் வெண்முரசுக்குள் வரும் புதிய வாசகனாகிய எனக்கு நல்ல தொடக்கத்தை அளித்துள்ளார் சுபா.
மதிப்பிற்குரிய ஜெ, சில சமயங்களில் சில நிகழ்வுகள் ஆச்சர்யமூட்டுவதாய் அமையும். திரும்பிப்பார்த்தால் என் மனமே, அவ்வுண்மை நிகழ்வை நம்ப மறுக்கும் வகையில் அமையும். சில தினங்களாக ஒரு நிறைவின்மையை மிக அதிகமாக உணர்ந்தேன். மனம் ஆர்பரித்து அழுதது. இவ்வுணர்வுடனேயே குருபூர்ணிமா நிகழ்வுக்கு வந்தேன். குருபூர்ணிமை நிகழ்வில் நிறைவின்மை குறித்தான உரையாடலும் நிகழ்ந்தது என்னைத் திகைப்படையச் செய்தது.

குரு செளந்தர் அவர்கள் வெண்முரசிலிருந்து தருமர் தனது நிறைவின்மையினால், விடைதேடி நெருப்பின் பூமிக்குச் சென்றதையும், மாதங்கள் கடந்து உடலே உருகிய நிலையில் மீண்டு வந்ததையும், தான் கண்ட விடுதலையை அர்ச்சுனனுக்கு உரைத்ததையும் குறிப்பிட்டார். தருமனுக்கே இந்நிலை என்றால் நான் எம்மாத்திரம். இன்னும் ஒருமுறை ‘தன்மீட்சி” யை ஆழ்ந்து வாசிக்கவேண்டும் என முடிவு செய்துகொண்டேன். மேலும் ‘தன்மீட்சி” யை எப்போதும் கைவசம் வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது எனவும் தோன்றியது.
‘சிறுகுழந்தையாக துளசிச் செடியின் கீழிருந்து வீறிட்டு அழுத ஆண்டாளின் குரல் கேட்டு அள்ளி அணைத்திட்ட நம்மாழ்வார்’ எனும் சரித்திர நிகழ்வை நாட்டியமாகப் படைத்தார் சலீகா ஷாகுல். நாட்டியத்தின் நிறைவில் “உங்களுக்கும் அந்த அழுகை இருந்தால், பேராற்றல் ஆகிய இறைவன் உங்களையும் இரு கரங்களால் அணைத்துக்கொள்வார்” என்று அவர் கூறியது எனக்கே கூறியது போல் இருந்தது.
‘நிறைவின்மை” எனும் ஒன்று என்னுள் சுழன்று அடிப்பதையும், அதை யாரிடமும் வெளிப்படுத்தாது, என் உள்ளத்துள் இருக்கையில் – அதற்கான விடைகளும், ஆறுதலும் வெண்முரசு நாளில் கிடைப்பது என்பது தற்செயல் அல்ல – அது ஒரு பேராற்றலின் பெருங்கருணை.
அந்தியூர் மணி அவர்கள் உரையும், ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் நெறிப்படுத்திய கலந்துரையாடலும் அருமை.
நிதி அதியமான் அவர்கள் வழங்கிய கதக் நடனம், நடனம் மட்டுமல்ல ஒரு கதக் வகுப்பு. நடனத்தின் இடையிடையே அந்நடனம் குறித்தான விளக்கம் அளித்தபொழுது களைப்பின் சாயல் முகத்தில் தெரிய, மூச்சு வாங்கப் பேசினார். அடுத்த நொடி கதக் நடனம் ஆடுகின்றபோது களைப்பின் சுவடே இல்லாத முகத்தில் தெரிந்த பல பாவங்களும், சுவாசத்தின் துளிகூட வெளியே தெரியாத தன்மையும் ஆச்சர்யம் அளித்தன. ஒரு முறை இரு முறை அல்ல – பல முறை இவ்வாச்சர்யம் நிகழ்ந்தது. ஒவ்வொரு கதக் நடனத்தின் முன்பும் ஒரு புதிய பிறப்பெடுப்பாரோ எனத் தோன்றியது.
அவரைத் தொடர்ந்து இனிய ஹிந்துஸ்தானி இசையை ஹரிபிரியா வழங்கினார். அவருக்கும் பாராட்டுக்கள்.
நிறைவாக திருவருளும், குருவருளும் இணைந்து எனக்கு வழங்கிய நல்லனுபவம் இந்த குருபூர்ணிமா.
நன்றிகள் பல.
அன்புடன்,
க செல்வக்குமார்.