சூஃபி மெய்யியலின் நாட்கள்

இனிய ஜெயம்

ஆசிரியர் நிஷா மன்சூர் அவர்களின் இஸ்லாமிய மெய்யியல் அறிமுக வகுப்பில் கலந்து கொண்டது மேலும் ஒரு பரவச கற்றல் அனுபவமாக இருந்தது.அல்லாஹ் என்றால் என்ன?.ஒரு முஸ்லிம் ஏற்று ஒழுகவேண்டிய ஐந்து அடிப்படைகள் ,அவை என்னென்ன.சிரவணக்கம் என்பது என்ன? அதை எவ்விதம் கடைபிடிப்பது.? நபிகள் நாயகம் வருகை வரையிலான ஆபிரகாமிய மதங்கள் உருவாக்கிய ஆன்மீகமும் வரலாறும் பண்பாடும். நபிகள் நாயகம் வருகைக்கு பின்னர் அவர் முதன்மையாக கொண்டு வந்த சீர் திருத்தங்கள்.பெருமான் அவர்களை அவரது சமூகம் எதிர்கொண்ட விதம்.குர்ஆன் அருளப்பட்ட பிறகு நபிகள் நாயகம் அவர்களை அடிப்படையாக கொண்டு நிகழ்ந்தவை….

தனி மனிதராக குடும்ப மனிதராக நண்பர்களுக்கு நண்பராக ஆத்மீக வழிகாட்டியாக சமூக மனிதராக வெளிப்பட்ட நபிகள் நாயகம்.பெருமானாரின் விண் உலக பயணம்.அவரது தவ காலம்.குர்ஆன் இன் அடிப்படைகள். ஹதீஸ் ஷரியத் இவற்றின் அடிப்படைகள். ஷியா சுன்ணி எனும் முதன்மை பிரிவுகள்.அடிப்படை சமூக இயல் கோட்பாடுகளை வளர்த்து எடுத்த நான்கு பிரிவுகள்.காலிபைட் வரிசை அதன் வழியே நிகழ்ந்த வரலாறு.இஸ்லாமிய பொற்காலத்தில் அலஃப் அரபி போன்ற ஆளுமைகள் வழியே வளர்ந்த அளவை இயல். தத்துவ அறிஞர் வரிசை

நபிகள் நாயகத்தை அடிப்படையாக கொண்டு அவரது திண்ணை தோழர்கள் எனும் குழு வழியே வளர்ந்த சூபி வழி.சூபி வழி என்றால் என்ன.தரீக்கா என்றால் என்ன.முதன்மையான நான்கு தரீக்கா வழிகள்.சூபி மரபின் முதன்மையான இரண்டு கொள்கைகள்.ஒவ்வொரு தரீக்கா வழியிலும் கற்பிக்கப்படும் வழிமுறைகள்.உலக அளவில் இந்திய அளவில்தமிழக அளவிலமுக்கிய சூபி வழி ஞானிகள் அறிஞர்கள் அவர்களின் ஆக்கங்கள்.என இரண்டரை நாளில் மேற்கண்டவை மீது அடிப்படையான தெளிவான அறிமுகம் கிடைத்தது.

ஆசிரியர் நிஷா மன்சூர் அவர்கள் நபி பெருமான் அவர்கள் அவரது அருகிலேயே நிற்கிறார் எனும் பாவனை கொண்ட பரவசத்துடனே வகுப்புகள் எடுத்தார்.

நபிகள் பெருமானாரின் வாழ்வு குறித்த பாடத்தை அவர் வாழ்வின் நாடகிய தருணங்களை முதன்மைப்படுத்தி உணர்ச்சிகரமான கதைகள் வழியாக முன்னெடுத்தார்குணங்குடி மஸ்தான் சாகிபு போன்ற ஞானியர் பாடல்கள் பலவற்றை அதில் தோய்ந்து பாடியபடியே அவர்களின் வாழ்வையும் ஆக்கங்களையும் அறிமுகம் செய்தார்.

இதுவரை இந்த களம் சார்ந்து நான் வாசித்தவை பயணித்து கண்டு கற்றவை அனைத்தையும் தொகுத்துக்கொள்ள  அடிப்படையான ஒரு வலிமையான அடித்தளத்தை இந்த அறிமுகம் எனக்கு அளித்தது.ஏக இறைவனின் திரு நாமத்தை குறிப்பிட்ட துவனியில் குறிப்பிட்ட லயத்தில் குறிப்பிட்ட முறையில் உச்சரிக்கும் வண்ணம் ஆசிரியர் உடன் மாணவர் அனைவரும் கூடி  நிகழ்த்திய ஒரு சிறிய சூபி பிராக்டீஸ் உடன் வகுப்புகள் முடிவடைந்தது.

ஆசிரியர் வசம் இந்த வகுப்பின் நினைவாக அவரது நூல் ஒன்றில் அவரது கையொப்பம் பெற்றுக் கொண்டேன். தற்செயலோ இறை விருப்பமோ இந்த வகுப்புகள் நிகழ்ந்த இந்த மூன்று நாளும் ஆசிரியர் நிஷா மன்சூர் அவர்களுக்கு மிக மிக முக்கிய நாட்கள். அவரது குரு மரபு வழியே இந்த குறிப்பிட்ட நாட்களுக்கான சில நோன்புகள் உண்டு. இந்த நாட்களுக்கான தனிப்பட்ட சூபி பிராக்டீஸ் கள் உண்டு. அவற்றை இம்முறை தள்ளி வைத்து விட்டே ஆசிரியர் இந்த வகுப்பை எடுக்க வந்திருக்கிறார்.

ஆம் இந்த வகுப்பு நிகழ்ந்த இந்த நாட்கள்தான் கர்பலா தியாகம் நிகழ்ந்த 9,10,11 ஆம் நாள்.இந்த நாட்களில் சூபி மரபு வழி வந்த ஆசிரியர் முன்னிலையில் கர்பலா தியாக கதையை நாங்கள் கேட்டோம்.இது எல்லாமே வெறும் துவக்கம் மட்டுமே.இதில் கற்று செல்ல இன்னும் இன்னும் என பலப் பல உண்டு சீரா புராணம் துவங்கி குணங்குடியார் பாடல்கள் வரை. மற்றபடி கிடைத்த இடைவெளிகளில் வழக்கம் போல அந்தியூர் மணி மற்றும் பிற நண்பர்களுடன் இலக்கிய அரட்டை.

கிளம்பும் முன் ஆசிரியர் நிஷா மன்சூர் அவர்கள் என்னை அழைத்து கவிஞர் அபி அவர்கள் மொழியாக்கம் செய்த திரு குர்ஆன் தமிழாக்கத்தை அன்பு பரிசாக அளித்தார். வாழ்வின் மேலும் மூன்று இனிய தினங்கள்.

க்டலூர் சீனு

முந்தைய கட்டுரைகுரு, கடிதம்