குருபூர்ணிமா, நடனங்கள், இலக்கிய அரங்கு- யோகேஸ்வரன் ராமநாதன்

Screenshot

பத்தாம் தேதி,  இந்திய நேரம் காலை 9.30 மணிக்கு சுவிஸ்லிருந்து ஜெயமோகன் அவர்கள் கலந்துகொண்ட 2025ம் ஆண்டுக்கான வெண்முரசு இணையவழி சந்திப்பு ஆரம்பிக்க…  2025ம் ஆண்டுக்கான வெண்முரசு நேர் சந்திப்பினை,இந்திய நேரம் மாலை 4.10 மணிக்கு வெள்ளிமலையில் குருஜி சௌந்தர்  ஆரம்பித்தார்.

சௌந்தரின்  மகன் சத்யநாராயணனின் இறை வணக்க பாடலில் தொடங்கி , இறுதியாக தியான நிகழ்வோடு  இரவு 8.20 மணிக்கு நிறைவடைந்தது நிகழ்வு.
வெண்முரசு-நீலம் நாவலின் நறுவெண்ணெய் அத்தியாயத்தின் ஒன்பது பக்கங்களை வாசித்தார் சுபஸ்ரீ. முதல் இரு பக்கங்களுக்கு ஒன்றைக் குரலின் உருவகமாய் இருந்த  சுபஸ்ரீ, அடுத்தடுத்த பக்கங்களை வாசிக்கையில், ரோகிணியாய், பலராமனாய்,யசோதையாய் கண்ணனாய் தோற்றம் கொள்ள ஆரம்பித்தார்.
வெண்ணைய்ப்பானை அடுக்குகளுடன் உறி அறுந்து விழ,  யசோதை சிரித்து நிற்க, சுவரோடு சேர்ந்து நடுங்கி நிற்கும் பலராமனிடம், ரோகிணி சினங்கொண்டு நடத்தும் உரையாடல்களில், அவையோர் அனைவரும் உடன்செல்ல ஆரம்பித்தோம்.
“கண்ணன் பாவம்…” என்ற வாக்கியம் பலமுறை வரும் அத்தியாயம் நறுவெண்ணெய்.  ஒவ்வொரு முறை உச்சரிக்கையிலும் புன்சிரிப்பை வரவழைக்கும் சொற்றொடர். சுபஸ்ரீயின் வாசிப்பும் அவ்வாக்கியத்துடனேயே நிறைவு பெற்றது.
“காவியங்கள் ஏன் மறு உருவாக்கம் செய்யப்பட வேண்டும்?” என்ற தலைப்பில் அந்தியூர் மணி உரையாற்றினார்.காவியம் எழுதும் காலத்தில் அதற்கான பண்பாடும் விழுமியங்களும் அந்த காவியத்தில் நிறைந்திருக்கும். கால மாறுதல்கள் வழி வந்து சேரும் புதிய விழுமியங்களை அவற்றோடு இணைத்துக் கொள்ள ஒரு காவியகர்த்தா தேவைப்படுவதையும், வெண்முரசு எவ்வாறு அத்தைகைய புதிய விழுமியங்களை வேறு ஒரு பார்வையில் முன்வைக்கிறது என்ற கோணத்தில் தனது உரையினை அமைத்துக் கொண்டார்.
குருஜி சௌந்தர் வெண்முரசின் மையக் கதாபாத்திரங்கள், இணை பாத்திரங்களின் பயணங்கள் குறித்து பேசினார். நினைவுகளோடான பயணம், அகங்காரத்தின் ஊடாக பயணம், புத்தியின் பயணம் என்று மூன்று வித அகப்பயணங்களை பீமனின், அர்ஜூனனின்,தருமரின் அக மற்றும் புற பயணங்களை விவரிக்கும் மாமலர்,கிராதம்,சொல்வளர்காடு நாவல்களோடு ஒப்பிட்டு கச்சித உரையொன்றை வழங்கினார்.
நிகழ்வின் இரண்டாம் பகுதியாக கலை நிகழ்ச்சிகள். நிதி அதியமானின்  கதக் நிகழ்வு. ஹரிபிரியாவின் இந்துஸ்தானி பாடல்கள், சலீகாவின்  பரதநாட்டிய நிகழ்வு
நிதி தான் வழங்கப்போகும் கதக் நடனம் குறித்த விவரங்களை தெரிவித்து ஆரம்பித்தார். மாலை இளவெயில் அரங்கில் விழ,முக பாவனை,கை சுழற்சி, தாள நடைகள் மூலம் உணர்வுகளை பிரதிபலித்து  வழங்கிய கதக் நடனம், பரவச நிலையை அரங்கில் கொண்டு வந்தது.
ஹரிபிரியா தன்னை தகவமைத்துக் கொள்ள முதல் பாடல்  தேவைப்பட்டது.  அந்தி மறைகையில் விளம்ப,மத்திம,துரித கதிகளில் அவர் பாடிய இந்துஸ்தானி பாடலில் அவை ஒன்றி இருந்தது.
இரு இசைக்கலைஞர்களும் தனித்தனியாகவும், இணைந்தும் நிகழ்வுகளை வழங்கினர். தாளக்கட்டில் சமத்தில் இல்லாமல் ஒரு இடம் தள்ளி எடுக்கும் டெக்னிக்கல் சமாச்சாரத்தை, அவையினருக்கு விளக்கி, சமத்தை, கைதட்டல் மூலம் அவையினருக்கு உணர்த்தி,  எல்லோரும் கைதட்டி சமத்தை உணர்வதன் மூலம், நடன சுழற்சிகளுக் கிடையேயான அழகை அவையினர் புரிந்து கொள்ளும் வண்ணம் நிகழ்த்தினார் நிதி .
நிகழ்த்துக் கலை ஒன்றினை, அருகமர்ந்து ரசிக்கும் தருணம், அன்றைய தினம் அரங்கில் இருந்த அனைவருக்கும் கிடைத்தது.
Screenshot
மூன்றாம் அமர்வாக வெண்முரசு கலந்துரையாடல்.வெண்முரசினை முழுமையாக வாசித்து உள்ளவர்களிடமும், வாசிப்பில்/மீள் வாசிப்பில் உள்ளவர்களிடமும், புதிதாக வாசிக்க இருப்பவர்களிடமும் சில கேள்விகளை முன் வைத்தார் கிருஷ்ணன்.இறுதியாக, குவைத்தில் இருந்து வந்திருந்த வாசகி சலீகா  நந்தவனத்தில் கண்டெடுக்கப்படும் ஆண்டாள், சூடிக்கொடுக்கும் நிகழ்வை  பரதநிகழ்வாக நிகழ்த்தினார்.
கண்ணன் கால்வழுக்கி விழுந்து மீண்டும் எழுந்து மீண்டும் விழுந்து புரண்டு ,உருண்டு வழுக்கி கைகால்கள் நழுவி வெண்ணையில் நீச்சலிட்டான்.
வெண்முரசு-நீலம்- பகுதி ஐந்து – நறுவெண்ணெய் அத்தியாத்தில் சுபஸ்ரீ வாசித்த ஒன்பது பக்கங்களில் வரும் வரிகள்.

வெண்முரசு எனும் காவியத்தில் கண்ணனாய் மீண்டும் மீண்டும் உள்செல்லும் வாசகர்களையும், பல்வேறு காரணங்களால் பாதியில் நிறுத்திவிட்ட வெண்முரசு வாசிப்பை தொடர திட்டமிடுபவர்களையும், புதிதாய் உள்நுழைய இருக்கும் வாசகர்களையும் ஒருங்கே கொண்ட அரங்கு.

சௌந்தரின் நன்றியுரை மற்றும் தியான நிகழ்வோடு இனிதே நிறைவடைந்தது வெண்முரசு நாள்.
– யோகேஸ்வரன் ராமநாதன்.
முந்தைய கட்டுரைஇலக்கியம், கடிதம்