குருபூர்ணிமா நம்முடையதா என்ற கேள்வி அவ்வப்போது எழுப்பப்படுகிறது. அதையொட்டிய நான்கு கேள்விகளுக்கான பதில்கள்.
அ. வியாசர் வேதாந்த மரபைச் சேர்ந்தவர். சைவர்களுக்கு உரியவர் அல்ல.
பதில். முற்றிலும் பிழையான கருத்து அது. இந்து மதப்பிரிவுகள் அனைத்துக்குமே வியாசர் முதலாசிரியராகவே நீண்டகாலமாகக் கருதப்படுகிறார். ஆறுமதங்களுக்குரிய பதினெட்டு புராணங்களும் அவர் எழுதியவையாகவே கருதப்படுகின்றன. சிவபுராணம் உட்பட. ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு காவியங்களும் இந்து மதப்பிரிவுகள் அனைத்துக்கும் பொதுவானவை- அவை விஷ்ணுவின் பிறப்பைச் சொல்பவையாக இருந்தாலும். ஏனென்றால் அவற்றில் சிவனுக்கும் அதே இடம் உள்ளது.
ஆ. வியாசர் வேதாந்த மரபைச் சேர்ந்தவர். பிறருக்கு உரியவர் அல்ல.
இதற்கும் முந்தைய பதிலே பொருந்தும். வியாசர் எல்லா மதப்பிரிவுகளையும், எல்லா ஞானவழிகளையும் ஒருங்கிணைப்பவர். ஆகவேதான் தொகுப்பாளர் என்னும் பொருளில் வியாசர் என அழைக்கப்படுகிறார். பொதுவாக இந்து புராணங்களில் முனிவர்கள் அனைவருமே எல்லா மதப்பிரிவுகளுக்கும் பொதுவானவர்களாகவே காட்டப்படுகின்றனர்.
இ. வியாசர் இந்துமரபுக்கு மட்டும் உரியவர்.
வியாசரை இந்து மதப்பிரிவுகளே கொண்டாடிக்கொண்டிருக்கின்றன என்பது உண்மை. ஆனால் ராமாயணம், மகாபாரதம் இரண்டுமே ஜைனம், பௌத்தம் ஆகியவற்றுக்கும் பொதுவானவை. ஆகவே வியாசரை மூல ஆசிரியராக, இந்து மத அடையாளம் கடந்தும் வழிபடலாம்
ஈ. இந்த வழிபாட்டில் மனிதனை மனிதன் வணங்கும் இழிவு உள்ளது
எந்நிலையிலும் எந்த மனிதனையும் வணங்கலாகாது என்னும் இறுக்கமான நெறி கொண்ட மதப்பிரிவுகள் சில உண்டு, அவர்கள் வழிபடவேண்டியதில்லை. ஆனால் இஸ்லாமியத் தூய்மைவாதப்பிரிவு தவிர அனேகமாக எல்லா மதத்தவரும் மனிதர்களை வணங்குபவர்களே. நாத்திகர்களும் மார்க்ஸியர்களும்கூட. ஆகவேதான் வள்ளுவருக்கும் மார்க்ஸுக்க்கும் சிலைகள் உள்ளன. அய்யன் என்றும் பேராசான் என்றும் அவர்கள் கருதப்படுகிறார்கள். மனிதர்களை தெய்வமாக ஆக்கவேண்டியதில்லை. ஆனால் மானுடராக பெருவாழ்வு வாழ்ந்தவர்களை முன்னுதாரணமாகக்கொண்டு வணங்குவதில் பிழை ஏதும் இல்லை. அந்த வழிபாடு அவர்களை நினைவுகூர்வதாக, அவர்களின் சொற்களைப் பயில்வதாக அமையும் என்றால் அது முற்றிலும் உகந்ததே ஆகும்.