ஆசாரவாதத்திற்கு எதிரான கடுமையான நிலைபாட்டையே நான் எப்போதும் கொண்டிருக்கிறேன். ஆசாரவாதத்தை தத்துவ சிந்தனையிலும் ஆன்மிகத்திலும் படிந்துகொண்டே இருக்கும் ஒரு களிம்பாக, உயிருள்ள ஒவ்வொன்றையும் நோயுறச்செய்யும் ஒரு வைரஸாக மட்டுமே நான் பார்க்கிறேன். ஆசாரவாதத்திற்கு அவ்விரு குணாதிசயங்களையும் குறிப்பாகச் சொல்லலாம். களிம்பு அந்தப்பொருளிலிருந்தே உருவாகிறது. காற்றிலிருக்கும் கந்தகத்தையோ ஆக்சிஜனையோ பயன்படுத்திக்கொள்கிறது. அதைப்போல் ஆசாரவாதம் அந்த தரிசனத்திலிருந்துதான் உருவாகிறது. அந்த தத்துவத்தைத்தான் அது சூழலில் இருந்து எடுத்த மாசுகளால் திரிபுரச்செய்து களிம்பாக ஆக்கிக்கொள்கிறது அதைப்போல ஒவ்வொரு உயிர்ப்பொருளிலும் ஊடுருவி ,அந்த உயிரியக்கத்தின் ஒரு பகுதியாக ஆகி ,எந்நிலையிலும் முற்றாக அழியாமல் நீடிக்கும் வைரசின் தன்மையும் ஆசாரவாதத்திற்கு உண்டு.
ஆசாரவாதம் ஏன் எதிர்க்கப்படவேண்டும் என்றால் ஆசாரவாதத்திற்கு இருக்கும் அடிப்படையான ஒரு மழுங்கடிக்கும் தன்மையால்தான். ஆசாரங்கள் என்பவை ஒரு குறிப்பிட்ட தத்துவ சிந்தனை அல்லது தரிசனம் தன்னை அன்றாடமாக ஆக்கிக்கொள்ளும் பொருட்டு உருவாகி வருபவை. உதாரணமாக பிரிட்டிஷ் இயற்கைவாதம் (நேச்சுரலிசம்) போல ‘இயற்கையே தெய்வம்’ என்றொரு தரிசனம் முன்வைக்கப்படுகிறது என்று கொள்வோம். அதை ஏற்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் அதை தன் வாழ்க்கையின் ஒரு பகுதியாக்க வேண்டுமென்றால் இயற்கை அழகு செறிந்திருக்கும் ஓர் இடத்தில் சென்று ஐந்து நிமிடம் இயற்கையை பார்த்துவிட்டு வரவேண்டும், அல்லது ஒரு நாளைக்கு ஒருமுறையாவது நைட்டிங்கேல் அல்லது குயிலின் ஒரு குரலைக் கேட்டாகவேண்டும் என்று ஒரு ஞானி வகுக்கிறார் என்றுகொள்வோம். அது ஒரு வாழ்க்கைமுறையாக ஆகும். காலப்போக்கில் ஆசாரமும் ஆகும்.
அதை ஏற்பவர்கள் சில ஆண்டுகளுக்குப்பின் அதன் சாரமாக இருக்கும் இயற்கையின் தரிசனம் என்ற அம்சத்தைக் கைவிட்டுவிடுவார்கள். அந்த மரபைச் சார்ந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒருநாளைக்கு ஒருமுறையாவது இயற்கை முன் நிற்க வேண்டும், பறவைக்குரல் கேட்க வேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாக ,ஒரு அர்த்தமற்ற பிடிவாதமான செயலாக மாற்றிக்கொள்வார்கள். ஒரு கட்டத்திற்கு பிறகு அதில் சமரசங்கள் உருவாகும். இயற்கை தேவையில்லை, இயற்கையை வரைந்த படம் போதும் என்றாகும். இயற்கைக்குப் பதிலாக ஒரே ஒரு தொட்டியிலிருக்கும் ஒரே ஒரு செடி போதும் என்றாகும். பறவையின் ஒலியை செல்பேசியில் வைத்துக்கேட்டால் கூடப் போதும் என்றாகும். எதற்காக காலையில் ஒரு செடியை அல்லது இலையைப் பார்க்கிறோம் என்ற போதம் எவருக்கும் இருக்காது. மாறாக அதை உறுதியாகச் செய்ய வேண்டும், அதை உறுதியாகச் செய்பவர்கள் உயர்ந்தவர்கள், அதைச் செய்யாதவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற நம்பிக்கையே எஞ்சும்
காலப்போக்கில் அதைச் செய்துவைப்பதற்கு புரோகிதர்கள் உருவாகிவருவார்கள். அது ஒரு தொழிலாக ஆகும். அதில் பெரும்பணம் புரளத்தொடங்கும். அதன் பிறகு அதன் தத்துவம் முக்கியமல்ல, அந்தச் செயல் மட்டுமே எல்லாவற்றையும் அளிக்கும் என்று சொல்ல ஆரம்பிப்பார்கள். அச்செயல் அளிக்கும் பாவபுண்ணியங்கள் என்ன என்று விவாதம் தொடங்கும். ஒருநாளில் செல்போனில் ஒரு பறவை ஒலியைக்கேட்டால் இன்ன லக்கினத்தில் உள்ளவர்களுக்கு இன்னின்ன லாபங்கள் வரும் என்று சோதிடர்கள் சொல்லத்தொடங்குவார்கள். ஒரு நாளில் ஒரு செடியின் ஒரு இலையைக் கண்ணால் பார்த்தால் அன்றைக்கு இன்ன ராசிக்காரர்களுக்கு இன்ன பயன் வரும் என்றாகும். அது முற்றிலும் உலகியலாக மாறும். அதை ‘சரியாக’ செய்வது எப்படி என ஓயாமல் விவாதிப்பார்கள். சண்டைபோட்டுக்கொள்வார்கள். அதிலிருக்கும் தரிசனமும் தத்துவமும் முழுமையாகவே கைவிடப்படும்.
எப்போதுமே தரிசனத்திலிருந்துதான் ஆசாரவாதம் உருவாகிறது. ஆனால் மிக விரைவில் தத்துவத்தையும் தரிசனத்தையும் அது மறைத்து, தான் மட்டுமேயாகி நின்றுவிடுகிறது. ஆசாரவாதம் ஒரு தத்துவ தரிசனத்தை முற்றாக அழித்து அத்தரிசனத்தின் வடிவாக அது மட்டுமே நின்றிருக்கும் தன்மையும் கொண்டது. ஆகவே சிந்திப்பவர் எவரும் எந்த ஒரு ஆசாரத்தையும் ஐயத்துடன்தான் பார்க்கவேண்டும். அந்த ஆசாரத்திற்கு பின்னாலிருக்கும் உணர்வுநிலைகள் தவிர அதன் நடைமுறைகள், நெறிகள் எதுவும் அவருக்கு முக்கியமாக இருக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன்..
அனைத்திற்கும் மேலாக ஒன்று உண்டு. ஆசாரவாதம் உலகியல் சார்ந்தது. ஆகவே உலகியலில் ஏற்கனவே இருந்துகொண்டிருக்கும் அனைத்து தீய அம்சங்களும் ஆசாரவாதத்திற்குள் புகுந்துகொள்கின்றன. இந்தியாவில் எந்த மதம் எந்த ஆசாரத்தை உருவாக்கினாலும் அந்த ஆசாரத்தில் உடனடியாக சாதி வந்து இணைந்து கொள்வதையும், தீண்டாமை கலந்துவிடுவதையும் பார்க்கலாம்.இந்தியாவில் தீண்டாமைக்கு எதிராகவும், சாதிக்கு எதிராகவும் உருவானதென்று என்று சொல்லப்படத்தக்க முதல் மதம் என்பது பௌத்தம். ஆனால் பௌத்தத்திற்குள் வலுவாக சாதி ஊடுருவி, தீண்டாமை நிலைகொண்டது. இறுதியாக அவ்வாறு சாதிய அடுக்குமுறைக்கு எதிராகத் தோன்றியது தூய பக்தியை முன்வைத்த சீக்கிய மதம். ஆனால் சீக்கிய மதம் வலுவான சாதியத்திற்குள் சென்று நின்றது.
ஆசாரவாதம் ஆசாரத்தை கடைபிடிப்பவர்கள் உயர்ந்தவர்கள் அல்லாதவர்கள் தாழ்ந்தவர்கள் என்று வகுக்கிறது. ஒரு சமூகத்தின் எல்லா மூடநம்பிக்கைகளையும் ஆசாரவாதம் எப்படியோ தன்னுள் இழுத்து வந்து ஒரு விளக்கம் அளித்து உள்ளே வைத்துக்கொள்கிறது. ஆகவேதான் சிந்தனைக்கு எதிரானது ஆசாரவாதம். ஆசாரவாதத்தை முற்றாகத் தவிர்த்து தனக்கென ஞானம் சார்ந்த ஒரு பயணத்தை வைக்காதவர் தத்துவம் அல்லது தரிசனம் பற்றி எந்த உரையாடலை நிகழ்த்துவதற்கான எந்தத் தகுதியும் அற்றவர் என்று எப்போதும் எனக்கே ஆணையிட்டு சொல்லிக்கொள்கிறேன்.