ஆசிரியருக்கு வணக்கம்,
தொடரும் ஓவிய பயணத்தின் துவக்கம்
இன்று “ஓவியக்கலை என்பது உலகை காண்பதற்கு வழி,” என்ற திரு ஏ. வி . மணிகண்டன் அவர்களின் காணொளியை பார்த்தேன். 2023 இல், வெள்ளிமலையில் அவருடைய முதல் வகுப்பில் கலந்து கொண்டதில் இருந்து, இன்று வரை, வந்த தூரத்தை நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை.
கடக்க முடியாத அகழி
ஓவியத்தை பொறுத்தவரை, பெரும்பாலானவர்கள் போலி ரசிகர்கள்தான். ஓவியங்கள் பிடிக்கும், சில முக்கியமான படங்களை யார் வரைந்தார் என்று சொல்ல முடியும், இம்ப்ரெஸ்ஸனிசம், சர்ரியலிசம் என்று சில புரியாத வார்த்தைகளை கலந்துரையாடலில் சொல்லி, தனக்கும் தெரியும் என்று காட்டிக் கொள்ள முடியும். நானும் அப்படித்தான் இருந்தேன்.
உள்ளூற, “இப்படி வரைந்து இருக்கிறார்களே! அர்த்தம் புரிந்தால், நன்றாக இருக்கும்,” என்று பலமுறை நினைத்தது உண்டு . ஒவியம் சார்ந்த வகுப்புகளில் பெரும்பாலும், அந்த ஓவியர் ஒரு மேதை, இவருடைய வண்ணக்கலவை அற்புதமானது, கோடுகள் தனித்துவம் மிக்கவை என்றுதான் சொல்வார்கள்.
நானும், அதையே திருப்பி சொல்வேன். ஆனால், இவ்வளவு பிரமாண்டமான படைப்புகளை படைக்க, இவர்களை எது தூண்டுகிறது என்ற ஒரு கேள்வி எப்பொழுதும் இருக்கும். நவீன ஓவிய கலைக்கும், சாதாரண ரசிகனுக்கும், இடையில் ஒரு மிகப்பெரிய அகழி இருப்பது போல் தோன்றும்.
ஓவியத்தின் பின்னணியை புரிந்து கொள்வது
ஏ. வி . மணிகண்டன் அவர்களின் வகுப்பில், ஓவியங்களை பற்றிய எனது பெரும்பாலான கேள்விகளுக்கு விடை கிடைத்தது.
துப்பாக்கியை பார்க்கும் ஒரு கறுப்பின இளைஞனும், ஐரோப்பியனும் இருக்கும் புகைப்படத்தை காட்டி, ஒரே பொருள் ஒருவனிடம் பயத்தையும், ஒருவனிடம் திமிரையும் வெளிக்கொண்டு வருகிறது. இவர்கள் இருவரும், துப்பாக்கியை வரைந்தால் இரண்டு வகையில் இருக்கும் என்று, நவீன ஓவியத்திற்கு நச்சென்ற துவக்கம் கொடுத்தார்.
ஒரு ஓவியத்தை பார்க்கும் பொழுது, அதன் thought school பற்றி தெரிந்து கொள்வதன் அவசியத்தை முதலில் தெளிவாக சொன்னார். பின்னர், ஓவியனின் வாழ்வு, சார்பியல், சமூக மாற்றங்கள் எப்படி ஓவியத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிரதிபலிக்கின்றன என்று விளக்கினார்.
ஒரு ஓவியக் கண் விழிப்பு
கிரேக்க பாணி ஓவியங்களில் துவங்கி, புராண காட்சிகளை வரைந்து, பின்னர் அரச குடும்பம் மற்றும், பிரபுக்களின் உருவப்படங்களை வரைந்த காலகட்டங்கள் பற்றி விளக்கினார். மறுமலர்ச்சி காலகட்டத்தில், ஊஞ்சலாடும் பெண்ணின் படத்தில் (The Swing) இருந்த கள்ள காதலனை சுட்டி காட்டி, ஓவியனின் பகடியை பற்றி சொன்னார்.
அதில் தொடங்கி, மறுமலர்ச்சி காலத்திற்கு பிந்தைய பல ஓவிய பாணிகளை படிப்படியாக விளக்கினார். ஏசுவை ஆதி காலம் தொடங்கி அண்ட்ரெஸ் செர்ரானோவின் பிஸ் கிறிஸ்ட் (Piss Christ) வரை எப்படி எல்லாம் வரைந்தார்கள் என்று காட்டினார். வெர்மீரின் பால்காரி (The Milkmaid) ஓவியம் மூலம் ஓவியங்கள் வரையப்பட்ட காலகட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி விளக்கினார்.
நான் வெள்ளிமலையில் கலந்து கொண்ட வகுப்புகளில், மிகுந்த உழைப்பை கோரிய ஒரு முக்கியமான வகுப்பு இது. காலை எட்டு மணி முதல் இரவு 10.30 வரை பேசியும் தீராமல், இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியவை ஏராளமாக இருந்தன.
காணொளியில், ஆசிரியர், ஆறு வருட படிப்பில் சொல்லி கொடுப்பதை இரண்டரை நாளில் சொல்லி கொடுக்கிறோம் என்று சொன்னார். உண்மையில் மிக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களே 20 வருடங்கள் செலவிட்டு கற்றுக்கொள்வதை இவர் இரண்டு நாட்களில் சொல்லி தருகிறார்.
அறிவை விரிவாக்கிய ஓவியங்கள்
நவீன ஓவியத்தை புரிந்து கொள்ள சில வழிகள், புகைப்படங்களின் சரித்திரம், சில முக்கியமான புகைப்படங்களை பற்றிய அறிமுகம் இருக்கும் என்று வகுப்புக்கு வந்த எனக்கு ஒரு புதிய உலகின் கதவுகள் திறந்தன.
இரண்டு வருடங்கள் கழித்து, ஓவியம் ஒரு தொடர் கற்றலாக மாறி விட்டது. அவர் இரண்டு நாளில் சொல்லி கொடுத்ததில் ஒரு 50% உள்வாங்கவே எனக்கு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆசிரியர் பரிந்துரைத்த புத்தகங்களை தொடர்ந்து படிக்கிறேன் . ஓவியங்களை மட்டும் பார்ப்பதற்காக, மூன்று தனி பயணங்கள் சென்று வந்தேன்.
மைசூரில் ரவி வர்மா ஓவியங்களோடு சிவப்பு செரியல் (Cheriyal) ஓவியங்களை பார்த்து வியந்தேன். சென்னையில், லலித் காலா அகாடெமியின் கண்காட்சிகளுக்கும், ஓவியர் வான்காவின் மெய்நிகர் கண்காட்சிக்கும் சென்று வந்தேன். கடைசியாக பெங்களூரில், கரவாஜியோவின் மேரி மக்தலீன் ஓவியத்தை காண தோழியுடன் சென்றேன்.
“Goya’s Ghosts,” “F for Fake,” போன்ற ஓவியம் சம்பந்தமான பல நல்ல சினிமாக்கள் பார்த்தேன். ஓவியங்களை இன்னும் சிறப்பாக புரிந்து கொள்வதற்கு கிறிஸ்துவம் பற்றி படிக்க ஆரம்பித்தேன். அதன் தொடர்ச்சியாக சிறில் அலெக்ஸ் அவர்களின் கிறித்துவ வகுப்புகளுக்கு வந்தேன். அந்த வகுப்பிற்கு பிறகு பாரபாஸ், புத்துயிர்ப்பு நாவல்கள், காம்யுவின் கதைகள் எல்லாம் புதிய அர்த்தத்தில் புரிய தொடங்கின.
அதை தொடர்ந்து அஜிதனின் மேலை தத்துவ வகுப்புகளிலும் கலந்து கொண்டேன். அந்த வகுப்பு, இலக்கியம், தத்துவம் சார்ந்த இன்னும் பல வாசல்களை திறந்தது. காணொளியில் ஆசிரியர் சொல்வது போல உலகை புது வழியில் பார்க்க ஓவியங்கள் மிகப்பெரிய தூண்டுதலாக இருந்தன.
வகுப்பில் கற்றுக்கொண்ட முக்கியமான விஷயங்கள்
1. ஓவியங்களை முன் முடிவுகளோடு அணுக கூடாது. அது உங்களோடு உரையாடும் நேரத்தை அளிக்க வேண்டும். அதற்கு முன் தயாரிப்பு மிக முக்கியம்.
2. ஓவிய நுட்பங்களுடன், ஓவியரின் நிலை, ஓவியத்தின் பாணி, அது உருவாகிய காலகட்டம் அனைத்தையும் அறிவது முக்கியம். அனால், ஒரு போதும் ஓவியங்களை ஒரு தகவல் குவியலாக பார்க்க கூடாது. தகவல்கள் ஓவியத் தோடு உரையாட ஒரு வழி மட்டும்தான்.
3. நவீன ஓவியங்களில் பலவும் போருக்கு எதிராக, ஒரு உச்சக்கட்டம், இலக்கணங்களை மீறுவது போன்ற, ஒரு ஆன்ம அனுபவத்தை பதிவு செய்பவை.
4. ஓவியங்களை முழுமையாக புரிந்துக்கொள்ள தத்துவ பயிற்சியும், கவிதையை ரசிக்கும் மனமும், சரித்திர அறிவும் இன்றியமையாதவை.
5. இலக்கியம், இசை போல, ஓவியமும் சில சமயம் மனதை இலகுவாக்கும், பல சமயம் மனதை உலுக்கும் அனுபவத்தை தரும். ஒவியத்தோடு சேர்ந்து, நிறங்களின் கலவை, அரிய கட்டுமானங்கள், புகைப்படங்கள் அனைத்தையும் நாம் தானாக ரசிக்க ஆரம்பிப்பிப்போம்.
மைக்கேல் ஏன்ஜெலோவின் மரித்த ஏசுவை மடியில் இந்திய மேரியின் துயரும், பிக்காஸோவின் குஎர்னிகா (Guernica) ஓவியத்தில் இருக்கும் துயரும் ஒன்றுதான். மரணத்தை கண்டு “ஏன் இப்படி” என்று பரிதவிக்கும் மனிதனின் மனம். இதை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
தொடர் கற்றல் …
எங்கள் ஓவிய கற்றலில் ஒரு சிறிய தொய்வு ஏற்படும் பொழுது எல்லாம், ஜீவா ஒரு நல்ல கட்டுரை எழுதுவார். மீண்டும் அனைவரும் சுறுசுறுப்பாக ஓவியங்களை பார்க்க ஆரம்பிப்போம்.
ஏ. வி. மணிகண்டன் அவர்கள் “படிமம்” என்கிற வாட்ஸாப்ப் குழுமம் மூலம், தொடர்ந்து தன்னுடைய கருத்துகளையும், ஓவிய விவாதங்களையும் முன்னெடுக்கின்றார். நண்பர்கள் அவர்களுடைய சந்தேகங்களை கேட்பதற்கும், தங்கள் கருத்துக்களை பகிர்வதற்கும், விவாதிப்பதற்கும் ஏற்ற குழுமம் அது.
இந்த வகுப்பு இரண்டு நாளில் முடிவது இல்லை. வாழ்க்கை முழுவதும் நம்முடன் வர போகும் ஒரு கலையை தெரிந்து கொள்வதற்கான ஒரு அற்புதமான தொடக்கம். கர்நாடக இசை வகுப்பில் “காது திறக்க” வேண்டும் என்று ஜேகே சார் சொன்னார். இந்த வகுப்பில் ஓவியங்களை சரியாக ரசிப்பதற்கான கண்கள் திறந்தன.
மிகுந்த நன்றிகளுடன்,
நாகநந்தினி