வாசகன் என்னும் ஆணவம் என்ற கட்டுரை வாசித்தேன். இந்தக் குறிப்பிட்ட விஷயத்தை நானும் கவனித்ததுண்டு. பொதுவாக நம் முகநூலில் வாசிப்புப் பழக்கம் இல்லாத சாமானியரானாலும் சரி, கொஞ்சம் புரட்டிப்பார்க்கும் வழக்கம் கொண்டவர்களானாலும் சரி, எழுத்தாளர்களை அவர்களின் அடக்கத்தை வைத்தே மதிப்பிடுகிறார்கள். நல்ல அடக்கமான எழுத்தாளர் என்றால் பாராட்டு. அவருக்கு அடக்கம் இல்லீங்க என்று வசை. ஆனால் எந்த எந்த முதலாளிக்கும், எந்த அரசியல்வாதிக்கும் அடக்கம் தேவை என்று இவர்கள் சொன்னதே இல்லை. இவர்களின் பார்வையில் அடக்கம் என்பது சிந்திப்பவனும் வாசிப்பவனும் மட்டும் கொள்ளவேண்டிய ஒரு குணம். அதாவது தான் அவர்களை விட சாமானியன் தான் என எழுத்தாளனும் சிந்தனையாளனும் வாசகனும் அவர்களே ஒப்புக்கொள்ளவேண்டும். அப்படி ஒப்புக்கொள்ளாவிட்டால் அவர்களை வசைபாடுவார்கள்.
அவ்வப்போது எவனாவது முகநூல் அற்பன் இப்படிச் சொல்வதுண்டு. எனக்கு எரிந்துகொண்டுவரும். ஏண்டா உன்னைப்போன்ற மூட ஜென்மங்கள் உள்ள ஊரில் அவர் ஏனடா அடக்கமாக இருக்கவேண்டும்? உன்னை எல்லாம் ஒரு மனிதனாக ஏன் அவர் எண்ணவேண்டும் என்றுதான் கேட்பேன். இந்த அற்பர்களின் மிரட்டலுக்குப் பணிந்து தன்னடக்கம் என்றெல்லாம் பாவலா காட்டும் எழுத்தாளர்களைக் கண்டால் அருவருப்புதான் வரும்.வித்யாகர்வம் என்பதுதான் உண்மையான வித்யையின் அறிகுறியே ஒழிய போலி நடிப்பு அல்ல. நானெல்லாம் ஒண்ணுமே இல்லீங்க என்று சொல்லும் எழுத்தாளன் சரஸ்வதியை அவமதிப்பவன். அவனுக்கு தேவை அவனை வாசிக்காத நான்கு தற்குறிகளின் ஆகா சத்தம் என்றால் அவனெல்லாம் என்ன மாதிரி மனிதன் என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது.
ஜெய்கணேஷ் ரவி