அன்புள்ள ஜெயமோகன்,
வேதாந்தம் பற்றிய உங்களுடைய காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். தமிழில் வேதாந்தம் என்பது வயோதிகளுக்கான ஒரு விஷயம் என்ற எண்ணம் உள்ளது .உண்மையில் வயோதிகர்கள் மட்டுமே வேதாந்த விஷயங்களை கவனித்து வருகிறார்கள். வேதாந்தம் என்பது துடிப்பான இளைஞர்களுக்கான ஒரு சிந்தனை என்று விவேகானந்தர் நூறாண்டுகளுக்கு முன்பு நிறுவினார். நவ வேதாந்தம் என்று நீங்கள் சொல்லும் விவேகானந்தரின் வேதாந்தம் அந்த இடத்தை தான் அடைந்திருந்தது. இன்று அது ஒரு தத்துவம் என நினைக்கப்படுவதில்லை. ஒரு மதநம்பிக்கையாக மட்டுமே மாறி இருக்கிறது .அதற்கு விவேகானந்தரின் வேதாந்த நிறுவனங்களும் ஒரு காரணம். அவர்கள் நிறுவனங்களை நடத்துவது, வெறும்கருத்தரங்களை நடத்துவது ஆகியவற்றுடன் நின்றுவிடுகிறார்கள் . பக்தர்கள் என்று காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள் ஒழிய விவேகானந்தர் சொன்னது போல வேதாந்த இளஞ்சூரியன் ஆக தென்பட எவரும் இல்லை .
இந்தச் சூழலில் நாராயண குருவின் மரபிலிருந்து ஒரு அறிவார்ந்த வேதாந்தத்தை தமிழுக்கு கொண்டு வந்து அறிமுகம் செய்திருக்கிறீர்கள். அந்த வேதாந்தத்தை எந்த வகையான பக்தி ஆசாரங்களுடனும் இணைக்காமல் தூய அறிவின் வழியாகவே மக்களுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் இருக்கிறீர்கள். அதை ஒட்டி ஒரு சிறு இளைஞர் குழுவும் உருவாகியுள்ளது. அவர்கள் அனைவருமே படிப்பவர்களாகவும் எழுதுவதாகவும் இருக்கிறாகள்ர் என்று அறிந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
உண்மையில் வேதாந்தம் இளைஞர்களுக்காக மட்டுமே சொல்லப்பட்ட வேண்டிய ஒன்று. வேதாந்தத்தின் சாரம் என்பது செயலை சிறப்பாக செய்வது, எப்படி செயலுடன் இணைந்துள்ள உணர்வுகள்,கவலைகள் ஆகியவற்றை நம்முடன் இணைத்துக் கொள்ளாமல் செயலாற்றுவது என்பதே. கீதை அதைத்தான் சொல்லுகிறது .செயலாற்றுவதற்கான உடல் பலமும், செயலாற்றுவதற்கான மனோ பலமும் , செயலுக்கான தேவையும் இருப்பவர்களுக்குத்தான் வேதாந்தம் மிகப் பெரிய அளவில் பயன்படும் .செயல் திறமை இழந்து வீட்டில் அமர்ந்து கிருஷ்ணா ராமா என்று ராமஜெபம் செய்பவர்களுக்கு வேதாந்தம் வெறும் பக்தியாக மட்டுமே தோன்றும். இந்த உலகத்தை வெல்வது எப்படி என்று தான் வேதாந்த கற்பிக்கிறது என்று விவேகானந்தர் சொல்கிறார். வெல்லத் துடிக்கும் இளைஞர்களுக்கு உரியது வேதாந்தம். ஆனால் அவ்வாறு இன்று நம்மிடம் எவருமே பேசிக் கொண்டிருப்பதில்லை .நீங்கள் அதை பேசுகிறீர்கள் உங்கள் காணொளிகள் அதைத்தான் சொல்லுகின்றன.
உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஜெம் சத்யநாராயணன்












