வாழ்வின் இன்னொரு முகம்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் காணொளிகளில் வந்து கொண்டிருக்கும் வாழ்க்கை சார்ந்த ஆலோசனைகள் பெரும்பாலும் வாழ்க்கையை ஏதேனும் ஒரு அந்தரங்கமான செயல் வழியாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாகவே உள்ளன .நானும் என் வாழ்க்கையை மிகப்பெரிய ஒரு சலிப்பை உணர்ந்தவன். ஓய்வு பெற்ற பிறகு பழைய தொழிற்சங்க பணிகளிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வந்தேன். ஆனால் என்னுடைய கௌரவம் அங்கே குறைகிறது என்று தெரிந்த பிறகு விலகிக் கொண்டேன் .மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே உட்கார்ந்து இருந்தேன். அந்த நாட்கள் மிகக் கொடுமையானவை. என் உடல்நலம். சீரழிந்தது மனநலம் அதைவிட சீரழிந்தது. உறவுகளும் சிக்கலாக ஆயின.

ஒரு கட்டத்தில் என் அப்பாவைப் போல நானும் வைணவக் கோவில்களுக்கு செல்ல தொடங்கினேன். அதன்பிறகு வைணவ கோயில்களை பற்றிய சிறிய குறிப்புகளை எழுதி அச்சிட்டு வைணவ ஆர்வம் கொண்டவர்களுக்கு அந்த கோயில்களில் இருந்து கொடுக்க ஆரம்பித்தேன். என் வாழ்க்கைக்கு ஒரு நிறைவையும் பொருளையும் அது அளிக்க தொடங்கியது. சென்ற 10 ஆண்டுகளுக்கு மேலாக வைணவம் சார்ந்த பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறேன். ஒருநாள் கூட வீட்டில் தங்குவதில்லை .

என்னுடைய ஒரு நண்பர் என்னைப் போலவே ஓய்வு பெற்ற பிறகு அவரும் தீவிரமாகத் தான் இருக்கிறார். அவர் இப்போது ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கிறார். ஆனால் அவரிடம் மகிழ்ச்சி என்பது இருப்பதில்லை. எப்போதுமே பதற்றம் சீற்றமும் கொண்டவராகவே தான் இருக்கிறார். அந்த வயதில் அந்த தொழிலை கையாள அவரால் முடியவில்லை .இளைஞர்கள் தன்னை ஏமாற்றி விடுவார்கள் என்று அவர் நம்புகிறார். ஆகவே எப்போதுமே எச்சரிக்கையாகவும் பதற்றமாக இருக்கிறார்.

அவருடைய பிள்ளைகள் எல்லாம் நல்ல தொழிலுக்கு சென்று விட்டார்கள். இப்போது அவருக்கு பணத்தை ஒன்று இல்லை. அப்படியென்றால் இதே இதை செய்கிறீர்கள் என்று கேட்டால், ‘ஏதாவது செய்ய வேண்டுமே வீட்டில் சும்மா இருக்க முடியாது’ என்று பதில் சொன்னார் . ‘அதற்கு தொழில் தான் ஒரேவழி அல்ல. எந்த பண லாபமும் இல்லாத, எவரும் நம்ம ஏற்றி ஏமாற்றிவிட முடியாத பல விஷயங்கள் உள்ளன .நம்முடைய ஆத்மாவுக்கான வேலை எதையாவது செய்யலாமே?’ என்று நான் சொன்னேன்.

ஆனால் அவருக்கு அதை புரிந்து கொள்ள முடியவில்லை அவருடைய மனநிலை என்பது வாழ்க்கை என்பது ஏதேனும் தொழில் செய்து பணம் ஈட்டுவ்து மட்டும் தான் அப்போதுதான் தெரிந்தது. ஒருவருக்கு 60 வயது வரைக்கும் எந்த வகையான ஆன்மீகமும் இலக்கியமும் கலையோ பழக்கவில்லை என்றால் அதற்குப் பிறகு ஒன்றை தொடங்குவது என்பது அநேகமாக சாத்தியமே இல்லை .இது ஒரு பெரிய இழப்புதான். ஆனால் எவ்வளவோ பிற்விக் குறைகளை போல ஒன்றுதான் இதுவும். இதற்கு எந்த வழியும் இல்லை.

உங்களுடைய காணொளிகள் வழியாக முற்றிலும் லௌகீக வாழ்க்கைகுள்ளையே சிக்கிக் கொண்டவர்கள் எதையும் அடையப்போவதில்லை .ஏற்கனவே அங்கே சிக்கிக் கொண்டு அதிலிருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த காணொளிகள் பயனுள்ளவை.

ஆர்.ரங்கநாதன்

முந்தைய கட்டுரைபறவை பார்த்த குழந்தை, கடிதம்