வேதங்களைக் கற்பது…

அன்புள்ள ஜெயமோகன்

நான் உங்களுடைய காணொளிகளை தொடர்ந்து பார்க்கையில் வேதங்களைப் பற்றி நீங்கள் பேசி இருப்ப ஒரு காணொளியை கண்டறிந்தேன் .அது முக்கியமான ஒரு உரையாடல் .வேதங்களை எப்படி அணுக வேண்டும் என்பதை பேசி இருக்கிறீர்கள்.

வேதங்களை அறிய முடியாத மறைஞானத்தை கொண்ட ரகசிய நூல்களாகவும், அதை அறியும் உரிமையும் தகுதியும் சிலருக்கே உண்டு என்றும் நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே உலகம் முழுக்க தொன்மையான நூல்கள் இவ்வாறு மறைஞான நூல்களாக மாற்றப்பட்டு சிலருடைய தனி உடைமையாக ஆக்கப்பட்டுள்ளன. ஐ-சிங் போன்ற சீன மெய்ஞான நூல்களை வெறுமை நாடி ஜோதிட நூல்களைப் போல பயன்படுத்துவது இன்றைக்கு காணக் கிடைக்கிறது. தென்தமிழ்நாட்டில் பழைய மருத்துவச் சுவடிகளையும் கேரளத்தில் மந்திரவாச்த சுவடிகளையும் கூட இவ்வாறு ரகசியச் சொத்தாக வைத்திருக்கிறார்கள்.

இது ஒரு இந்திய மனநிலை அல்லது கீழ்நாட்டு மனநிலை. இந்த மனநிலை அறிவுக்கு உரிமையை கொண்டாடுவது எதற்கென்றால் பழைய காலத்திலே அறிவு என்பது ஒரு அதிகாரமாகவும் இருந்தது என்பதனலதாப்ன். அறிவைக் கொண்டு ஒருவர் ஒரு அதிகாரத்தை நிறுவி விட முடியும் என்ற நிலைமை இருந்தது. அந்த அதிகாரம் இன்று சில பகுதிகளில் செல்லுபடியாகிறது.

நாம் இன்னமும் கூட வேதங்களை அவர்கள் உருவாக்கிய அந்த பிரமையை அடிப்படையாகக் கொண்டுதான் புரிந்து கொண்டிருக்கிறோம். அதற்கு அப்பால் வேதங்கள் இன்று அனைவரும் கற்கக் கூடியதாகத்தான் உள்ளன. அவற்றின் கவித்துவமும் தொன்மையும் நமக்கு முக்கியமானவை.

அவற்றை பிழையின்றி சரியாக ஓதுவது என்பது வெறும் சடங்கு மட்டும்தான். அதற்கான பயிற்சியைத்தான் வேதக்கல்வி என்று இன்றைக்கு சொல்கிறார்கள். அந்தச் சடங்கு சிலருக்கு இன்றைக்கு தேவையான இருக்கலாம். அதன் பொருட்டு சில புரோகிதர்கள் ஓதக் கற்றுக் கொண்டிருக்கலாம். ஞானத் தேடல் கொண்டவன் கற்க வேண்டியது வேதத்தின் பொருளைத்தான். அதன் வழியாக அவன் வந்தடைய வேண்டியது வேதாந்தத்தைத்தான். அதை தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

மா.கோதண்டராமன்

முந்தைய கட்டுரைபிரபஞ்சமும் நம் வாழ்வும், கடிதம்