அத்வைதம் வேர்விடுதல்..

அன்புள்ள ஜெயமோகன்

 உங்களுடைய கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். இந்த தளத்தில் நீங்கள் வேதாந்தம் பற்றி எழுதும் கட்டுரைகள் முக்கியமானவை. தமிழ்ச் சூழலில் ஒரு பிரம்மாண்டமான கற்பாறைக்குள் ஒரு சிறிய வேர் நுழைவது போலத்தான் இவை நுழைந்தன. தொடக்கத்தில் இந்த கட்டுரைகள் எல்லாம் ஒரு சிறு புழு போல நுழைகின்றன ,இவை நசுக்கப்பட்டு விடும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது .ஆனால் அவை வேர் என்ற எண்ணத்தை இப்போது அடைகிறேன். மெல்ல மெல்ல அவை உயிர் ஆற்றலை திரட்டிக் கொண்டு, பாறையில் ஒரு விரிசலை உருவாக்குவதை காண்கிறேன் .

தமிழகம் மிகப் பெரிய ஒரு அரசியல் விழிப்புணர்வை கொண்ட மாநிலம் என்பதை மறுக்க முடியாது. நாத்திகவாதம் வழியாகத்தான் அந்த அரசியல் விழிப்புணர்வை தமிழகம் அடைந்தது என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் நாத்திகவாதம் இங்கே ஆன்மிகத்தை இல்லாமல் செய்து விட்டது. இங்கு இருப்பது வெறும் பக்தி தான். அது ஆன்மீகம் அல்ல .ஆன்மீகத் என்பது அதன் தரிசனத்தாலும் சத்திய தத்துவத்தாலும் ஆனது .அது இரண்டையுமே இங்குள்ள நாத்திகவாதம் அழித்துவிட்டது என்று சொல்லலாம். இங்கே ஒருவர் உலகியல் நாத்திகம் கொண்டு இருக்கிறார், அல்லது உலகில் பக்தி கொண்டிருக்கிறார் என்று நீங்கள் உங்கள் உரையில் சொல்கிறீர்கள், அதுதான் உண்மை.

 மெய்யான ஆன்மீகம் இல்லாமல் ஆகிவிட்டது. ஆகவே நம்மால் இயற்கையை வழிபட முடியவில்லை. ஒரு மகத்தான சந்தர்ப்பத்தில் மிக நெகிழ்ந்து நிற்க முடியவில்லை. மதமற்ற ஆன்மிகம் கூட நமக்கு சாத்தியமாகவில்லை. இந்தச்சூழலில் நீங்கள் அத்வைதத்தை அறிமுகம் செய்கிறீர்கள். அத்வைதம் மதம் அல்ல. மதம் கடந்த ஒரு பிரபஞ்ச தரிசனம்.. அத்தகைய ஒரு பார்வையை தமிழ்ச்சூழலில் இங்குள்ள உலகியல் மனநிலைகளுக்கு முன்பாக வைப்பது என்பது ஒரு தற்கொலைத் தனமான முயற்சி .ஆனால் 40 ஆண்டுகளாக இடைவெளி இல்லாமல் உங்கள் மீதுள்ள உங்கள் நம்பிக்கையுடனும், உங்கள் குரு மீதான  நம்பிக்கையுடனும் அதை செய்து முடித்திருக்கிறீர்கள். உங்கள் குரு உங்களுக்கு கிட்ட ஆணை உங்கள் கண் முன்னால் நிறைவேறி வருவதை இன்று காண்கிறேன். உங்களுடைய அமைப்புகள் செயல்பாடுகள் எல்லாம் ஏற்பு பெற்று வருவதை பார்ப்பது  மன நிறைவை அளிக்கிறது. என்னுடைய ஆசிகள்

எம்.கே.ஆர்.மகாதேவன்

முந்தைய கட்டுரைஆயுர்வேத- வாழ்க்கைமுறை அறிமுகம்