10 வயது குழந்தையை உற்சாகப்படுத்துவது சுலபமல்ல. திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி படம், ஆற்றில் நீராடல், உதகை பயணம், அருவியில் நனைதல், Barbeque Nation உணவக மதிய உணவு, சபரி மலை ஐயப்பன் கோவில் தரிசனம் போன்ற பல முயற்சிகளும் செய்தோம். ஆனால் ஒவ்வொரு அனுபவத்திற்குப் பிறகும் “முழுமையாக மகிழ்ந்தான்” என்று சொல்லமுடியவில்லை. அவனுக்கும் அந்த நிகழ்வுகள் எவ்வளவு முக்கியம் என்பதையும் எங்களிடம் அவனுக்கு வெளிப்படுத்த முடியவில்லை.
அதே சந்தேகத்தோடு அவன் பறவை பார்த்தல் வகுப்பில் கலந்துகொண்டான். ஆனால் ஆசிரியர் விஜயபாரதியின் முதல் வகுப்பே அவனை முற்றிலும் புதிய உலகிற்கு அழைத்துச் சென்றது. பறவைகளின் வடிவம், சத்தம், இயல்புகள், வகைகள், பாகங்கள், சிறப்பம்சங்கள், வாழ்வியல் என அற்புதமான அறிமுகம் கிடைத்தது.
ஆசிரியரின் சொற்கள்:
“இந்த உலகில் உள்ள பல்லாயிரக்கணக்கான உயிரினங்களில் ஒரே ஒரு இனத்தை முழுமையாக அறிந்தால், உலகையே அறியலாம்” — அவனது மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
மூன்று நாள் களப்பயிற்சியில் ஆசிரியர்கள் ஈஸ்வர் மற்றும் அன்பரசி உதவியுடன் குறைந்தது 50 பறவைகளை அடையாளம் காண கற்றுக்கொண்டான்.
அதோடு, அந்த வகுப்பில் அறிமுகமான 10 சிறுவர்கள் வாழ்நாள் நண்பர்களாக ஆனார்கள்.
மூன்று நாட்களும் அவர்களின் உரையாடலில் பறவைகளே மையமாக இருந்தது.
எப்போதும் “Bore” அடிக்கும் அவனுக்கு அந்த மூன்று நாட்கள் எப்படிப் போனது என்பதே தெரியவில்லை.
அவனுள் நிகழ்ந்த மாற்றங்கள் பல அவற்றில் நாங்கள் கண்டது,
அதிகாலையில் உற்சாகமாக எழுதல்
குளிர்ந்த நீரில் தயக்கமின்றி குளித்தல்
சாப்பாட்டில் குறை கூறாமல் சாப்பிடுதல்
நீண்ட தொலைவு நடந்தாலும் சோர்வை மறந்து பயணம் செய்தல்
நண்பர்களுடன் இயல்பாக பழகுதல்
இந்த சிறிய பயணத்திலிருந்தே அவனுள் ஏற்பட்ட பெரிய மாற்றங்கள் எங்களை வியக்க வைத்தன.
ஒரு சாதாரண பொழுதுபோக்கு அனுபவம் அல்லாமல், பறவை பார்த்தல் அவனது வாழ்க்கையில் புதிய கற்றலையும், சுய மாற்றத்தையும் உருவாக்கியது. அடுத்த வெள்ளிமலை வகுப்பை எங்களின் குடும்பம் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.
பிரபாகரன்
கோவை