தம்மம்- ஒற்றைப்பலகையில்

 

அன்புள்ள ஜெ,

வணக்கம். குவைத்திலிருந்து கோவை வந்து சேர்ந்ததும் நான் கண்ட முதல் மலர் அதுதான். வீட்டுவாசலில் தொட்டாச்சிணுங்கி ஒன்றை அம்மா நட்டு வைத்து அதில் ஒற்றை மலரொன்று மலர்ந்திருந்தது. கேட்டால் கொடுக்கும் வாஸ்து மலராம் என்றார் அம்மா. ஒரு கோடி கேட்டுப்பாருங்க, குடுத்தா எனக்கு என்று கிண்டல் செய்தேன். ஆனால் தனியே ஒரு புலர்காலைப் பொழுதில் எதிரே மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் மோனத்திருக்க, முதல் மலைத்துளி என் நெற்றி தொட அந்த செவ்வூதா மலரிடம் பேசிகொண்டிருந்தேன். இந்த முறை விடுமுறையில் மனம் நிறைக்கும் அனுபவம் ஏதேனும்  கிடைக்தமையாதா என.

எப்படியோ அடித்துப்பிடித்துத்தான் விபாசனா வகுப்பிற்கு பயணித்தேன்.  வெள்ளிமலையேறியதும், என்னை வரவேற்றது மலை முழுதும் பூத்துக்கிடந்த அதேசெவ்வூதா தொட்டாசிணுங்கி மலர்கள் தான்.  என் வீட்டு மலர் இறைஞ்சி இருக்கிறது போலும், ஒராயிரம் மலர் சுமந்த அந்த மலை தேவதையிடம்  இவளுக்காய் வகுப்பொன்றைத் தந்துவிடு என்று. மேலும் அங்காங்கே வெள்ளை நீலச் சிறு மலர்கள். ஒரு சிறுமலரின் அருகிருப்பே போதுமாயிருந்தது மனம் மலர்ந்து போக. அதினும்பெரிதாய், பெரிதினும்பெரிதாய் பேரருள் பொழிவாய்க் கைகூடியது அமலோற்பவம் ஒத்த முழுமையான மலர்வின் மனநிலை , விபாசனா வகுப்பின் அமர்வுகளில்.

ஏற்கனவே தம்மா விபாசனா பத்து நாள் மௌன அனுபவங்கள் சில உண்டு. மகிழ்ந்திரு என்பது அங்கே தம்மாவின் முத்திரைச்சொல். இங்கேயோ மழையில் பூரித்திருந்த   மலையில் நிறைவில், கனிந்த ஆசிரியரின் அருகிருப்பில் “மலர்ந்திரு” என்ற பதம் என் உள்ளே ஓடிக்கொண்டே இருந்தது.

ஆசிரியர் அமலன் ஸ்டான்லி அவர்களை கண்திறந்து பார்த்திருந்ததை விடஅவர் குரல்  கேட்டிருந்தது தான் அதிகம். கண்மூடிய அமர்வுகள் ஒவ்வொன்றும், ஒவ்வொருமுறையும், ஒன்றரை மணிநேரத்திற்கும் மேல் சென்றது. எனினும் எங்கள் இருப்பை சமநிலைக்குக் கொண்டுவர அவர் குரலுக்கும் வார்த்தைகளுக்கும் ஓரிரு நிமிடங்களே பிடித்தன. 

தொடர்ந்து எங்கள் மனதோடும் உடலோடும் இனிதாய் உறவாடி மெல்லிய, துல்லிய, தெள்ளிய கட்டளைகள்  மூலம்  மனதை  இழுக்கவும், விரிக்கவும், ஒடுக்கி  உள்ளே ஓர் புள்ளியில் அமரச்செய்யவும்,  உடல் முழுதும் உலவச்செய்யவம், அந்த மலைமுழுதும் பரவச்செய்யவும் வித்தை தெரிந்த குரலொன்று. கார்வையும் கோர்வையும் கூடிவந்த குரலொன்று. ஆதியில் குரலொன்று இருந்தது, அது அங்கே அந்த மலையில் அவர் குரலாய் ஆகிவந்தது.  மிகையில்லை, பெய்த மழை, குளிந்த நிலம், கூவிய பறவை, நகரும் எறும்பு, ஓடிய ஓடை ,நின்ற மரம், ஊர்ந்த உயிர்கள் எல்லாமும் அந்த வார்த்தை வசீகரத்தில் சிக்கிச் மோன தவச் சமன(ண)த்தில் இருந்தது. 

தம்மம் முழுவதையும் ஒற்றைப்பலகையில் விவரித்து நுணுக்கி எழுதி வைத்திருந்தார் ஆசிரியர், இடையிடையே அந்த தத்துவ விவரணைகளை நுணுக்கமாக ஆனால் மிக எளிமையாய் பகிர்ந்து கொண்டிருந்தார். அமர்வது, நிற்பது , நடப்பது எல்லாவற்றிலும் ஒரு முழுமையின் மலர்வை கொண்டு வர அறிவுறுத்திய அதே நேரம், மிகக் மென்மையான அதிட்டாங்க யுத்திகளால் அமர்ந்திருப்பதே ஆனந்த அனுபவம் ஆனது. கேள்வி பதில்கள் எல்லாம் கோவன், ஜென் கதைகளால் சுவையேறி கலகலப்புப்பொழுதுகளாயின.

 இண்டஸ்ரியல் மெலனிசம், டாக்ஸிகாலஜி , ஆசிரியர் அனுபவங்கள், தனித்தனி மாணவ சந்திப்பு உரையாடல், சுவையான புத்தர்வாழ்க்கை கதைகள் , இடையிடையே தியான மணியொலி கவனகவிளையாட்டுகள் வேறு. விபாசனாவின் பல வழிகளை ஆராய்ந்தோம், அனுபவித்தோம், துளைத்துத் திளைத்தோம். வகுப்புகள் எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருந்தோம். கொட்டும் மழையிலும், ஒருவர் கூட, ஒரு நிமிடம் கூட ,ஒரு வகுப்பில் கூட  தாமதமாய் வராத, தவறவிடாத  முழுமையான அர்ப்பணிப்பின் அருமலராய் மலர்ந்து கிடந்தது எங்கள் வகுப்பும், இருப்பும், தவமும், தியானமும்.  

எங்கள் மௌனத்தையும், தியான நிறைவையும் உலகம் முழுதும் இன்புற்றிருக்கட்டும் என பகிர்ந்தளித்த வண்ணம் வகுப்பை நிறைவு செய்தோம். மனமின்றி மலை இறங்கினோம். 

மலையிறங்க மனமில்லை எனச்சொல்ல நதிக்கு வழியில்லை. ஆயினும் வானக்கடல் கொள்ள இந்த நதி வளைந்து மீண்டும் மலையேறி விண்ணேகும். 

வெள்ளிமலையின் ஒவ்வொரு வகுப்பும் உன்னதம் என்பேன். ஒவ்வொன்றாய் அருளித்தாருங்கள் வெள்ளிமலைமலர்ந்த செவ்வூதா மலர்களே, ஒரு கோடி வகுப்புகள் இனி வேண்டும். 

உணவளித்த அம்மா, ஒருங்கிணைத்த மணி அண்ணா , உடன் அமர்ந்தோர், உடன் உறைந்தோர் அனைவருக்கும் , ஆசிரியர் அமலன் ஸ்டான்லி, மற்றும் முழுமைஅறிவின் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி.

இனி எப்போது வரும் இன்னொரு வகுப்பு என்ற ஏக்கத்தூடே விமானம் ஏறுகிறேன். இந்த ஏக்கம், இழுத்து வந்து எத்தி வைக்கட்டும் இன்னும் ச் என்னுள்ளே  கற்றலின் மலர்வை.

வணக்கம்,

சலீகா 

குவைத்.

 

முந்தைய கட்டுரைஏழாம் உலகின் கதை