
அன்புள்ள ஜெயமோகனுக்கு, வணக்கம்.
கடந்த வாரம் வெள்ளிமலையில் நடைபெற்ற மரபிசை அறிமுக வகுப்பில் என் மகன் கனிவமுதனோடு கலந்து கொண்டேன். கனி நான்கைந்து ஆண்டுகளாக இசை பயின்று வருகிறான். அவனோடு சேர்ந்து பயணிப்பதால் சற்று இசை குறித்த அறிமுகம் இருந்தபோதும், சற்று விரிவான, தெளிவான அறிமுகம் வேண்டியே அந்த வகுப்பிற்கு வந்தேன். கூடுதலாக பாதிக்கு பாதி நேரமேனும் இசை ஒலித்துக் கொண்டிருக்குமென்பதால் கனிக்கும் அந்த வகுப்பு விருப்பமானதாகவே இருக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது. நான் நினைத்தது போலவே எங்கள் இருவருக்கும் மிகுந்த நிறைவான அனுபவமாக அமைந்தது.
வகுப்பிலேயே ஜெயக்குமார் குறிப்பிட்டது போல யூட்யூபில் கிடைக்கும் கர்நாடக சங்கீதம் தொடர்பான விளக்கவுரைகள் எல்லாமே ஏற்கனவே இசை கற்றவர்களிடம் மேற்கொண்டு நுணுக்கங்களைக் குறித்து விளக்குவதாகத்தான் இருக்கின்றன. மரபிசைக்குள் நுழைய முயலும் ஆரம்ப நிலை ரசிகர்களுக்கு திறக்கும் கதவுகள் எங்கும் தென்படுவதில்லை. நம்மாலானது தமிழிசைப் பாடல்களைக் கேட்டு, ஓரளவு ரசிக்கப் பழகுவது மட்டுமே. இந்நிலையில் இசைக்கான இந்த வகுப்பு ஒரு இனிய ஆச்சரியமே. இப்படியொரு செயலை முன்னெடுப்பதற்காக உங்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும்.
ஆரம்பத்தில் எனக்கு இருந்த தயக்கம் கனியின் சற்று வேறுபட்ட நடவடிக்கைகளை வகுப்பெடுக்க இருக்கும் ஆசிரியரும், சக மாணவர்களும் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்பதே. அதற்காகவே பலமுறை அந்தியூர் மணி அவர்களிடம் பேசி உறுதிப் படுத்திக் கொண்டேன். அவர் சொல்லியும் கூட எனக்குள் சிறிது அவநம்பிக்கை இருக்கவே செய்தது. ஆனால் நேரில் வந்தபின் அங்கிருந்த சூழல் மிகுந்த வியப்பளித்தது. கனியை ஏற்றுக் கொள்வதில் யாருக்கும் எந்தவித சுணக்கமும் இல்லை. எனவே சூழல் மிகுந்த ஆசுவாசம் அளிப்பதாக இருந்தது.
ஜெயக்குமார் பேசுகையில் நடப்பதும், அவர் பாடும்போதோ அல்லது பாடலை ஒலிபரப்பும்போதோ நின்று ரசிப்பதும் என கனி உற்சாகமாக இருந்தான். சுற்றியிருந்த அமைதியும், சுத்தமான காற்றும் எங்களுக்கு நல்ல உறக்கத்தையும் தந்தது. இரண்டாம் நாளிரவு எல்லோரும் சேர்ந்து பாடிய பொழுதில் கனியும் உற்சாகமாக பங்கெடுத்தான். கனியை அழைத்துக் கொண்டு தனியாக பயணிப்பது குறித்து எனக்கிருந்த தயக்கங்களும் தகர்ந்தது இப்பயணத்தின் இன்னொரு லாபம்.
மலைச்சூழலில் நடை, இதமான தட்பவெப்பம், தூய்மையான காற்று என உற்சாகமான இந்த நாட்கள் என்றும் நினைவிலிருக்கும். இசையறிமுகத்திற்கான இரண்டாம் நிலை வகுப்புகளைத் திட்டமிட்டு வருவதாக ஜெயக்குமார் சொன்னார். அவசியம் வர வேண்டும் என நினைத்திருக்கிறோம்.
முகாமின் மற்றொரு சிறப்பு அருமையான உணவுதான். சுவையான, தரமான உணவை ஆக்கியளித்த சரஸ்வதி அம்மாவுக்கு என் நன்றி.
பயணத்தில் இருந்த ஒரே ஒரு சிறிய சிக்கல் – கனியின் இரவுணவுதான். அவனுக்கு GFCF – gluten free casein free என்ற டயட் பின்பற்றுகிறோம். எனவே பால் பொருட்களோ கோதுமை உணவுகளோ அவனுக்கு அளிப்பதில்லை. பால் சேர்க்காத சத்துமாவுக் கஞ்சியை அறையிலேயே கெட்டிலில் தயாரித்துக் கொண்ட என்னால் இரவு உணவுக்கு சரஸ்வதி அம்மாவை தொந்தரவு செய்வதைத் தவிர்க்க முடியவில்லை. 40-50 பேருக்கு ஒற்றையாளாக சமைப்பதின் சிரமங்களை அறிந்திருப்பதால் அவரிடம் நானே தோசை ஊற்றிக் கொள்கிறேன் என்றும், அல்லது அவருக்கு வேறெதும் உதவி செய்கிறேன் என்றும் கேட்டுப்பார்த்தபோதும் எல்லா அம்மாக்களையும் போல அவர் அதற்கு இணங்கவில்லை. மற்ற வேலைகளுக்கு நடுவில் சற்று முணுமுணுப்போடேனும் கனிக்கு தோசைகள் சுட்டுத் தரவே செய்தார். ஆனால் எனக்குத்தான் அவரை சிரமப்படுத்துகிறோம் என்ற குற்ற உணர்வு எழுந்தது.அடுத்த முறை வருவதானால் அவனது இரவுணவுக்கான மாற்று ஏற்பாடுகள் எதையேனும் யோசிக்க வேண்டும்.
மற்றபடி இவ்வளவு அருமையான வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்ததற்காக உங்களுக்கும், ஜெயக்குமார், அந்தியூர் மணி ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி.
அன்புடன்,
லக்ஷ்மி
அன்புள்ள லக்ஷ்மி
வெள்ளிமலை ஒரு குருகுலபாணி கல்விநிலையம். அத்தகைய கல்விநிலையத்தை குறைந்தபட்ச வசதிகளுடன், ஒரு மலைவாழ்க்கைக்குரிய முறையில், அமைக்கவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். ஆகவே நாங்கள் குழந்தைகள் வரும் என நினைக்கவில்லை. ஆனால் குழந்தைகள் இயற்கையான சூழலை பெரிதும் விரும்புகிறார்கள் என கண்டுகொண்டோம். எல்லா வகையான குழந்தைகளுக்கும் அந்த இடம் பெரிய விடுதலையாக இருந்தது. ஆகவே குழந்தைகளுக்கான வகுப்புகளை நடத்த ஆரம்பித்தோம். ஆனால் குழந்தைகளுக்கான எல்லா வசதிகளையும் அங்கே செய்ய முடியாது – அது அடிப்படையில் மலைவாழிடம் மட்டுமே. தனித்த வசதிகளை முன்னரே யோசித்து அதற்குரிய வசதிகளுடன் பெற்றோர் வருவதே இயல்பானதாக இருக்கும். கனி அந்த இடத்தில் மகிழ்ச்சியாக இருப்பான் என எனக்குத் தெரியும். அவனுக்கு என் அன்பு.
ஜெ












