திரைப்பட உருவாக்கம்- திரைரசனை பற்றி ஒரு பயிற்சி வகுப்பை இயக்குனர் ஹரிஹரன் அவர்கள் வரும் நவம்பர் மாதம் முழுமையறிவு சார்பிலே நடத்தவிருக்கிறார். அதைப்பற்றிய ஓர் ஐயம் என்னிடம் கேட்கப்பட்டது. ஏன் இன்றைய காலகட்டத்தில் ஒருவர் திரைப்பட ரசனையைக் கற்றுக்கொள்ள வேண்டும்? திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டும்தானே? அதை கற்றுக்கொண்டு முறையாக ரசிக்க வேண்டிய அவசியம் என்ன?
அத்துடன் ஏன் திரைப்பட உருவாக்கத்தை சாமானியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்? அவர்கள் திரைப்படத்தை உருவாக்கப்போவதில்லையே?
அதற்கு என் பதில் இதுவே.
திரைப்படம் என்பது இன்று வெறும் கேளிக்கை அல்ல. திரைப்படமே இன்றைய முதன்மை கேளிக்கை. ஆனால் காட்சிக்கலை வெறும் கேளிக்கை மட்டுமாக இருந்த காலம் இன்று கடந்து விட்டது. இன்றைக்கு நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் செய்திகள், தகவல்கள் எல்லாமே காட்சி வடிவானவை. ஒரு நாளில் எத்தனை மணி நேரம் எதையெல்லாம் காட்சிவடிவாக பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்களே யோசிக்கலாம். இன்றைய செய்தித்தொடர்பு, பொது அறிவுக் கல்வி எல்லாமே காட்சி வழியாகவே நிகழ்கின்றன. எல்லா காட்சிவடிவங்களும் திரைப்படக்கலையில் இருந்து வந்தவையே.
இன்றைக்கு நீங்கள் பிகார் தேர்தலை பற்றியோ அல்லது காஷ்மீர் குண்டு வெடிப்பு பற்றியோ காட்சி வழியாக மட்டுமே தெரிந்து கொள்கிறீர்கள். அதைப்பற்றி அபிப்பிராயங்களையும் உருவாக்கிக்கொள்கிறீர்கள். அவ்வாறென்றால் அது எப்படி கற்பிக்கப்படுகிறது, அதில் என்ன நிகழ்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது இல்லையா? இல்லையேல் மிகவும் பேதமையுடன் அதன்முன் சென்று நிற்பவர்களாகவே திகழ்வீர்கள் அல்லவா?
அதற்காகவே உலகம் முழுக்க திரைப்படக்கலை கற்பிக்கப்படுகிறது. எவ்வாறு காட்சிகள் அமைக்கப்படுகின்றன, எவ்வாறு அவை தொகுக்கப்படுகின்றன, எவ்வாறு அவை நம்மிடம் தகவல்களை கொண்டுவந்து சேர்க்கின்றன என்றெல்லாம் ஒரு சாமானியன் அறிந்தாகவேண்டியுள்ளது. அது வெறுமே திரைப்படங்களை ‘கண்டுகளிப்பதற்கான’ பயிற்சி அல்ல. எழுதப்படிப்பதற்கு கற்றுக்கொள்வதுபோல ஓர் அடிப்படை குடிமைப்பயிற்சி அது. அதை அறியாதவர் அந்த அளவுக்குப் பாமரர்தான்.
இன்று, நீங்கள் காட்சிகளின் நுகர்வோர் மட்டும் அல்ல, அவற்றின் படைப்பாளியும்கூட. நீங்கள்தான் இன்று யூடியூப் கண்டெண்ட்களை உருவாக்குகிறீர்கள். உங்கள் வீட்டில் நிகழும் ஒரு நிகழ்ச்சியை நீங்கள் பதிவுசெய்கிறீர்கள் என்றால் நீங்கள் ஒரு காட்சிக்கலை படைப்பாளிதான். உங்களுடைய சொந்த கருத்துக்களை வெளியிட்டீர்கள் என்றாலும் நீங்கள் படைப்பாளிதான். நீங்கள் எதை உருவாக்குகிறீர்களோ அதை அறிந்திருக்கவேண்டும் அல்லவா?
எல்லா காட்சிக்கலை வடிவங்களும் சினிமாவின் குழந்தைகளே. யூடியூப், முகநூல் காட்சித்துணுக்குகள் கூட சினிமாவின் இலக்கணம் கொண்டவைதான். அவற்றை உருவாக்க அவற்றை கற்றிருப்பது அவசியம்












