
அன்புள்ள ஜெ,
வணக்கம்.
தத்துவம் எனக்கானது அல்ல என்ற முழு நம்பிக்கையுடன், மற்ற வகுப்புகளில் கலந்து கொண்டிருந்தேன். வாசிப்பு வகுப்பில் கலந்து கொண்ட பின், ‘கீதையை அறிதல்‘, ‘இந்து ஞானம்-சில அடிப்படை கேள்விகள்‘ ஆகிய புத்தகங்களை பயிற்சிக்காக வாசித்தேன். அதற்கு அடுத்ததாக ‘இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்‘ புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். அதன் தொடக்கத்தில் தத்துவம் எவ்வாறு அனைவருக்கும் தேவை என்பதை விரிவாக விளக்கி இருந்தீர்கள். தத்துவத்தை குருவிடம் இருந்து கற்பதன் முக்கியத்துவத்தையும் கூறினீர்கள். இக்காரணங்களால் தத்துவ வகுப்பில் கலந்து கொள்ளும் ஆசை வந்தது.தெளிவான ஆங்கிலத்தில், இந்து மதத்தின் முழு பாடத்திட்டத்தினை விரிவாக கூறினீர்கள். அடுத்தடுத்த வகுப்புகளில் என்னென்ன கற்போம் என்பதை பற்றியும் சிறு அறிமுகங்கள் கிடைத்தன.
உங்கள் உடல்நிலை காரணமாக, வகுப்பிற்கு நடுவே நீண்ட இடைவெளி என்பது ஒரு தவறான புரிதல். ‘நாங்கள் கலந்துரையாடக்கூடாது‘ என்று நீங்கள் கூறியது எங்களின் சொந்த கருத்துக்களை தானே ஒழிய, வகுப்பில் கூறப்பட்டதை அல்ல என்பது மற்றுமொரு தவறான புரிதல். அதனால் வெள்ளியன்று, நண்பர்களுடன் இணைந்து நந்தி சிலைக்கு பின் உள்ள பெரிய பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சென்றோம். அதன் பின்னால் உள்ள மிகப்பெரிய அரச மரத்தடியில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். எதிரில் மலை, சின்ன குளம், முற்றிய சோளவயல், இனிமையான அரசமரக்காற்று, ஒத்த மனமுடைய நண்பர்கள் என்று மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. சனியன்று வலது புறம் சென்றோம். பெரிய ஆலமரத்தின் விழுதுகளே, மரத்தின் அளவு தடிமனாக இருந்தன. பாறையின் மேல் அமர்ந்து, சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தோம். நித்யவனத்தில் எந்த ஊரில் இருந்து வந்திருக்கிறேன் என்பதை தவிர வேறு தோண்டி, துருவும் கேள்விகள் கிடையாது. புத்தகங்களைப் பற்றி பேசவே நேரம் போதவில்லை. அதைத் தாண்டி கல்வெட்டு,இசை என பல துறைகளில் அவர்கள் கொண்டுள்ள ஆர்வம் ஆச்சரியமூட்டுகிறது. சனியன்று மாலை நீங்கள் இடைவேளைக்கான காரணம் கூறினீர்கள். இரவுணவிற்குப்பின், நாங்கள் நான்கு பேர் அமர்ந்து அன்றைய வகுப்பு பற்றி கலந்துரையாடினோம். நேரம் மற்றும் குளிர் காரணமாக மதிய அமர்வை மட்டும்தான் முடிக்க முடிந்தது. நீங்கள் கூறியது போல ஒவ்வொருவரும் விடுபட்ட இடத்தை நிரப்பும்போது, ஒரு முழு சித்திரம் கிடைக்கிறது. மனதிலும் ஆழமாகப்பதிகிறது. அடுத்தடுத்த நிலை வகுப்புகளில், கலந்துரையாடும் வாய்ப்பை தவற விட மாட்டேன்.
முழு நிலவின் பின்புலத்தில் ‘சிருஷ்டி கீதம்‘ கேட்டது மறக்க முடியாத தருணம். காலை உணவின் போது, குளிரில் விறைத்த கையை, தட்டில் ஊற்றிய கொதிக்கும் சாம்பாரில் வைத்த போது இதமாக இருந்தது. வடதுருவ பயணத்தின் போது, தீக்குள் சென்று குதித்து விட நீங்கள் விரும்பியது ஞாபகம் வந்தது. கற்றல் ஒரு இன்பம்; அந்தக் கற்றல் அனுபவமாக மாறுவது பேரின்பம். நெருப்பு என்பது கடவுளாக ஆனதன் காரணத்தை உணர முடிகிறது.
மோனியர் வில்லியம்ஸ் அவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்று தெரிந்து கொண்டேன். முழுமை அறிவு ஏன் முக்கியம் என்றும் புரிகிறது. எல்லாவற்றுக்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கிறது. கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடத்திற்கு நீங்கள் செல்வது பயணங்களுக்காக என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த பாறை செதுக்குகளையும், வேதத்தின் வரிகளையும் இணைத்தது பெரும் திறப்பாக அமைந்தது.
தொண்டை பாதிக்கப்பட்டிருந்தாலும் எங்களுக்காக நான்கு மணி நேரம் வரை தொடர்ந்து வகுப்பு எடுத்ததற்கு நன்றி என்ற ஒற்றை சொல் நிச்சயமாக போதாது. இருந்தாலும் சொல்கிறேன், மிகவும் நன்றி ஜெ.
என்றும் அன்புடன்,
S.ராஜேஷ்வரி
கோவை.












