சங்கரரின் சித்திரம்

அன்புள்ள ஜெ,

சங்கரரை பற்றிய உங்களுடைய உரை கேட்டேன்.  இரண்டு முறைக்கு மேல் அந்த உரை கேட்டுள்ளேன்.  ஆனால் நூல் வடிவில் அதை படித்தால் மட்டுமே முழுமையான ஒரு சித்திரம் உருவாகும் என்று நினைக்கிறேன். நீங்கள் அந்த உரையில் சங்கரைன் வாழ்க்கை, அவருடைய மகிமை ஆகியவற்றை சொல்வீர்கள் என்று நினைத்தேன். சங்கரரின் தத்துவக் கொள்கைகளைப் பற்றி  விரிவாக பேசுவீர்கள் என்று ஒரு எதிர்பார்ப்பும் இருந்தது

ஆனால் இந்தச் சிறிய உரை சங்கரரை  ஒட்டுமொத்தமாக பார்ப்பதற்கு உதவி செய்கிறது.  சங்கரர்  வரலாற்றில் எவ்வாறாக இருந்தார்,  இந்திய சிந்தனையில் அவருடைய இடம் என்ன,  இந்திய வரலாற்றில் இப்போது அவருடைய நீடித்த பங்களிப்பு என்ன  ஆகிவற்றுடன்  அவருடைய சிந்தனை பற்றிய ஒரு எளிமையான கோட்டோவியம் அந்த உரையில் இருந்தது.

உங்களுடைய நோக்கம் தமிழ்ச் சூழலுக்கு சங்கரரை ஒட்டுமொத்தமாக அறிமுகம் செய்வதுதான் என்று தோன்றுகிறது .அந்த வகையில் இந்த உரை மிக முக்கியமான ஒன்றுநீங்கள் இந்திய தத்துவ வகுப்புகளை எடுப்பதாக அறிகிறேன்அதில் சங்கரரை பற்றி விரிவாக கற்பிக்கும் வகுப்புகள் இருக்கும் என்று நம்புகிறேன்.

ஆனந்த்குமார்

சங்கரரை அறிதல் வாங்க

அன்புள்ள ஆனந்த்,

அந்த உரை நீங்கள் குறிப்பிட்டது போல சங்கரரை முழுமையாக,  அதேசமயம் சுருக்கமாக,  முற்றிலும் அவரை அறியாத தமிழ் வாசகர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டது.  ஆகவே ஒரு பக்கம் சங்கரரை பற்றி உருவாக்கப்பட்டு இருக்கும் பக்தி கலந்த மிகைக் கதைகளும் தொன்மங்களும் எந்த வகையில் அவரை நம்மிடம் இருந்து மறைக்கின்றன என்பதையும் அந்த உரையில் சொல்லி இருக்கிறேன். அவரை ஒர் அவதாரமாக ஆகும் போது அவரை ஒரு வரலாற்று மனிதராக  பார்ப்பதிலிருந்து நாம் தவறி விடுகிறோம்  .சங்கரரை  நான் எவ்வாறு தெய்வ அவதாரமாக நினைக்கவில்லை. ஒரு மாபெரும் தத்துவ ஞானியாகவே எண்ணுகிறேன் .அவ்வாறுதான் அந்த உரையில் அவரை முன்வைக்கிறேன்.

தமிழ்ச் சூழலில் ஒன்று, சங்கரரை நோக்கி வசதிகளும் அவமதிப்பு நிராகரிப்புகளும் உள்ளன. மறுபக்கம் அவரை தெய்வ உருவமாக்கி, அவரைப் பற்றி எதுவுமே அறியாமல் வழிபடும் ஒரு மனநிலை உள்ளது. இந்த உரை அந்த இரண்டு எல்லைகளுக்கும் நடுவே அமைந்துள்ளதுசங்கரரின் வரலாற்றிலிருந்து நான் தொடங்குவது அவரை ஒரு வரலாற்று மனிதராக பார்த்தால் மட்டுமே அவருடைய தத்துவத்திற்கு நாம் சரியான முறையில் செல்ல முடியும் என்பதனால்தான். ஏனென்றால்  தத்துவம் என்பது நாம் சிந்தித்து ஆராய்ந்து  தெளிவடைவதற்கான ஒரு துறையே ஒழிய அது முன்னோர் சொல்லோ  அறிவுரையோ  அல்ல.

சங்கரரின்  ஆளுமை வரலாற்றினூடாக எப்படி திரண்டு நமக்கு வந்துள்ளது என்பதை விளக்கி விட்டு செல்கிறது அந்த உரை. அவரது தத்துவப் பங்களிப்பை பற்றி ஒரு கோடிதான் காட்டி இருக்கிறேன்.  ஒருவேளை முழுக்க முழுக்க வேதாந்த மரபு -அத்வைத மரபு பற்றிய ஒரு  உரை ஆற்றப்படும் என்றால் அதில்  வேறு ஒரு சித்திரத்தை நான் அளிக்கக்கூடும் .

சங்கரை அறிந்து கொள்வதற்கு  வேதாந்தத்தை நாம் அறிய வேண்டும் .அதை சங்கரருக்கு முந்தைய வேதாந்தம் ,சங்கர வேதாந்தம் ,சங்கருக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு உருவான நவ வேதாந்தம் என்ற மூன்று காலகட்டங்களாக பிரித்து அறிய வேண்டும் .அவ்வாறு ஒரு உரையை எதிர்காலத்தில் தான் ஆற்றக்கூடும். இப்போது நான் நடத்திவரும் தத்துவ வகுப்புகளில் வேதாந்தம் மட்டுமே அறிமுகமாகியுள்ளது. சங்கருக்கான அதற்கான வகுப்புகள் இனிமேல் தான் வரும்.

ஜெ

முந்தைய கட்டுரைவேதாந்தம் ஒரு கடிதம்