
இந்து ஞானமரபில் ஆறுதரிசனங்கள் வாங்க
அன்புள்ள ஜெயமோகன்,
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்ற நூலை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். இந்த நூலை நான் புத்தகக் கண்காட்சியில் எடுத்து புரட்டிப் பார்த்தேன். அதில் சைவம் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்த்தபோது தலைப்புகளில் எதிலும் சைவம் இருப்பதாக தெரியவில்லை. சைவம் இல்லாமல் இந்து ஞான மரபு இருக்க முடியுமா என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. நண்பர்களிடம் விவாதித்தேன். தெளிவு உருவாகவில்லை. உங்களிடம் நேரடியாக இதை கேட்போம் என நினைத்து இந்த கடிதத்தை எழுதுகிறேன். அந்த நூலை எப்படி எடுத்துக் கொள்வது? அது யாருக்கான நூல்?
நா.மாணிக்கவாசகம்.
அன்புள்ள மாணிக்கவாசகம்,
அந்த நூலை நான் எழுதி இப்போது 25 ஆண்டுகள் கடந்துவிட்டன .அந்த நூல் பல பதிப்புகளும் வந்துள்ளது. சைவம் அல்லது வைணவம் என்னும் மதப் பிரிவுகளை பற்றிய நூல் அல்ல அது. முதன்மையாக அது ஒரு தத்துவ நூல் .இந்து ஞான மரபுக்குள் உள்ள ஆறு தரிசனங்களை பற்றியது. இந்து ஞான மரபுக்குள் ஆறு மாதங்களும் ஆறு தரிசனங்களும் உள்ளன. ஆறு மதங்களுக்கும் தங்களுக்கான தத்துவ கொள்கைகள் தனியாக உள்ளன .ஆறு தரிசனங்கள் என்பவை இந்து மத மரபுக்குள் இருக்கும் தெளிவான வரையறை கொண்ட ஆறு தத்துவப் பார்வைகள். அவை மதங்கள் அல்ல ,தத்துவங்கள் மட்டுமே. அவை சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வமீமாம்சம் ,உத்தரமீமாம்சம் ஆகியவை.
இவை ஷட்தர்சனங்கள் என்று நெடுங்காலமாக அழைக்கப்பட்டு பயிலப்பட்டு வருகின்றன.இவற்றில் சாங்கியம், யோகம், நியாயம் , வைசேஷிகம் ஆகிய நான்கும் இறையிலி தர்சனங்கள். பின்னர் இறை மரபுக்குள் வந்தன. ஆனாலும் அவற்றின் அடித்தளம் இறையிலி கொள்கையே. பூர்வமீம்சம்தான் தூய வைதிகம். உத்தரமீமாம்சம் என்பதுதான் நாம் வேதாந்தம் அல்லது அவைதம் என்று சொல்லும் கொள்கை .இந்த மரபுகளை தத்துவார்த்தமாக புரிந்து கொள்வதற்கான ஒரு வழிகாட்டு நூலாகவே நான் அந்த சிறு நூலை எழுதினேன்.
இப்போது அந்த நூல் வாசிப்பதற்கு கிடைக்கிறது .ஒர் எளிய வாசகர் அந்த நூலில் இருந்து இந்த தரிசனங்களை பற்றிய ஒரு பொதுச் சித்திரத்தை அடைய முடியும். அச்சித்திரத்தை மேலும் நுட்மாக விரிவாக்கிக் கொள்ள வேண்டும் என்றால் அவர் நாங்கள் நடத்தும் இந்து ஞானப் பயிற்சி முகாம்களுக்குத் தான் வர வேண்டும் ,உங்களை அதற்கு வரவேற்கிறேன்.
ஜெ










