பறவையுடன் புதிய ஆண்டு!

மதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,

இந்தப் புத்தாண்டு எனக்கு மிகச் சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது. ஜன 11 அன்று உங்களையும் அஜிதனையும் புத்தகக்காட்சியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. புத்தகங்களில் கையெழுத்துப் பெற்று, உங்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டது மிக்க மகிழ்ச்சி.

ஜன 16-18 பறவை பார்த்தல் வகுப்பில் என் மனைவி மற்றும் 9-வயது மகளுடன் (சமிக்ஷா) கலந்து கொள்ள ஏற்கனவே பதிவு செய்திருந்தேன். புத்தக்காட்சியில் சந்தித்த போது அதை உங்களிடம் தெரிவித்தோம். “பறவை பார்க்க 5 மணிக்கெல்லாம் எழுந்திருந்து வரணும். எழுந்துடுவியா?” என்று என் மகளிடம் விளையாட்டாக கேட்டீர்கள். அதை அவளிடம் நினைவுபடுத்தி, “சமிக்ஷா! சீக்கிரம் எழுந்து வந்துடுவியா?” என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். “அப்பா நான் excite ஆயிட்டா அதுக்கு முன்னாலேயே எழுந்திருச்சிடுவேன். இல்ல தூங்கமலேயே கூட இருப்பேன்என்றாள் அவள். வகுப்புகளில் அந்த excitement அவளுக்கு நிச்சயமாகக் கிடைத்தது. உற்சாகமாக சீக்கிரம் எழுந்து பறவை பார்க்க வந்தாள்.

முதல் நாள் பறவைகளை ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கு பதிலாகஒரு உயிரினத்தை அறிந்துகொள்வது என்பது இந்த மொத்த பிரபஞ்சத்தையும் அறிவதுதான்என்பது போன்ற மேற்கோளுடன் ஆசிரியர் விஜயபாரதி வகுப்பைத் தொடங்கியபோதே, இந்த வகுப்புகள் ஒரு தீவிரமான மிகச்சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும் என்ற எண்ணம் உறுதிப்பட்டது. அதிலிருந்து தொடங்கி பறவைகளை அடையாளம் காணுதல், அவற்றின் இயல்புகளை அறிந்துகொள்ளுதல், குழந்தைகள் மிகவும் ரசித்த கதை சொல்லல், படக்கதைகள், பறவை ஆர்வமும் வேறு பல பங்களிப்புகளும் கொண்ட ஆளுமைகள் அறிமுகம் என்று 2.5 நாட்களும் சுவாரசியம் சற்றும் குறையாமல் ஆசிரியர்கள் விஜயபாரதியும், ஈஸ்வரமூர்த்தியும் வகுப்புகளை நடத்திச் சென்றார்கள்.

களத்தில் பறவைகளை பார்க்கச் செல்லும்போது, விதவிதமான பறவைகளை பைனாக்குலர் வழியாகக் கண்டு ரசித்தது மிகச்சிறந்த அனுபவமாக அமைந்தது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்து பறவைகளைப் பார்த்தபோதும் அலுப்போ சலிப்போ ஏற்படவே இல்லை. அதற்குள் இவ்வளவு நேரம் கடந்து விட்டதா என்ற ஆச்சரியமே ஏற்பட்டது. ஒருசில இடங்களில் அமைதியாகப் பொறுமையாக அமர்ந்து பறவைகளை பார்க்க வேண்டியிருந்தது. எங்களை அமைதியாக அமர வைக்க ஆசிரியர்கள் நிறையவே சிரமப்பட வேண்டியிருந்தது. ஆனால் இறுதி நாள் அன்று அதையுமே அவர்கள் எங்கள் குழுவுக்கு கற்பித்து விட்டார்கள். அன்று அனைவரும் மிகப் பொறுமையாக அமர்ந்து பறவைகளைப் பார்த்தனர்.

உணவு இடைவேளையின் போது பறவை பார்த்தலே ஒரு தியான அனுபவம் போல இருப்பதாக கலந்து கொண்ட பலரும் ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

என் மகளுக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். குறிப்பாக அவள் வயதொத்த இரு தோழிகளுடன் இணைந்து அவள் இந்த நாட்களை மிகுந்த மகிழ்ச்சியாகக் கழித்தாள்.

இரண்டாம் நாள் இரவு உணவுக்குப் பிறகு நடந்து செல்கையில், நானும் என் மனைவியும், எங்களின் மற்ற பயணங்களில் இல்லாத ஒரு மகிழ்ச்சி இந்த பயணத்தில் இருப்பதாக பேசிக் கொண்டே சென்றோம். அது கற்றலின் இன்பம் என்பதை உணர்ந்தோம்.

பறவை பார்த்தல் எனும் கலைக்கான மிகச்சிறந்த அறிமுகத்தை வழங்கிய ஆசிரியர்கள் விஜயபாரதி மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்!!!

இது எங்களுக்கு நிச்சயம் தொடர்ந்த ஒரு பயனுள்ள ஓய்வு நேரப் பொழுதுபோக்காக (virtuous leisure) அமையும் என்று நினைக்கிறேன்.

பறவை பார்த்தலையும் தாண்டி நித்யவனத்தில் இந்த வகுப்புகளின் சூழலே மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தது. உங்களின் நாவல்கள் பற்றி உரையாடும் அறைத் தோழர்கள், எங்கும் உங்களின் தத்துவ வகுப்புகளில் கலந்து கொள்வதைப் பற்றி உரையாடும் நண்பர்கள், உணவு இடைவேளைகளில் வெண்முரசு வாசிப்பு மற்றும் அது சார்ந்த விவாதங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருப்பவர்கள் என்று அந்த சூழலே உற்சாகமூட்டுவதாக இருந்தது. என்னுடைய தினசரி வாழ்வில் இதற்கான வாய்ப்பே இல்லை. இலக்கியம் பற்றி உரையாடுபவர்களை காண்பதே அரிதானது.

இதுபோன்ற ஒரு சிறந்த அறிவியக்கத்தை முன்னெடுக்கும் உங்களின் முயற்சிக்கும், விஷ்ணுபுரம், முழுமையறிவு அமைப்புகளின் நண்பர்களின் முயற்சிகளுக்கும் மிக்க நன்றி!!!

நன்றி,

சதீஷ்.

முந்தைய கட்டுரைஆங்கிலத்தில் இந்து தத்துவம்