
ஆறு தரிசனங்களைப் பயில
அன்புள்ள ஜே ,
ஒரு கேள்விக்குப் பதிலாக ஆறு தரிசனங்களைப் பயில்வதற்கு நீங்கள் இரண்டு நூல்களை அறிமுகம் செய்திருந்தீர்கள். அந்த நூல்கள் வழியாக ஆறு தரிசனங்களை கற்றுக் கொள்ள முடியுமா? அந்த கேள்வியை கேட்டவர் அந்த நூல்களின் வழியாக ஆறு தரிசனங்களை விரிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்றும், ஓராண்டு காலம் என்று அதைக் கற்றுக் கொள்ளப் போவதாகவும் சொல்லி இருந்தார் .அந்த நூல்கள் அதற்கு போதுமா? அல்லது ஆங்கிலத்தில் அதற்கான விரிவான நூல்கள் உள்ளனவா?
ஆனந்த் ரவி
அன்புள்ள ரவி,
ஆங்கிலத்தில் மிக விரிவான நூல்கள் உள்ளன. ஆய்வு நூல்கள் உள்ளன, ஏராளமான ஆய்வேடுகளும் உள்ளன. தமிழில் தெளிவாக வாசிக்க உதவியான் இரு நூல்கள் இவை இரண்டுமே. டாக்டர் ராதாகிருஷ்ணனின் இந்திய தத்துவ ஞானம் என்ற நூல் உள்ளது. ஆனால் அது காலத்தில் மிக பழையது 70 ஆண்டுகள் தொன்மையானது. அதற்கான பிழைகளும் அதில் உண்டு .
ஆனால் இந்த நூல்கள் வழியாக ஆறு தரிசனங்களை அறிமுகம் மட்டுமே செய்து கொள்ள முடியும் .அவற்றில் என்ன பேசப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலும் அது உதிரிச் செய்திகளாக தோராயமான புரிதலாக நினைவில் இருக்கும். ஒருபோதும் தத்துவங்களை இவ்வாறு நூல்கள் வழியாக புரிந்து கொள்ள முடியாது. இதை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறேன் வகுப்புகளிலேயே தத்துவத்தை பயில வேண்டும். படிப்படியாக விரிவாக்கிக் கொண்டே சென்று, ஒரு கட்டத்தில் விவாதித்து தெளிகொள்ள வேண்டும். அதற்கு ஒரு நெடுங்கால வழிமுறை உள்ளது.
தத்துவத்தை அறிமுகம் செய்வதற்கான நூல்கள் என்று மட்டுமே அந்த நூல்களை குறிப்பிட்டேன். தரிசனங்களை கற்று தெளிந்த பிறகு விரிவான மேலதிக ஆய்வுகளுக்கு ஆய்வுநூல்கள் உதவும். ஆனால் நூலின் வழியாக தத்துவத்தைக் கற்றுக் கொள்ள முடியாது.நூல்வழியாகக் கற்பதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் என்பது அந்த கொள்கைகளை சரியான வழிகாட்டுதல் இல்லாமல் நாமே கற்கும் போது பலவகையில் கற்பனை கலந்து புரிந்து கொள்வோம். அல்லது நமக்கு ஏற்கனவே என்ன தெரியுமோ அதன் நீட்சியாக புரிந்து கொள்வோம்.அந்த பிழைகள் நெடுங்காலம் களையப்படாமல் மிகப்பெரிய பிழைகளாக திரண்டு நம்மை மீள முடியாத படி வரையறுத்து விடும்.
தத்துவத்தில் ஒருவரின் சாவு என்பது நீண்ட காலம் ஒரு பிழையான் புரிதலை சுமந்தலைவதும், அதை விட்டு விலக முடியாதபடி சிக்கிக் கொள்வதும்தான் .ஆகவேதான் தத்துவத்தை நூல்கள் வழியாக அறிமுகம் செய்து கொள்ளுங்கள், வகுப்புகள் வழியாகக கற்றுக் கொள்ளுங்கள், மேலதிக நூல்கள் வழியாக ஆய்வு மேற்கொள்ளுங்கள் என்று எப்போதும் சொல்லி வருகிறேன் .அது குரு நித்யா உட்பட நல்லாசிரியர்கள் எப்போதுமே சொல்லி வந்ததுதான்.
ஜெ












