ஆங்கிலவழி தத்துவம், இளைஞர்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

ஆங்கிலம் வழியாக இந்து தத்துவ வகுப்பு நிகழ்வதாக அறிந்தேன். இதில் என் மகனை அனுப்பலாமா? அவனுக்கு ஆர்வம் உண்டு, வாசிக்கும் வழக்கமும் உண்டு. தமிழ் சரியாக வராது. ஆங்கிலவழிக் கல்வி படிப்பவன். இந்த வகுப்பு இளைஞர்களுக்கு ஆர்வமூட்டும்படி இருக்குமா? இன்றைய வாழ்க்கைக்கு இது உதவியானதுதானா?

கிருஷ்ணமூர்த்தி

 

அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,

இந்த வகுப்பு சம்பிரதாயமானது அல்ல. நவீன கல்விமுறை சார்ந்தது. நவீன முறையில் பயிற்றுவிக்கப்படுவது. இதில் இந்து மெய்யியல், அதன் வரலாற்றுப்பரிணாமம் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. இளைஞர்களுக்குரிய வகுப்புகளாகவே இவை நடத்தப்படுகின்றன. 15 வயதுக்கு மேற்பட்ட, ஆங்கிலம் புரிந்துகொள்ளக்கூடிய எந்த இளைஞரும் கலந்துகொள்ளலாம். இதுவரை இவ்வகுப்பில் பல இளைஞர்கள் கலந்துகொண்டதுமுண்டு. தத்துவம் அனைவருக்குமுரியது அல்ல. சாராம்சம் தேடும் உள்ளம் கொண்டவர்களுக்குரியது. ஓர் இளைஞர் அத்தகையவரா என்பது அவரே நேரில் வந்து வகுப்பில் கலந்துகொண்டபின்னரே அறிந்துகொள்ள முடியும். வகுப்பில் கலந்துகொள்ளாதவரை அறியவும் முடியாது. பெற்றோரின் கட்டாயத்தால் வந்து, ஆனால் வந்தபின் தீவிர ஆர்வம்கொண்ட பலர் உண்டு.

இந்த வகுப்பு தத்துவார்த்தமாகச் சிந்திக்கக் கற்பிக்கிறது. அது எந்த கல்விக்கும், எந்த மேலதிகப் பயிற்சிக்கும் தேவையான அடிப்படையை அளிப்பது. இன்றைய இளைஞர்கள் இன்றைய நுகர்வுச்சூழல், இன்றுள்ள சமூகவலைத்தள போதை ஆகியவற்றுக்கு ஆளாவது எளிதில் நிகழ்கிறது.தத்துவம் ஒருவரை ஆட்கொண்டது என்றால் அவை பொருளற்றவை ஆகிவிடும். தீவிரமானவற்றில் மட்டும் ஈடுபாடு உருவாவதே சமகால போதைகளில் திசைதிரும்புவதில் இருந்து மிகப்பெரிய பாதுகாப்பாக அமைவது.

 

ஜெ

முந்தைய கட்டுரைஆறுதரிசனங்களைப் பயில