
அன்புள்ள ஜெ,
வாழும் தமிழ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் பெயர்களை இந்த தளத்திலே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொன்றும் மனம் மலர செய்கின்றன. அமெரிக்காவின் தமிழ்க் குழந்தைகள் ஆங்கில மொழி வழியாகவே தமிழிலக்கியத்தைப் புரிந்து கொள்வது என்பது ஒரு பெரிய தொடக்கம். அவர்களுக்கு தமிழ் வழியாக தமிழை கொண்டு சென்று சேர்க்க முடியாது. அவர்கள் வாழும் வாழ்க்கையின் சூழலில் அது முற்றிலும் சாத்தியமல்ல.
தமிழை அறிமுகம் செய்கிறோம் என்று அடிப்படை எழுத்துக்களை எழுத படிக்க கற்றுக் கொடுப்பதில் எந்த பயனும் இல்லை. சீக்கிரமே மறந்து போய்விடும். ஒரு கட்டத்தில் அவர்கள் பெற்றோரிடம் இருந்து மிகவும் விலகிச் சென்று விடுகிறார்கள். பெற்றோர் ரசிக்கும் சினிமா, பெற்றோர் பார்க்கும் பட்டிமன்ற நிகழ்ச்சி எதுவுமே அவர்களுக்கு எந்த வகையில் ஈடுபாடு அளிப்பதில்லை. தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளுக்கு அவர்களை பார்ப்பது அரிது. அறிவார்ந்த, படிக்கக்கூடிய எந்த குழந்தையும் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளுக்கு ஆர்வத்துடன் வருவதில்லை.
இந்நிலையில் இந்த குழந்தைகளே முன்னெடுத்து இந்த நிகழ்ச்சியை நகர்த்துவது என்பது பிரமிப்பூடுகிறது. ஆனால் புரிந்து கொள்ள முடிகிறது. மிக எளிதாக அவர்கள் இந்த இலக்கியங்களை படித்துவிட முடியும். இந்தியாவிலே ஒரு முதுகலை மாணவர் படிக்கும் புத்தகத்தை 15 வயது அமெரிக்க குழந்தை படித்துவிடும். ஆகவே அவர்களுக்கு இந்த இலக்கியப் படைப்புகளை கொண்டு சென்று சேர்ப்பது என்பது தமிழகத்தையும் தமிழ்ப் பண்பாட்டை மட்டும் அல்ல; நமது குடும்ப மதிப்பீடுகளையும் கொண்டு சென்று சேர்ப்பதுதான். இதை இன்னும் தமிழ்ச் சமுதாயம் புரிந்து கொள்ளவில்லை. எதிர்காலத்தில்தான் புரிந்து கொள்ள வேண்டும் முடியும்.
ஆர்.அன்புச்செல்வம்









