அன்புள்ள ஜெ,
கமல்ஹாசன் அவர்கள் வாழும்தமிழ் நிகழ்ச்சிக்கு அளித்த அறிமுக உரையைக் கேட்டேன். மிகச்சிறப்பாகப் பேசியிருந்தார். அவர் வழியாக உங்கள் நிகழ்ச்சி பல ஆயிரம்பேரைச் சென்றடைந்துள்ளது என்பதைக் காணமுடிந்தது. ஆனால் ஒரு கேள்வி. நீங்கள் இன்றைய இலக்கிய விழாக்களில் ‘ஸ்பான்ஸர்களை’ திருப்தி செய்வதற்காக ஜனத் திரளை காட்டுவதற்காக நடிகர்கள் போன்றவர்களை அழைப்பதைப் பற்றியும், அதன் வழியாக இலக்கிய விழுமியங்கள் பின்னிறுத்தப்படுகின்றன என்பது பற்றியும் கடுமையாகச் சொல்லியிருந்தீர்கள். இரண்டு ஆங்கில இதழ் பேட்டிகளிலும் சொல்லியிருந்தீர்கள். கமல்ஹாசனை நீங்கள் முன்வைப்பதைப் பற்றியும் இதையே சொல்லலாமே?
நாங்கள் கமலை முன்வைக்கவில்லை, அவர்தான் எங்களை முன்வைக்கிறார். நான் மிக தொடக்கநிலையில், ஓர் இளம்படைப்பாளியாக என் இலக்கியச் செயல்பாடுகளைத் தொடங்கிய காலம் முதல் கமல் என்னை அடையாளம் கண்டு என்னுடன் இருக்கிறார். என்னை அறிமுகம் செய்துள்ளார், என் செயல்களுக்கு ஊக்கமளித்துள்ளார். இப்போதும் உடனிருக்கிறார். எப்போதுமிருப்பார். இந்த உரையும் அவர் எனக்காகச் செய்ததுதான்.
ஒன்று, நாங்கள் திரளைக் கூட்ட முயலவில்லை. எண்ணிக்கைக்கு உட்பட்ட பங்கேற்பாளர்களே எங்களுக்கு போதும் என முடிவுசெய்தோம். இலக்கியவாசகர்கள் மட்டுமே பங்கெடுத்தால் போதும் என வரையறை செய்து வாசகர்களை மட்டுமே நியுயார்க் நிகழ்ச்சியில் பங்கெடுக்க அனுமதிக்கிறோம். இரண்டு, எங்களுடைய ஸ்பான்ஸர்கள் எங்கள் தனிப்பட்ட நண்பர்கள், அந்த நட்பினால் மட்டுமே உதவுபவர்கள். மூன்று, நாங்கள் எங்கள் மேடையில் தீவிர இலக்கியத்தை மட்டுமே முன்வைக்கிறோம்.
ஜெ









