மேகங்களின் குரல்!
1- அறங்களை கைவிடுக!
கொல்லப்பட்டவள் மரியக்குட்டி என்னும் பயிற்சி பெறாத செவிலிப்பெண். அவளுக்கு அப்போது 43 வயது. மணமானவள். ஐந்து குழந்தைகளுக்கு தாய். அவள் சடலம் கேரளத்தில் ரான்னி என்னும் ஊருக்கு அருகிலிருக்கும் மைனத்தருவி என்னும் எஸ்டேட்டில் ஒரு கிணற்றருகே கிடைத்தது. அவள் உடலருகே கத்தோலிக்க மதகுருக்கள் அணியும் ஸ்டோல் என்னும் நீண்ட மேலாடை கிடந்தது. முந்தையநாள் மாலை மரிக்குட்டி கத்தோலிக்க மதகுரு ஒருவருடன் சென்றதைப் பார்த்ததாக பல சாட்சிகள் சொன்னார்கள். செய்தி அக்கணமே பற்றிக்கொண்டது. ஒரு வாரம் கழித்து அந்த கத்தோலிக்க மதகுரு கைது செய்யப்பட்டார்.
இது நடந்தது 1966 ஜூன் மாதத்தில். இன்றும் கேரள மனசாட்சியின் முன் சிக்கலான ஒரு கேள்வியாக எழுந்து நிற்கிறது இந்த வழக்கு. மொத்தச் சித்திரம் இது. மரியக்குட்டிக்கு கத்தோலிக்க மதகுருவும், சங்ஙனாச்சேரி புனித ஜோசப் ஏதிலியர் மடத்தின் அச்சகத்தை நிர்வாகம் செய்துவந்தவருமான ஃபாதர் பெனெடிக்ட் ஓமங்குளம் என்பவருடன் பாலியல் தொடர்பு இருந்தது. அவருக்கு அப்போது வயது முப்பத்தேழு. மரியக்குட்டி பக்கவாதம் பாதித்து படுக்கையில் இருந்த தன் மூன்றாவது கணவனைப் பிரிந்து பெனெடிக்டுடன் ரகசியத் தொடர்பில் இருந்தார். பெனெடிக்ட் ஆலப்புழாவில் பங்குத்தந்தையாக இருந்தபோது அவருடன் மரியக்குட்டிக்கு தொடர்பு ஏற்பட்டது. மரியக்குட்டிக்கு பெனெடிக்ட் நிதியுதவி செய்துவந்தார்.
மரியக்குட்டி கருவுற்றிருந்ததாகவும், பெனெடிக்ட் அந்த கருவுக்குக் காரணம் என்றும், அவர் அதை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கருவைக் கலைக்கும் நோக்கத்துடன் மரியக்குட்டியை மைனத்தருவி எஸ்டேட்டுக்கு பெனெடிக்ட் அழைத்துவந்தார் என்றும், கருவைக் கலைக்க மரியக்குட்டி ஒப்புக்கொள்ளாததனால் பெனெடிக்ட் அவரை தாக்கியதாகவும், அவர் இறந்துவிட்டதைக் கண்டு இழுத்துக்கொண்டுசென்று கிணற்றங்கரையில் வீசிவிட்டதாகவும் போலீஸ் குற்றம்சாட்டியது. கருவைக் கலைக்க அழைக்கப்பட்ட டாக்டர் போலீஸ்தரப்பு சாட்சி.
1966 ஜூன் 24 ஆம் தேதி பெனெடிக்ட் கைது செய்யப்பட்டார். கொல்லம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் முடிவில் 1966 நவம்பர் 19 அன்று நீதிபதி குஞ்ஞிராமன் வைத்தியர் பெனெடிக்டுக்கு மரணதண்டனை விதித்தார். குற்றம்சாட்டப்பட்டவர் முன்னுதாரணமாக இருக்கவேண்டிய ஒரு மதகுரு என்பதனால் கடும்தண்டனை அளிப்பதாக நீதிபதி சொன்னார்.
ஒரு கத்தோலிக்க மதகுரு கொலைக்குற்றத்துக்காக கைதுசெய்யப்படுவது அதுவே முதல் முறை. கேரள கிறிஸ்தவச் சமூகத்தில் ஆழ்ந்த அதிர்ச்சியை அந்த நிகழ்வு உருவாக்கியது. அந்நிகழ்வை அடிப்படையாக்கி இரண்டு திரைப்படங்கள்அந்த ஆண்டிலேயே எடுக்கப்பட்டன. ‘மாடத்தருவி’ மற்றும் ‘மைனத்தருவி கொலைக்கேஸ்’ ஆகியவை அந்நிகழ்வை மக்கள் மனதில் அழியாமல் நிலைநிறுத்தின.
ஆனால் அடுத்த ஆண்டு உயர்நீதிமன்றத்தில் நிகழ்ந்த மறுவிசாரணையில் பெனெடிக்ட் விடுதலையானார். அவருக்காக ஏ.எஸ்.ஆர். சாரி ஆஜராகி வாதிட்டார். கொலையுடன் அவரை தொடர்புபடுத்த ஒரே ஒரு சந்தர்ப்ப சாட்சியமன்றி ஏதுமில்லை. டாக்டரின் சாட்சியம் பெனெடிக்ட் கருவைக் கலைக்க மரியக்குட்டியை அழைத்துவந்தார், மரியக்குட்டிக்கும் பெனெடிக்டுக்கும் கடும் வாக்குவாதம் இரவில் நடைபெற்றது என்று மட்டுமே குறிப்பிட்டது. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், எவரிடமும் கூடுதல் அறப்பொறுப்பை சட்டம் எதிர்பார்க்கலாகாது என்று நீதிபதிகள் பி.டி.ராமன் நாயரும் பி.பி.கோபாலனும் தீர்ப்பில் குறிப்பிட்டனர். 1967 ஏப்ரலில் பெனெடிக்ட் விடுதலை செய்யப்பட்டார்.
நீதிமன்ற விசாரணையின்போது முழுக்க பெனெடிக்ட் தான் நிரபராதி என்று உறுதியாகச் சொன்னார். மரியக்குட்டியுடன் உறவிருந்ததை மறுக்கவில்லை, ஆனால் அந்தக் கொலையை தான் செய்யவில்லை என்றார். அந்த நிகழ்வு பற்றிய உண்மை தனக்கு தெரியும் என்றும், ஆனால் அந்தச் செய்திகள் பாவமன்னிப்புக் கூண்டில் அவர் இருக்கையில் அவரிடம் சொல்லப்பட்டவை என்பதனால் நீதிமன்றத்தில் அவற்றைச் சொல்லமுடியாது என்றும், தன் விதியை இறைவனிடம் ஒப்படைத்துவிடுவதாகவும் கூறினார்.
ஏறத்தாழ ஓராண்டுக்காலம் சிறையில் இருந்த பெனெடிக்ட் விடுதலையானபின் பொதுப்பார்வையில் இருந்து முழுமையாக மறைந்துபோனார். ஆதிரம்புழா என்னுமிடத்தில் இருந்த கத்தோலிக்க விடுதியில் முழுமையாகவே தனிமையில் அவர் வாழ்ந்தார். பெரும்பாலும் ஒரே அறைக்குள் வாழ்க்கையைச் செலவிட்டார். அவரை கேரளமும் மறந்தது.
ஆனால் முப்பத்துநான்கு ஆண்டுகளுக்குப் பின் 2000த்தில் கேரளத்தின் மங்களம் நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டது. மரியக்குட்டி வழக்கின் சாட்சியம் சொன்ன டாக்டரின் மகன்கள் கே.கே.செறியான், கே.கே.தாமஸ் ஆகிய இருவரும் அவர்களின் 93 வயதான அன்னையுடன் ஃபாதர் பெனெடிக்டை ஆதிரம்புழா ஆசிரமத்தில் சென்று சந்தித்து பாவமன்னிப்பு கோரினார்கள். அதை பொதுவெளியில் அறிவித்தனர். அடுத்த சில மாதங்களில், 2001ல், தன் எழுபத்தொன்றாம் வயதில் ஃபாதர் பெனெடிக்ட் மறைந்தார்.
மரியக்குட்டி இறந்தமைக்குக் காரணம் டாக்டர்தான். மரியக்குட்டி மைனத்தருவி எஸ்டேட் உரிமையாளருடன் உறவுகொண்டுதான் கருவுற்றிருந்தார். அந்தக் கருவை கலைக்க டாக்டரை எஸ்டேட் உரிமையாளர் கேட்டுக்கொண்டிருந்தார். கருவை கலைக்க மரியக்குட்டி ஒப்புக்கொள்ளவில்லை, அதைவைத்து அவள் பெனெடிக்ட் மற்றும் எஸ்டேட் உரிமையாளர் இருவரையும் மிரட்டிவந்தாள். டாக்டருடனான பூசலில் மரியக்குட்டி கொல்லப்பட்டாள். டாக்டர்தான் மரியக்குட்டியை பிடித்து தள்ளியபோது அவள் மல்லாந்து விழுந்து பின்மண்டையில் அடிபட்டது. அவள் உடலை இழுத்துவந்து கிணற்றருகே போட்ட டாக்டர் கொலையை திசைதிருப்ப பெனெடிக்டின் ஸ்டோலையும் அங்கே கொண்டு சென்று போட்டார்.
இச்செய்தியை குடிபோதையில் டாக்டர் சொல்லி அறிந்த டாக்டரின் மனைவி முன்னரே பெனெடிக்டிடம் பாவமன்னிப்பு கோரியிருந்தார். டாக்டர் மறைவுக்குப் பின், அவருடைய உயிலில் அவர் கேட்டுக் கொண்டிருந்தபடி வந்து டாக்டருக்காக மனைவியும் பிள்ளைகளும் பாவமன்னிப்பு கோரினார்கள். பின்னர் அவர்கள் ஆதாரங்களையும் வெளியிட்டனர். டாக்டரின் குடும்பத்தில் நிகழ்ந்த ஏராளமான இழப்புகள்தான் டாக்டரின் குற்றவுணர்ச்சியை தூண்டி வயதான காலத்தில் அவரை கடும் துயருக்கு ஆளாக்கின. ஆகவே அவர் தன் உயிலில் அந்த முடிவை உயிலில் அந்த கோரிக்கையை முன்வைத்தார்.
ஏறத்தாழ இதே போன்ற ஒரு கதையை டால்ஸ்டாய் எழுதியிருக்கிறார். God Sees the Truth, But Waits என்னும் கதை ஒரு குழந்தைக்கதையாகவேகூட பாடமாக உள்ளது. அரிதாக அத்தகைய நிகழ்வு நம் கண்முன்னால் நிகழவும் செய்கிறது. எளிமையான கேள்வி, கடவுள் என ஒன்று அல்லது ஒருவர் உண்டா? இருந்தால் அது அல்லது அவர் நீதிக்குப் பொறுப்பேற்றுக்கொள்கிறாரா?
ஒரு காட்டில் ஐந்து நிமிடம் நின்று செவிகூருங்கள். சாவுச்சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். உயிர்கள் உயிர்களை வேட்டையாடி தின்றுகொண்டே இருக்கின்றன. மிகச்சிறிய பறவைகள் கூட பலநூறு புழுக்களை ஒருநாளில் தின்கின்றன.புழுக்கள் என்றால் என்ன? அவை பூச்சிகளின் குழந்தைகள் அல்லவா? பறவைகளின் குஞ்சுகளையும் முட்டைகளையும் பாம்புகள் தின்கின்றன. பாம்புகளை மயில்கள் வேட்டையாடுகின்றன. எந்த நியாயம் காட்டில் திகழ்கிறது? எங்கே கருணை இருக்கிறது? அப்படியென்றால் மனிதனுக்கு மட்டுமேயான கடவுள் மனிதனுக்கு மட்டுமேயான நீதியை நிலைநாட்டிக்கொண்டு வானில் எங்கோ இருக்கிறார் என்றா நாம் நினைக்கிறோம்?
எப்போதுமே மனிதனின் துணுக்குறல் இதுதான், நாம் அறம் என நம்புவதை தெய்வம் நிறைவேற்றுவதில்லையா? ஒவ்வொரு கெடுநிகழ்வின்போதும் மனிதர்கள் மனம் உடைந்து கூச்சலிடுவதை பாத்துக்கொண்டே இருக்கிறோம். “கடவுளுக்கு கண்ணில்லையா? கடவுளே உனக்கு தர்ம்மம்னு ஒண்ணு இருக்கா இல்லியா?”. மனிதனின் தர்மநியாயங்களை மீறிய நிகழ்வுகளின்போது நாத்திகர்கள் “எங்கே உன் கடவுள்?” என்கிறார்கள். ஆத்திகர்கள் “எங்கே என் கடவுள்?’ என்று தவிக்கிறார்கள்.
தெய்வம் என்பதை “உலகெலாம் உணர்ந்தாலும் ஓதற்கு அரியது” என்றுதான் மரபு சொல்கிறது. அனைத்தையும் உணர்ந்தவர்களால்கூட புரிந்துகொள்ள முடியாத ஒன்றின் நெறியையும் அறத்தையும் நாம் நம் எளிய அன்றாடத்தில் வைத்துப் புரிந்துகொள்ள முடியுமா? ஆனால் நாம் அப்படி எதிர்பார்க்கிறோம். இங்கே நம் சொந்த இருப்பால் நாம் உருவாக்கிக்கொண்ட உலகில், நம் விருப்புவெறுப்புகளால் நாம் சமைத்துக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் வைத்து புரிந்துகொள்ளத்தக்க ஒரு தர்க்கமுறைக்குள் அடங்குவதாகத்தான் பிரபஞ்சமும், பிரபஞ்சம் கடந்ததுமாக இருக்கும் ஒன்று இருக்கவேண்டும் என எண்ணுகிறோம்.
நான் குரு நித்ய சைதன்ய யதியின் கீதை வகுப்பில் அமர்ந்திருக்கையில் அவர் கேட்டார். பகவத் கீதையில் கிருஷ்ணன் “சர்வதர்மாத் பரித்யஜ்ய” என்று ஏன் சொல்கிறார். அனைத்து தர்மங்களையும் ஏன் கைவிடச்சொல்கிறார்? அனைத்து அதர்மங்களையும் கைவிடச்சொல்வதுதானே நியாயம்? அறங்களை நாம் ஏன் கைவிடவேண்டும்?
பின் புன்னகையுடன் குரு சொன்னார். “ஏனென்றால் அங்கே சொல்லப்படுவது சரணாகதியைப் பற்றி. நாமறிந்த நமது சொந்த தர்மநியாயங்களைக் கைவிடுவதற்கு பெயர்தான் சரணாகதி”
மிகக் கடினமானது அது. நமக்குச் சொல்லப்பட்ட, நாம் நம்பும் தர்மங்களும் நெறிகளுமே இப்பிரபஞ்சம் என நாம் எண்ணுகிறோம். நாம் என்றும், உலகம் என்றும் நாம் எண்ணுவதெல்லாம் அந்த தர்மங்களைத்தான். நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும், கெட்டவர்களுக்கு தெய்வம் தண்டனை கொடுக்கும் எனத் தொடங்கி நாம் நம்பும் பலநூறு தர்மநம்பிக்கைகள் உண்டு. ஒவ்வொரு நாளும் நாம் நமக்கென உருவாக்கிக் கொண்ட பலநூறு அறங்களை நம்பி, அவற்றை பிரச்சாரம் செய்துகொண்டு வாழ்கிறோம்.
அந்நம்பிக்கைகள்தான் ஆணவம் என்பது. இப்பிரபஞ்சத்திலுள்ள எல்லாமே எனக்குப் புரியும்படி இருக்கவேண்டும் என ஒருவர் நினைப்பாரென்றால் அவரைவிட அறியாமையின் ஆணவம் கொண்டவர் எவர்? ஆனால் வாழ்க்கையில் பலசமயம் தெய்வம் என்ன செய்யவேண்டும் என்று நாம் சொல்ல ஆரம்பிக்கிறோம். எதைச் செய்தால் நாம் தெய்வத்தை ஏற்போம், எதைச் செய்யாவிட்டால் தெய்வத்தை நாம் நிராகரிப்போம் என தெய்வத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறோம். “கடவுளே இது மட்டும் நடக்காம இருந்தா அப்றம் உன்னை கையெடுத்து கும்பிடமாட்டேன்” என்கிறோம். பிரபஞ்சநெறிகள் நம்மை ஆள்கின்றன, நம் அறியாமையால் நம் நெறிகளுக்குள் பிரபஞ்சம் இயங்கவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
சரணாகதி என்பது இப்பிரபஞ்சத்தில் நம் இருப்பு எவ்வளவு சிறிது என உணர்வது. இந்த பூமியிலுள்ள மொத்த மணலில் ஒரே ஒரு மணல்துளிக்கு என்ன இடமுண்டோ அவ்வளவுதான் நமது பால்வழியில் பூமியின் இடம். இந்தப் பிரபஞ்சத்தில் நம் பால்வழி என்பது ஒரு துளி. இந்த துளியினும் துளியினும் துளித்தன்மையை உண்மையாகவே உணர்ந்து நம்மை முடிவின்மைகளுக்கு முன் முழுமையாக ஒப்படைப்பதே சரணாகதி. அதற்கு முதல்நெறி அறம், நெறி, நன்மை தீமை என நாம் கொண்டிருக்கும் எளிய தர்க்கங்களை முழுமையாகக் கைவிடுவதே.
ஃபாதர் பெனெடிடிக்டிடம் அவர் மறைவதற்கு சிலநாட்கள் முன் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “கடவுள் உங்களிடம் நீதி காட்டவில்லை என நினைக்கிறீர்களா?” அவர் பதில் சொன்னார். “நான் கருணையையோ நீதியையோ கடவுளிடம் கேட்பதில்லை, என்னை முழுமையாக ஒப்படைக்கிறேன். நான் மிகச்சிறியவன். அந்த சரணாகதியின் விடுதலையைத்தான் நான் அடைகிறேன்”










