அழைப்பதன் சிக்கல்கள்.

அன்புள்ள ஜெ,

வாழும்தமிழ் விழாவுக்கான அழைப்பாளர்களைப் பற்றி தொடர்ச்சியான கேள்விகள், குழப்பங்கள், விவாதங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னாரை அழைத்தோம், இன்னாரை அழைக்கவில்லை, இன்னார் இன்ன காரணத்தால் தவிர்க்கப்பட்டார் என நீங்கள் ஏன் அறிவிக்கக்கூடாது?

ராஜ்குமார் அருண்

அன்புள்ள ராஜ்குமார்,

அந்த வகையில் அறிவித்தால் அதன் விளைவாக எந்த வகையிலாவது விவாதம் குறையுமா? மாறாக அதையொட்டி விவாதம் மேலும் பெருகும்.

வாழும்தமிழ் இலக்கியவிழா பற்றிஏன் என்னை அழைக்கவில்லை?’ என்னும் விவாதம் நிகழ்வதே அதன் இடம் உருவாகிவிட்டமைக்கானச் சான்று. (ஏன் அவரை அழைக்கவில்லை என்பது ஏன் என்னை அழைக்கவில்லை என்பதன் மறுவடிவம் என்பது எவருக்குத் தெரியாது?)

நாங்கள் அழைத்தபோது நவீன இலக்கியத்தின் எல்லா தரப்பினருக்கும் இடமளித்தல், மொழியாக்கம் போன்ற இலக்கியச் செயல்பாட்டுக்கு இடமளித்தல், எல்லா தலைமுறையினருக்கும் இடமளித்தல்ஆகிய அளவுகோலை கொண்டிருந்தோம். தமிழிலக்கியத்தை மொழியாக்கம் செய்து இந்திய- உலகச்சூழலுக்குக் கொண்டுசெல்லும் வாய்ப்புள்ளவர்களுக்கே முதன்மை இடமளித்தோம்.

. அமெரிக்காவின் புதிய நிபந்தனையின்படி இதயநோய் மற்றும் தீவிர உடல்நலிவுள்ளவர்களுக்கு விஸா அளிக்கப்பட மாட்டாது. அவர்களுக்கு விஸா கேட்டால் வைப்புத்தொகை இழப்பாகும். ஆகவே அத்தகையவரகளை தவிர்த்தோம். முக்கியமான ஒருவரின் விஸா மறுக்கப்பட்டது இதயஅறுவை சிகிச்சை செய்துகொண்டவர் என்பது ஆவணப்படுத்தப்பட்டமையால்தான் என்பது எங்கள் ஐயம்.

. அழைக்கப்பட்டவர்களில் கணிசமானவர்களுக்கு விஸா கிடைக்கவில்லை. விஸாவுக்கு நாங்கள் கட்டிய வைப்புத்தொகை இழப்பு. ஆனால் வேறுவழியில்லை. விஸா அளிக்கப்படுவது ஏன், மறுக்கப்படுவது ஏன் என நம்மால் சொல்லவே முடியாது.

. எல்லா முக்கியமான படைப்பாளிகளையும் அழைக்கமுடியாது. அமர்வுகள் எண்ணிக்கைக்கு உட்பட்டவை. ஆகவே எஞ்சியவர்களை அடுத்த ஆண்டு லண்டன் நிகழ்வுக்கு அழைக்கலாம் என முடிவுசெய்தோம்.

. அழைக்கப்பட்டவர்களில் மூத்த படைப்பாளிகள் பலர் உடல்நிலை கருதி பயணத்தை தவிர்த்தனர். எங்கள்பட்ஜெட்காரணமாக துணைக்கு இன்னொருவருக்கும் பயணச்சீட்டு போடும் நிலையில் நாங்கள் இல்லை என்பதே முதன்மைக் காரணம்.

. இளம்படைப்பாளிகள் பலருக்கு அவர்களின் அலுவலக அனுமதி பெறுவது இயலவில்லை. பலர் தொடக்கத்திலேயே அதற்கு முயலப்போவதில்லை என்று சொல்லிவிட்டனர். சிலர் முயன்று அனுமதி கிடைக்கவில்லை என்றனர். இன்று பல வேலைநிறுவனங்கள் இதில் கொஞ்சம் கடினமான நிலைபாடு கொண்டுள்ளன. இன்று தொழில்துறையில் இத்தனை கடுமையான கெடுபிடிகள் உள்ளன என எனக்கு இதற்கு முன்பு தெரியாது. நான் பணியாற்றும் காலகட்டத்தில் இப்படி இல்லை. இனி வரும் நிகழ்ச்சிகளுக்கு குறைந்தது ஓராண்டு முன்னரே முயற்சிகளை எடுப்போம்.  

ஊ. கொள்கை அடிப்படையில் இதில் கலந்துகொள்ள முடியாது என இதுவரை எவரும் மறுக்கவில்லை- அப்படி மறுக்கக்கூடுபவர்கள் என நாங்கள் எண்ணுபவர்களை நாங்கள் அழைக்கவுமில்லை.

தனிப்பட்ட முறையில் நவீன இலக்கியத்தில் செயல்படுபவர்கள், வம்புவளர்ப்பதில் ஈடுபடாதவர்கள், எங்கள் செயல்பாடுகள் மேல் மதிப்பு கொண்டவர்கள் அனைவருமே எங்களுக்கு அணுக்கமானவர்களே, அவர்கள் அனைவரையும் முன்னிறுத்தவே முயல்கிறோம்.

ஜெ

முந்தைய கட்டுரைபங்கேற்பாளர் தேர்வின் நெறிகள்