அன்புள்ள ஜெமோ,
இந்த வாழும்தமிழ் இலக்கியவிழாவுக்கான பங்கேற்பாளர் பட்டியல் எப்படி இறுதி செய்யப்பட்டது? இது குழுமுடிவா? அல்லது தனிநபர் முடிவா? சிலர் புறக்கணிக்கப்பட்டார்கள் என்றெல்லாம் பேச்சு உள்ளது, ஆகவே இதைக் கேட்கிறேன். இதில் வெளிப்படைத்தன்மை தேவை என நீங்கள் நினைக்கவில்லையா?
மகா, சென்னை
அன்புள்ள மகா,
இது அரசு நிறுவனம் அல்ல. வரிப்பணம் இதில் செலவிடப்படவில்லை. ஆகவே வரிகட்டுவோர் அனைவரும் தெரிந்துகொள்ளும்படி எதையும் கட்டாயத்தில் நாங்கள் இல்லை.
இது நவீனத் தமிழிலக்கியம் சார்ந்த செயல்பாடு. நவீன இலக்கியத்துடன் தொடர்பு உடையவர்கள், வாசிப்பவர்கள் மட்டுமே இதில் அக்கறைகொள்ள முடியும். அவர்கள் எவருக்கும் தேர்வு எப்படி நிகழ்ந்துள்ளது என்பது பட்டியலைப் பார்த்தாலே தெரியும். பிறருக்கு புரியாது, சொல்லிப்புரியவைக்கவும் இயலாது.
நவீன இலக்கியத்தை மட்டும் முன்வைக்கும் அரங்கு இது. ஆகவே இது ‘அனைவருக்கும் இடமளிக்கும்’ மேடை அல்ல. இதில் ‘ஜனநாயகம்’ கிடையாது. இங்கே இலக்கியத்தில் பங்களிப்பு மட்டுமே கருத்தில்கொள்ளப்படும், அதனடிப்படையிலேயே பங்கேற்பாளர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.
எங்களை நாங்கள் பாரதி, புதுமைப்பித்தன், க.நா.சு, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் மரபில் வந்த தீவிர நவீன இலக்கியத்தின் பிரதிநிதிகளாகவே உலக அரங்கில் முன்வைக்கிறோம். அவர்களையே எங்கள் முகங்களாக காட்டவிருக்கிறோம். பங்கேற்பாளர் தெரிவு இந்த அடிப்படையிலேயே நிகழ்ந்துள்ளது.
இதற்கு அப்பாலும் பலர் தங்களுக்கான எழுத்துக்களை எழுதுகிறார்கள். கட்சிசார்ந்த எழுத்துக்கள் உள்ளன. மதம் சார்ந்த எழுத்துக்கள் உள்ளன. அவர்களுக்கான மேடைகளும் உள்ளன. அவற்றை எங்கள் முன்னோடிகளும் நாங்களும் நவீன இலக்கியம் என ஏற்பதில்லை. எங்களை அவர்களும் ஏற்றுக்கொள்வதில்லை.
இங்கே நாங்கள் எவ்வகையிலேனும் ஏற்கும் படைப்பாளிகளையே முன்வைக்கிறோம். இந்த நவீன இலக்கியக் களத்திற்குள் எல்லா அழகியல் தரப்பினருக்கும், எல்லா கருத்து தரப்பினருக்கும், எல்லா தலைமுறையினருக்கும் பிரதிநிதித்துவம் இருக்கும்படி கவனித்துக் கொண்டிருக்கிறோம்.
ஜெ










